Saturday, November 21, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு - பாகம் 1



லைலத்துல் கத்ர் – மகத்துவமிக்க இரவு எப்போது வரும்?

ரமளான் முடிந்து விட்டது. ஷவ்வால், ஃதுல் கஃதா, ஃதுல் ஹஜ் என்று மாதங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.

லைலத்துல் கத்ரைத் – மகத்துவமிக்க இரவு – தேடி ரமளான் மாதத்திலே ஒவ்வொரு காலக் கட்டத்தில் முயற்சி செய்தவர்கள் ஏராளம்.

சிலர் ரமளான் மாதம் முழுவதும் முயற்சித்தார்கள். சிலர் முதற் பத்திலும், இன்னும் சிலர் நடுப் பத்திலும், மற்றும் சிலர் கடைசிப் பத்திலும் முயற்சித்தார்கள். மேலும் சிலர் கடைசிப் பத்தில் ஒற்றைப்படவுள்ள நாட்களில் முயற்சித்தார்கள்.

பலர் 27ம் இரவுதான் லைலத்துல் கத்ர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லி அந்த இரவைக் கொண்டாடினார்கள். அந்த 27ம் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என்று ஃபத்வா கொடுத்த உலமாக்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்!

இப்படிப் பல கருத்துக்கள் மத்தியிலும் அந்த இரவைப் பற்றி அக்கரையில்லாமல் இருந்து விட்டு ஐயகோ! என்று கைசேதப் படுபவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

இவர்கள் அடுத்த ரமளான் வரும்வரை இருக்க வேண்டுமே என்று புலம்பக் கூடியவர்களாக இருப்பதைப் பார்த்து இப்படிப்பட்டவர்கள் மீது பச்சாதப்பட்டு பெரியோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்!

இப்படி வழிகாட்டுவதில் முன்னின்று போதித்திருப்பவர் யார் தெரியுமா? அவர்தான்:
ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு)

இன்று பள்ளி பள்ளியாக ஒவ்வொரு நாளும் வாரிக்கப்படும் ‘அமல்களின் சிறப்புகள்’ என்ற தஃலீம் கிதாபு (புத்தகம் என்று தமிழ் மொழிப்படுத்துவது மரியாதைக் குறைவு என்று அதை வாசிக்கக் கூடிய, அதற்கு கண்ணியம் கொடுக்கக் கூடிய சகோதரர்கள் எண்ணுவதால் ‘கிதாபு’ என்றே குறிப்பிடுகின்றேன்!) பற்றி அனைவரும் அறிவீர் என்று நினைக்கின்றேன்.

கிதாபுகள் (புத்தகங்கள்) பற்றிப் பேசும் போது அந்தக் கிதாபின் விபரங்கள் முடியுமான அளவுக்கு முன்வைக்கப்படுவது நியாயமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். எனவே, அதன் விபரம் வருமாறு:
புத்தகத்தின் பெயர்:   அமல்களின் சிறப்புகள்
ஆசிரியர்: ஷைகு ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு)
பதிப்பகம், வெளியீட்டாளர், அச்சிட்ட வருடம் போன்ற மற்றைய விபரங்கள் இல்லை.
               
அந்தக் கிதாபின் 372ம் பக்கத்தில் ‘லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டது’ என்ற தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்தால் ரமளானில் லைலத்துல் கத்ருக்காக முயற்சிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அந்தப் பகுதியை கீழே மேற்கோள் குறிக்குள் வாசித்துப் பாருங்கள்.
‘ஷைகுல் ஆரிபின் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: “ஆண்டு முழுவதிலும் லைலத்துல் கத்ரு மாறி மாறி வருகிறது என்பதுதான் என்னிடம் மிகச் சரியான சொல்லாகும். ஏனெனில், நான் இரண்டு தடவை ஷஃபான் மாதத்தில் அதனைக் கண்டிருக்கிறேன். ஒரு தடவை பிறை பதினைந்தில், மற்றொரு தடவை பிறை பத்தொன்பதில், இன்னும் இரண்டு தடவை ரமலான் மாதத்தின் நடுப்பத்தில் பிறை பதின்மூன்றிலும், பிறை பதினெட்டிலும் கண்டிருக்கிறேன். இன்னும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான எல்லா இரவுகளிலும் கண்டிருக்கிறேன். ஆகையால் லைலத்துல் கத்ரு ஆண்டு முழுவதிலுமுள்ள இரவுகளின் சுற்றிச் சுற்றி வருகிறது என்பதுதான் என்னிடம் உறுதியான சொல்லாகும். ஆனால், ரமலான் மாதத்தில் அது அதிகமாகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்கள்.

ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: “லைலத்துல் கத்ரு ஆண்டில் இரண்டு தடவை ஏற்படுகிறது. முதலாவது எந்த இரவில் அல்லாஹுதஆலாவுடைய சட்டங்கள் பூமிக்கு இறங்குகின்றனவோ அந்த இரவாகும். இன்னும் அதே இரவில்தான் குர்ஆன் ஷரீப் லவ்ஹுல் மஹ்பூஃல் பலகையிலிருந்து உலகிற்கு இறங்கியது. அவ்விரவு ரமலான் மாதத்தில் மட்டும் வருவதில்லை. ஆண்டு முழுவதிலும் மாறி மாறிச் சுற்றி வருகிறது. ஆனால், எந்த ஆண்டில் குர்ஆன் ஷரீப் உலகிற்கு இறங்கியதோ அந்த ஆண்டு ரமலான் மாத்தில் அது வந்தது. மேலும், ரமலான் மாத்த்தில்தான் அது அதிகமாக ஏற்படுகிறது.”


ஆகவே, ரமளான் மாத்திலே லைலத்துல் கத்ருக்காக முயற்சி செய்யாதவர்கள் இப்போது கவலைப்படத் தேவையில்லைதானே!!!

கவலைப்படத் தேவையில்லாதது மட்டுமல்ல, அவர்கள் எமது பள்ளி நிருவாகிகளுக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளார்கள்! இந்தப் புத்தகத்தை – மன்னிக்கவும், கிதாபை – பள்ளிகளிலே வாசிக்க ஏற்பாடு செய்திருக்கின்றமைக்காக! இல்லாவிட்டால், இந்தப் பெரும் பாக்கியங்களை இழந்திருப்போமே!

 நம் முன்னோர்கள், அவர்களின் முன்னோர்கள், தப்உத் தாபியீங்கள், தாபியீன்கள், ஸஹாபாக்கள், ஏன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட காட்டித்தராத ஒரு மகத்துவமிக்க இரவை ஷைகும் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்! இந்த விபரத்தை ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்கள் இந்தப் ‘புனித மிகு’ கிதாபில் பதித்துள்ளார்கள்!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அந்த மகத்துவமிக்க இரவு சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாமல் போனாலும் இந்தப் பெரியார்கள் மூலம் அந்த இரவை அல்லாஹ் காட்டித் தந்து விட்டான்! அவன் மகா கிருபையாளன். அவனுடைய இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அறியத்தர மறந்து போன (நவூதுபில்லாஹ்) ஒரு விடயத்தை அவனுடைய இந்த இரு ஷைகுகள் ஊடாக அறியத்தந்து விட்டான்!

ஒருவேளை, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் மறந்து விட்டார்கள், அதனால் இந்த ஷைகுமாரகள் மூலமாக அறிவித்து அவனுடைய தூதரைக் காப்பாற்றியிருக்கவும் கூடுமோ? (நவூதுபில்லாஹ்)

அதன் முழு விபரமும் ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப், மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

அல்லாஹ்வின் விசுவாசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்பதை உணர வேண்டும். கொஞ்சம் கண்ணிமைத்தால் அல்லாஹ்வின் பெயரை வைத்தே வழிகெடுத்து விட எத்தனை ஷைகுகள், எத்தனை பெரியார்கள் கிளம்பியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டை முஸ்லிம்கள் சிந்தித்து உணர வேண்டும்.

கண்மூடித்தனமாக இருப்பதனால்தான் இப்படிப்பட்ட சல்மான் ருஷ்திகள் இன்று பள்ளிகளிலே முன்வரிசைகளிலே வலம் வருகிறார்கள்! நிருவாக சபைகளிலே இந்த சல்மான் ருஷ்திகள்தான் தலைவர்கள், செய்லாளர்கள், தனாதிகாரிகள், அங்கத்தவர்கள்.

முஸ்லிம்கள் ஏன் என்று அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரபிப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருப்பதனால்தான்! இஸ்லாமிய நம்பிக்கை (அகீதா) இல்லை; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே குறை காண்கிறார்கள்! இனி எப்படி கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்!?
ஷைகும் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னுல் அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோருக்குத் தெரிந்த லைலத்துல் கத்ர், உலகத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்டதாக அல்லாஹ் அறிவித்த அந்த அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியவில்லை! அல்லாஹ்வும் சொல்லிக் கொடுக்கவில்லை! அப்படிச் சொல்லிக் கொடுத்திருந்தால் இந்த இரு ஷைகுகளையும் உருவாக்க அல்லாஹ்வுக்கு வேறு காரணம் தேட வேண்டி வந்திருக்குமே! (நவூதுபில்லாஹ்)

இந்தக் கிதாபுதான் இன்று பள்ளிகளிலே மக்களுக்கு மார்க்கமாகச் சொல்லிக் கொக்க அனுமதியளிக்கப்பட்ட கிதாபு! அரபுக் கலாசாலைகளிலே பாடம் சொல்லிக் கொடுத்துப் பின்பற்றத் தகுதியான கிதாபு! வீடுவீடாக அன்று முஹியித்தீன் மாலை வாசித்தது போல் தினந்தோறும் வாசிப்பதற்கு ஊக்கமளிக்கப்படும் கிதாபு!

மார்க்கமாக ‘ஹலால்’ ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ள கிதாபு இதுவே!

லைலத்துல் கத்ர் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகரை வரை இருக்கும்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்கத்ர் – 97:1-5)

லைலத்துல் கத்ர் பற்றி அல்லாஹ் அவனுடைய வேதத்தில் சொல்லிக் காட்டினான். அதன் மகத்துவத்தைப் பற்றி விளக்கினான். ஆனால், அந்த இரவு எந்த இரவு என்பதை அவன் குறிப்பிடவில்லை.

அந்த இரவு எப்போது வரும் என்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதற்கான ஆதாரங்களை சற்றுப் பார்ப்போம்.

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விடயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன்! ஆகவே, அதைத் தேடுபவர், (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

மற்றுமொரு ஹதீஸ் கடைசிப்பத்தில் அந்த இரவைத் தேடும்படி சொல்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத தேடுங்கள்,” எனக் கூறுவார்கள்.
 (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. நூல்: புகாரி)

உபாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின்படி ரமளானின் கடைசிப்பத்தின் ஒற்றைப்பட உள்ள இரவுகளில் தேடும்படி கூறப்பட்டுள்ளது. இதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அறிவித்துள்ளாரகள்.
“ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்,” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)

இப்படி லைலத்துல் கத்ர் பற்றிய ஆதாரபூர்வமான அறிவிப்புகள் இன்னும் பல இருக்கின்றன. அவை அனைத்திலுமே லைலத்துல் கத்ரை ரமளானில்தான் தேட வேண்டும் என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க, மேற்குறிப்பிட்ட கிதாபில் அது வேறு மாதங்களிலும் வரும். அப்படி வந்து அதை அடைந்திருக்கிறேன் என்று குறிப்பிடுவது இந்த ஹதீஸ்களை மறுப்பதாகும்.

அல்லாஹ் தன் திருக்குர் ஆனிலே விடுத்திருக்கும் சவாலை இவர்கள் நடைமுறைப் படுத்துவதற்குச் சிறிது சிறிதாக வழி அமைக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒன்றா இரண்டா, இப்படிப்பட்ட எத்தனையோ கப்ஸாக்களை எடுத்து விட்டிருக்கிறார்கள்.

ஹதீஸ்களுக்கு முரணான கதைகளைக் கட்டி ஷைகுகளை முன்வைத்து இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் பித்ஆக்களை உருவாக்கி எதிர்காலத்திலே குர்ஆனையே மாற்றிவிட இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் இவற்றின் முன்னறிவிப்பாக இருக்குமோ என்று எண்ணுவதும், அது அப்படித்தான் என்று சொல்வதும் பிழையல்ல.

ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து முதலில் முஸ்லிம்களைத் தூரப்படுத்த வேண்டும்; அப்படியானால்தான், குர்ஆனிலே கைவைக்க முடியும் இவர்கள் நினைக்கிறார்கள்! நீண்ட காலமாக இந்தக் கிதாபு மக்களிடையே தனது விளையாட்டைக் காட்டியிருக்கிறது! இதன் தாக்கத்திற்கு மத்தியிலேதான் இன்று குர் ஆனின் சில தேர்வு செய்யப்பட்ட ஸூராக்களோடு மேலும் பல புதிதாக உண்டாக்கப்பட்ட துஆக்களோடு கூடிய ‘மன்ஸில்’கள் வந்து கொண்டிருக்கின்றன.

எவ்வாறு மஃத்ஹபுடைய இமாம்கள் மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அவ்விமாம்களின் பெயரால் இட்டுக்கட்டி முஸ்லிம்களை வழிகெடுத்தார்களோ அவ்வாறே இன்று முஸ்லிம்கள் வழிகெடுக்கப் படுகிறார்கள்.

ஆகவே, இன்று முஸ்லிம்கள் விழிப்பாயிருக்க வேண்டும். நற்செயல்கள் என்ற போர்வையில்தான் நம்மைக் கெடுக்க ஷைத்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய பெரும் பங்குதாரர்கள்தான் யஹூதி, நஸாராக்கள். அவர்களின் கைப்பிடிக்குள்ளாகி விடாமலிருக்க நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புபவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்,” என்று கூறுவீராக!
(அல்-குர் ஆன்: ஸூரா அத்தவ்பா – 9:23-24)
எச்சரிக்கை மிகக் கடுமையானது. அல்லாஹ்வை விட, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட இந்தக் கிதாபுக்கும் இதை எழுதிய ஹஜ்ரத்ஜீக்களுக்கும் முதலிடம் கொடுப்பவர்களே! கவனம்! அல்லாஹ் மிகக் கடுமையாகத் தண்டிப்பவன்!

இப்படிப்பட்ட மனித, ஜின் ஷைத்தான்களிடமிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!
 

குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

Thursday, November 19, 2009

வட்டி!

வட்டி என்ற சொல் இன்று உலகெங்கும் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு சொல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

வட்டிக்கு வரைவிலக்கணம் கூறுபவர்கள் தத்தமக்கு வசதி மாதிரி அதைச் செய்து கொள்கிறார்கள்.

ஒருவன் இன்னொருவனுக்குக் கடனுக்குக் கொடுக்கும் ஒரு தொகைக்கு மேலதிகமாகப் பெற்றுக் கொள்ளும் தொகை வட்டி என்று சொல்லப்படும். இங்கு தொகை என்பது பணம் மட்டுமல்ல அது ஒரு பெறுமதியான பொருளாகவும் இருக்கலாம்.

மனிதன் தோன்றிய காலத்தின் பின்னர் அவன் பரவலாக பரவலாக அவன் மற்ற மனிதர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்தான். ஆரம்பத்தில் பண்டமாற்று முறையில் அவன் தனது தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொண்டான்.

நாளாக நாளாக அவன் அதற்குப் பதிலாக நாணய மாற்று முறையை ஏற்படுத்திக் கொண்டான். காலப்போக்கில் இன்று உலகம் முழுவதும் பல நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அதே வேளையில் கடன்பத்திரங்கள் (Credit Cards) என்ற பெயரில் வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கடன்பத்திரத்தின் மூலம் பொருட்களை வாங்கக்கூடிய ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் வந்து விட்டன.

வட்டி சர்வசாதாரணமாக எல்லாராலும் பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வட்டியின் நிலைப்பாடு மனித சமூகத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பது பற்றி ஆண்டாண்டு காலமாக ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

எது எப்படியிருப்பினும் வட்டி சம்பந்தமாக படைப்பாளனாகிய அல்லாஹ் என்ன சொல்கிறானோ அதுதான் அதன் அர்த்தமாகவும் இருக்கும். அவன் வட்டி சம்பந்தமாக என்ன கட்டளையிட்டிருக்கின்றானோ அதுதான் பின்பற்றப்பட வேண்டியதாகும். எனவே, அவன் வட்டி பற்றி என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே,” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:275)

வட்டி எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பது இவ்வசனதின் மூலம் தெளிவு படுத்தப்பட்டு கடுமையாக எச்சரிக்கப் பட்டுள்ளது. வேறு விளக்கங்கள் தேவையில்லாத அளவிற்கு அதன் பாரதூரம் விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:276-277)

வட்டியை அனுபவிப்பவன் நன்றி கெட்டவன் என்று இறைவனால் இனம் காணப் பட்டுள்ளதைச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். வட்டியில் இருப்பவனின் சொத்துக்கள் அழிவை நோக்கிச் செல்லும் அதே வேளையில் தர்மங்களைச் செய்யக் கூடியவனின் சொத்துக்கள் வளர்ச்சியடையும் என்பதையும் குறிப்பிட்டு நம்பிக்கையாளனின் பண்புகளையும் அவன் தெளிவு படுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:280)

வர வேண்டிய வட்டியை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக விட்டு விடும்படி நம்பிக்கையாளர்களை விழித்து அல்லாஹ் வேண்டுகோள் விடுக்கின்றான்; நம்பிக்கை கொண்டிருந்தால் என்ற சொற்பிரயோகத்தின் மூலம் அவன் தெளிவு படுத்துவது வட்டி வாங்குபவன் நம்பிக்கை கொண்டவனல்ல என்பதே! நவூதுபில்லாஹ்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா – 2:279)

மிகப் பாரதூரமான எச்சரிக்கை! உடனடியாகவே வட்டிக்கு விட்டிருக்கும் மூலதனங்களை வட்டியில்லாமலாக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

வட்டி பல பெயர்களில் இன்று சமூகத்திலே உலா வருகிறது. இஸ்லாமிய வங்கிகள் என்ற அடை மொழிக்குள் ஹலால் ஃபத்வா பெற்று சமூகத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறது. நாமாக முயற்சிக்காமல் தீமைகள் நம்மை விட்டு விலகா!

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா ஆலு இம்ரான் – 3:130)

மீண்டும் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து வட்டியை உண்ண வேண்டாம் என்று சொல்லி அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று எச்சரிப்பதோடு நின்று விடாமல் அப்படி வட்டி உண்ணாதவர்கள் அதன் காரணமாக வெற்றி பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தையும் தருகிறான். இந்தப் பெரும் பாக்கியத்தை ஏனோ நம்மில் பலர் சிந்திக்கிறார்களில்லை.

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், வட்டியை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப் பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும், அவர்களின் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்-குர்ஆன்: ஸூரா அன்னிஸா – 4:160-162)

வட்டியைச் சாப்பிடுபவர்கள் அல்லாஹ்வை மறுப்பவர்கள் என்பதை அடித்துச் சொல்கின்றான். ஆகவே, வட்டி என்பது அல்லாஹ்வை மறுக்கும் ஒரு காரியமாக இருப்பதனை மிகவும் உன்னிப்பாகச் சிந்தித்து அதிலிருந்து நாம் கட்டாயம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அர்ரூம் – 30:39)

வட்டியைத் தடுக்கும் எந்த ஒரு வசனத்தை எடுத்தாலும் அங்கே வட்டிக்குக் கொடுத்து செல்வத்தைப் பெருக்குவது செல்வத்தை அழித்துவிடக் கூடியது என்று சொல்வதோடு வெற்றிக்கு வழியாக தர்மமாக, ஸகாத்தாகக் கொடுத்து வெற்றி பெருமாறு அழைப்பு விடுக்கிறான். நிச்சயமாக, அவனே அழிப்பவன், அவனே பெருக்குபவன்!

வட்டியின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு திருந்தினாலல்லாது சொர்க்கம் நம்மை விட்டுத் தூரமாகிவிடும். அல்லாஹ் நம்மனைவரையும் இந்தக் கொடிய பாவத்திலிருந்து காப்பாற்றுவானாக!




குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

உண்மையை நிலை நிறுத்துவோம்!


 

உண்மை என்ற சொல் இன்று உலகத்தில் எல்லா மொழிகளிலும் அதிகமாக அடிக்கடி பேசப்பட்டு அதிர்வுகளைச் சந்தித்து விரிசல் கண்டுவிட்ட ஒரு சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது.
                                                                
எந்த ஒரு மனிதனை எடுத்துக் கொண்டாலும் ஒன்றில்லாவிட்டால் ஒன்றில் அவன் உண்மை என்ற பதத்தை உச்சரித்து அதன் தாற்பரியத்தையே கேள்விக் குறியாக்கிக் கொண்டிருப்பதை இன்று பார்க்கின்றோம், கேள்விப் படுகின்றோம்.

நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை என்று மிகச் சப்தமிட்டுச் சொல்லி விட்டு பொய்யையே சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆன்மிகவாதிகளாக இருக்கட்டும் உலகாயதவாதிகளாக இருக்கட்டும் அனைவரும் ஆதரவளிக்கிறார்கள்.

சின்னச் சின்ன விடயங்களிலும் உண்மை இன்று விடை பெற்றுச் செல்கிறது. இன்று ஒரு செய்தியைச் சொல்லிவிட்டு இரண்டே நிமிடங்களின் தான் அப்படிச் சொல்லவில்லை என்று சொல்லும் தலைவர்கள், மத போதகர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் இப்படி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே உண்மை பிச்சை எடுக்க வேண்டிய நிலையைப் பார்க்கிறோம்.

வீட்டில், சமூகத்தில், நாட்டில் உண்மைக்குப் பெருமை சேர்க்காத வரையில் வீடு, சமூகம், நாடு வளர்ச்சி பெற முடியாது. உண்மையின் நன்மையைப் பற்றிப் பெரிதாக விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை.

அதன் நன்மைகள் உண்மையின் பக்கமிருப்பவர்கள் நன்றாகவே உணர்வார்கள். உண்மை பேசுவதில் உணரப்படும் இன்பம் சொல்லித் தெரியப்படுத்த முடியாது.

உண்மையைப் பற்றி இறைவன் என்ன சொல்கிறான் என்பதை முதலில் பார்ப்போம்:
அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏக இறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் ஒதுங்குமிடம் இல்லையா? உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மைப்படுத்துபவரும்தாம் (இறைவனை) அஞ்சுபவர்கள். அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நன்மை செய்வோருக்கு இதுவே கூலி. அவர்கள செய்யும் தீமைகளை அவர்களை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவர்கள் செய்து வந்த நன்மைக்காக அவர்களுக்கு அவர்களுக்கு அவர்களின் கூலியைக் கொடுப்பான்.
(அல்-குர்ஆன்: ஸூரா அஸ்ஸுமர் – 39:32-35)

உண்மை என்பது முதலில் இறைவனோடு சம்பந்தப்பட்டது. இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையைப் பொய்யாக்க நினைக்கும் மனிதருக்குக் கேடுதான் என்பதை மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளான்.



முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல்-அஹ்ஸாப் – 33:35)

அல்லாஹ்வின் மன்னிப்பு யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று நல்லடியார்களுடைய பண்புகளை குறிப்பிட்டு குறிப்பிட்டுக் காட்டுகிறான். அவர்களுக்குள்ள மகத்தான கூலியையும் தயாரித்து வைத்துள்ளதாக அவன் தெரிவிக்கின்றான். அப்படிப்பட்ட சிறந்த பண்புகளின் ஒன்றாக உண்மை பேசுவதையும் உறுதிபடத் தெளிவு படுத்துகின்றான்.

ஆனால், நம் சமூகத்தில் இன்று கவலையோடு காணக்கூடிய வழிகேடு என்னவென்றால் பொய்யைக் கலந்து மார்க்க உபந்நியாசங்கள் செய்யக் கூடிய உலமாக்கள் பலர் நம்மிடையே இருப்பதுதான்! அல்லாஹ் நம்மை இவ்வாறான பொய்யர்களிடமிருந்து காப்பாற்றுவானாக!   


அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பவர்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி.
(அல்-குர் ஆன்: ஸூரா அல்-அஹ்காஃப் – 46:16)

உண்மையை நிலை நாட்டி நன்மை செய்வோருக்கான பரிசு சொர்க்கம். அந்தச் சொர்க்கம் இறைவனால் உண்மையாகவே வாக்களிக்கப்பட்டது. உண்மையாளர்களிலெல்லாம் மிகவும் மேலானவன் அந்த இறைவன் ஒருவனே! ஆகவே, அந்த இறைவனின் உண்மைத்தன்மையை எந்தக் காரணம் கொண்டும் பொய்ப்படுத்த எந்த ஒரு மனிதனும் எத்தனிக்கக் கூடாது.

எவனொருவன் அவ்வுணமையைப் பொய்யாக்க முயற்சிக்கின்றானோ அவன் தூரமான வழிகேட்டிலாகி அதன் மூலம் இறைவனின் கோபத்துக்காளாகி நரகத்தில் தனக்கு இடமொதுக்கிக் கொள்வான். இறைவனுக்கு மாறு செய்வது அவனைப் பொய்ப்படுத்துதலே!

அவன் சொல்லாத ஒன்றை, அவனுடைய் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித்தராத ஒன்றை உருவாக்கி அதற்கு மார்க்க அந்தஸ்து கொடுத்து சமூகத்திலே இஸ்லாத்தைத் திரித்துக் காட்டுவது இறைவனைப் பொய்யாக்குவதேயாகும்.

(இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும், நதியிலும் இருப்பார்கள். வலிமை மிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்.)
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-கமர் – 54:54-55)

உண்மையின் பலன் எவ்வளவு மகத்தானது என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது. உண்மையான இருப்பிடத்தில் இருக்கத் தகுதி பெறுபவர்கள் இறைவனை அஞ்சியோரே என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. இறைவனை யார் அஞ்சுவார்? இறைவனை உண்மைப்படுத்தியவர்தான் அஞ்சுவார்!

தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள், “இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது,” என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர். உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியறுபவன், அறிந்தவன்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல்-அன் ஆம் – 6: 114-115)

இறைவனின் உத்தரவாதத்தையும் அவனது வார்த்தைகளை மாற்றி அவனல்லாதவர்களைச் சரணடைவோர் தோல்வியைத் தழுவப் போகிறார்கள் என்பதை எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுவதை இங்கே காண முடிகிறது.

ஆகவே, உண்மை என்பது முதலில் இறைவனின் இருப்பிலிருந்துதான் உண்டாகிறது. அந்த உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள்தான் மனிதம் தளைக்க உழைப்பார்கள். ஆகவே, உண்மை பற்றி எவ்வளவும் எழுதலாம். கதைகளும் கற்பனைகளும் உண்மையின் தாற்பரியத்த உணர்த்துவதை விட இறைவனின் எடுத்துக் காட்டல்களும் அவனுடைய தூதர்களின் வழிகாட்டல்களும் அதன் யதார்த்தத்தை மிகத் தெளிவாகவே விளக்கும். இன்ஷா அல்லாஹ் அவ்வப்போது சிறுகச் சிறுக அவை பற்றி அறிவோம்.


குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

Wednesday, November 18, 2009

நீதி செலுத்துங்கள்!


 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்-குர்ஆன் ஸூரா அல்-மாயிதா= 5:8)
                                                                
நீதி இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மிக முக்கியமான சிறப்பு மிக்க உன்னதமான ஓர் அம்சம். அல்லாஹ் நீதியை நிலை நாட்டுங்கள் என்ற கட்டளையை அவனுடைய எச்சரிக்கையுடன் கூடவே நம்மீது விதித்திருப்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நீதி பற்றிய அல்லாஹ்வின் கட்டளைகள் மிகத் தெளிவாகவே உள்ளன. அதைப் பற்றி மிக உன்னிப்பாகச் சிந்திக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இன்றைய முஸ்லிம் சமுகம் இருக்கிறது.

உலகின் எக்கோணத்தை எடுத்துக் கொண்டாலும் அராஜகம், அநியாயம் தலைவிரித்தாடுவது கண்கூடு. முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள்! முஸ்லிமல்லாதவர்களும் அவ்வாறே அநியாயமாக இம்சிக்கப் படுகிறார்கள்.

எம்மதத்தவர்களாக, எவ்வினத்தவர்களாக இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் அடுத்தவருடைய உரிமையில் கை வைக்க உரிமையுண்டா?

இஸ்லாம் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்கின்றது. ஏன்? அது, ஒட்டுமொத்த மனித சமுகத்திற்கும் வழிகாட்டி! அல்லாஹ் அதை முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கவில்லை. இதை ஏனோ இன்று பலர் மறந்து விட