Saturday, November 21, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு - பாகம் 1



லைலத்துல் கத்ர் – மகத்துவமிக்க இரவு எப்போது வரும்?

ரமளான் முடிந்து விட்டது. ஷவ்வால், ஃதுல் கஃதா, ஃதுல் ஹஜ் என்று மாதங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.

லைலத்துல் கத்ரைத் – மகத்துவமிக்க இரவு – தேடி ரமளான் மாதத்திலே ஒவ்வொரு காலக் கட்டத்தில் முயற்சி செய்தவர்கள் ஏராளம்.

சிலர் ரமளான் மாதம் முழுவதும் முயற்சித்தார்கள். சிலர் முதற் பத்திலும், இன்னும் சிலர் நடுப் பத்திலும், மற்றும் சிலர் கடைசிப் பத்திலும் முயற்சித்தார்கள். மேலும் சிலர் கடைசிப் பத்தில் ஒற்றைப்படவுள்ள நாட்களில் முயற்சித்தார்கள்.

பலர் 27ம் இரவுதான் லைலத்துல் கத்ர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லி அந்த இரவைக் கொண்டாடினார்கள். அந்த 27ம் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என்று ஃபத்வா கொடுத்த உலமாக்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்!

இப்படிப் பல கருத்துக்கள் மத்தியிலும் அந்த இரவைப் பற்றி அக்கரையில்லாமல் இருந்து விட்டு ஐயகோ! என்று கைசேதப் படுபவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

இவர்கள் அடுத்த ரமளான் வரும்வரை இருக்க வேண்டுமே என்று புலம்பக் கூடியவர்களாக இருப்பதைப் பார்த்து இப்படிப்பட்டவர்கள் மீது பச்சாதப்பட்டு பெரியோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்!

இப்படி வழிகாட்டுவதில் முன்னின்று போதித்திருப்பவர் யார் தெரியுமா? அவர்தான்:
ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு)

இன்று பள்ளி பள்ளியாக ஒவ்வொரு நாளும் வாரிக்கப்படும் ‘அமல்களின் சிறப்புகள்’ என்ற தஃலீம் கிதாபு (புத்தகம் என்று தமிழ் மொழிப்படுத்துவது மரியாதைக் குறைவு என்று அதை வாசிக்கக் கூடிய, அதற்கு கண்ணியம் கொடுக்கக் கூடிய சகோதரர்கள் எண்ணுவதால் ‘கிதாபு’ என்றே குறிப்பிடுகின்றேன்!) பற்றி அனைவரும் அறிவீர் என்று நினைக்கின்றேன்.

கிதாபுகள் (புத்தகங்கள்) பற்றிப் பேசும் போது அந்தக் கிதாபின் விபரங்கள் முடியுமான அளவுக்கு முன்வைக்கப்படுவது நியாயமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். எனவே, அதன் விபரம் வருமாறு:
புத்தகத்தின் பெயர்:   அமல்களின் சிறப்புகள்
ஆசிரியர்: ஷைகு ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு)
பதிப்பகம், வெளியீட்டாளர், அச்சிட்ட வருடம் போன்ற மற்றைய விபரங்கள் இல்லை.
               
அந்தக் கிதாபின் 372ம் பக்கத்தில் ‘லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டது’ என்ற தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்தால் ரமளானில் லைலத்துல் கத்ருக்காக முயற்சிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அந்தப் பகுதியை கீழே மேற்கோள் குறிக்குள் வாசித்துப் பாருங்கள்.
‘ஷைகுல் ஆரிபின் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: “ஆண்டு முழுவதிலும் லைலத்துல் கத்ரு மாறி மாறி வருகிறது என்பதுதான் என்னிடம் மிகச் சரியான சொல்லாகும். ஏனெனில், நான் இரண்டு தடவை ஷஃபான் மாதத்தில் அதனைக் கண்டிருக்கிறேன். ஒரு தடவை பிறை பதினைந்தில், மற்றொரு தடவை பிறை பத்தொன்பதில், இன்னும் இரண்டு தடவை ரமலான் மாதத்தின் நடுப்பத்தில் பிறை பதின்மூன்றிலும், பிறை பதினெட்டிலும் கண்டிருக்கிறேன். இன்னும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான எல்லா இரவுகளிலும் கண்டிருக்கிறேன். ஆகையால் லைலத்துல் கத்ரு ஆண்டு முழுவதிலுமுள்ள இரவுகளின் சுற்றிச் சுற்றி வருகிறது என்பதுதான் என்னிடம் உறுதியான சொல்லாகும். ஆனால், ரமலான் மாதத்தில் அது அதிகமாகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்கள்.

ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: “லைலத்துல் கத்ரு ஆண்டில் இரண்டு தடவை ஏற்படுகிறது. முதலாவது எந்த இரவில் அல்லாஹுதஆலாவுடைய சட்டங்கள் பூமிக்கு இறங்குகின்றனவோ அந்த இரவாகும். இன்னும் அதே இரவில்தான் குர்ஆன் ஷரீப் லவ்ஹுல் மஹ்பூஃல் பலகையிலிருந்து உலகிற்கு இறங்கியது. அவ்விரவு ரமலான் மாதத்தில் மட்டும் வருவதில்லை. ஆண்டு முழுவதிலும் மாறி மாறிச் சுற்றி வருகிறது. ஆனால், எந்த ஆண்டில் குர்ஆன் ஷரீப் உலகிற்கு இறங்கியதோ அந்த ஆண்டு ரமலான் மாத்தில் அது வந்தது. மேலும், ரமலான் மாத்த்தில்தான் அது அதிகமாக ஏற்படுகிறது.”


ஆகவே, ரமளான் மாத்திலே லைலத்துல் கத்ருக்காக முயற்சி செய்யாதவர்கள் இப்போது கவலைப்படத் தேவையில்லைதானே!!!

கவலைப்படத் தேவையில்லாதது மட்டுமல்ல, அவர்கள் எமது பள்ளி நிருவாகிகளுக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளார்கள்! இந்தப் புத்தகத்தை – மன்னிக்கவும், கிதாபை – பள்ளிகளிலே வாசிக்க ஏற்பாடு செய்திருக்கின்றமைக்காக! இல்லாவிட்டால், இந்தப் பெரும் பாக்கியங்களை இழந்திருப்போமே!

 நம் முன்னோர்கள், அவர்களின் முன்னோர்கள், தப்உத் தாபியீங்கள், தாபியீன்கள், ஸஹாபாக்கள், ஏன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட காட்டித்தராத ஒரு மகத்துவமிக்க இரவை ஷைகும் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்! இந்த விபரத்தை ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்கள் இந்தப் ‘புனித மிகு’ கிதாபில் பதித்துள்ளார்கள்!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அந்த மகத்துவமிக்க இரவு சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாமல் போனாலும் இந்தப் பெரியார்கள் மூலம் அந்த இரவை அல்லாஹ் காட்டித் தந்து விட்டான்! அவன் மகா கிருபையாளன். அவனுடைய இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அறியத்தர மறந்து போன (நவூதுபில்லாஹ்) ஒரு விடயத்தை அவனுடைய இந்த இரு ஷைகுகள் ஊடாக அறியத்தந்து விட்டான்!

ஒருவேளை, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் மறந்து விட்டார்கள், அதனால் இந்த ஷைகுமாரகள் மூலமாக அறிவித்து அவனுடைய தூதரைக் காப்பாற்றியிருக்கவும் கூடுமோ? (நவூதுபில்லாஹ்)

அதன் முழு விபரமும் ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப், மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

அல்லாஹ்வின் விசுவாசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்பதை உணர வேண்டும். கொஞ்சம் கண்ணிமைத்தால் அல்லாஹ்வின் பெயரை வைத்தே வழிகெடுத்து விட எத்தனை ஷைகுகள், எத்தனை பெரியார்கள் கிளம்பியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டை முஸ்லிம்கள் சிந்தித்து உணர வேண்டும்.

கண்மூடித்தனமாக இருப்பதனால்தான் இப்படிப்பட்ட சல்மான் ருஷ்திகள் இன்று பள்ளிகளிலே முன்வரிசைகளிலே வலம் வருகிறார்கள்! நிருவாக சபைகளிலே இந்த சல்மான் ருஷ்திகள்தான் தலைவர்கள், செய்லாளர்கள், தனாதிகாரிகள், அங்கத்தவர்கள்.

முஸ்லிம்கள் ஏன் என்று அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரபிப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருப்பதனால்தான்! இஸ்லாமிய நம்பிக்கை (அகீதா) இல்லை; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே குறை காண்கிறார்கள்! இனி எப்படி கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்!?
ஷைகும் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோருக்குத் தெரிந்த லைலத்துல் கத்ர், உலகத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்டதாக அல்லாஹ் அறிவித்த அந்த அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியவில்லை! அல்லாஹ்வும் சொல்லிக் கொடுக்கவில்லை! அப்படிச் சொல்லிக் கொடுத்திருந்தால் இந்த இரு ஷைகுகளையும் உருவாக்க அல்லாஹ்வுக்கு வேறு காரணம் தேட வேண்டி வந்திருக்குமே! (நவூதுபில்லாஹ்)

இந்தக் கிதாபுதான் இன்று பள்ளிகளிலே மக்களுக்கு மார்க்கமாகச் சொல்லிக் கொக்க அனுமதியளிக்கப்பட்ட கிதாபு! அரபுக் கலாசாலைகளிலே பாடம் சொல்லிக் கொடுத்துப் பின்பற்றத் தகுதியான கிதாபு! வீடுவீடாக அன்று முஹியித்தீன் மாலை வாசித்தது போல் தினந்தோறும் வாசிப்பதற்கு ஊக்கமளிக்கப்படும் கிதாபு!

மார்க்கமாக ‘ஹலால்’ ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ள கிதாபு இதுவே!

லைலத்துல் கத்ர் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகரை வரை இருக்கும்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்கத்ர் – 97:1-5)

லைலத்துல் கத்ர் பற்றி அல்லாஹ் அவனுடைய வேதத்தில் சொல்லிக் காட்டினான். அதன் மகத்துவத்தைப் பற்றி விளக்கினான். ஆனால், அந்த இரவு எந்த இரவு என்பதை அவன் குறிப்பிடவில்லை.

அந்த இரவு எப்போது வரும் என்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதற்கான ஆதாரங்களை சற்றுப் பார்ப்போம்.

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விடயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன்! ஆகவே, அதைத் தேடுபவர், (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

மற்றுமொரு ஹதீஸ் கடைசிப்பத்தில் அந்த இரவைத் தேடும்படி சொல்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத தேடுங்கள்,” எனக் கூறுவார்கள்.
 (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. நூல்: புகாரி)

உபாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின்படி ரமளானின் கடைசிப்பத்தின் ஒற்றைப்பட உள்ள இரவுகளில் தேடும்படி கூறப்பட்டுள்ளது. இதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அறிவித்துள்ளாரகள்.
“ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்,” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)

இப்படி லைலத்துல் கத்ர் பற்றிய ஆதாரபூர்வமான அறிவிப்புகள் இன்னும் பல இருக்கின்றன. அவை அனைத்திலுமே லைலத்துல் கத்ரை ரமளானில்தான் தேட வேண்டும் என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க, மேற்குறிப்பிட்ட கிதாபில் அது வேறு மாதங்களிலும் வரும். அப்படி வந்து அதை அடைந்திருக்கிறேன் என்று குறிப்பிடுவது இந்த ஹதீஸ்களை மறுப்பதாகும்.

அல்லாஹ் தன் திருக்குர் ஆனிலே விடுத்திருக்கும் சவாலை இவர்கள் நடைமுறைப் படுத்துவதற்குச் சிறிது சிறிதாக வழி அமைக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒன்றா இரண்டா, இப்படிப்பட்ட எத்தனையோ கப்ஸாக்களை எடுத்து விட்டிருக்கிறார்கள்.

ஹதீஸ்களுக்கு முரணான கதைகளைக் கட்டி ஷைகுகளை முன்வைத்து இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் பித்ஆக்களை உருவாக்கி எதிர்காலத்திலே குர்ஆனையே மாற்றிவிட இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் இவற்றின் முன்னறிவிப்பாக இருக்குமோ என்று எண்ணுவதும், அது அப்படித்தான் என்று சொல்வதும் பிழையல்ல.

ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து முதலில் முஸ்லிம்களைத் தூரப்படுத்த வேண்டும்; அப்படியானால்தான், குர்ஆனிலே கைவைக்க முடியும் இவர்கள் நினைக்கிறார்கள்! நீண்ட காலமாக இந்தக் கிதாபு மக்களிடையே தனது விளையாட்டைக் காட்டியிருக்கிறது! இதன் தாக்கத்திற்கு மத்தியிலேதான் இன்று குர் ஆனின் சில தேர்வு செய்யப்பட்ட ஸூராக்களோடு மேலும் பல புதிதாக உண்டாக்கப்பட்ட துஆக்களோடு கூடிய ‘மன்ஸில்’கள் வந்து கொண்டிருக்கின்றன.

எவ்வாறு மஃத்ஹபுடைய இமாம்கள் மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அவ்விமாம்களின் பெயரால் இட்டுக்கட்டி முஸ்லிம்களை வழிகெடுத்தார்களோ அவ்வாறே இன்று முஸ்லிம்கள் வழிகெடுக்கப் படுகிறார்கள்.

ஆகவே, இன்று முஸ்லிம்கள் விழிப்பாயிருக்க வேண்டும். நற்செயல்கள் என்ற போர்வையில்தான் நம்மைக் கெடுக்க ஷைத்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய பெரும் பங்குதாரர்கள்தான் யஹூதி, நஸாராக்கள். அவர்களின் கைப்பிடிக்குள்ளாகி விடாமலிருக்க நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புபவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்,” என்று கூறுவீராக!
(அல்-குர் ஆன்: ஸூரா அத்தவ்பா – 9:23-24)
எச்சரிக்கை மிகக் கடுமையானது. அல்லாஹ்வை விட, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட இந்தக் கிதாபுக்கும் இதை எழுதிய ஹஜ்ரத்ஜீக்களுக்கும் முதலிடம் கொடுப்பவர்களே! கவனம்! அல்லாஹ் மிகக் கடுமையாகத் தண்டிப்பவன்!

இப்படிப்பட்ட மனித, ஜின் ஷைத்தான்களிடமிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!
 

குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment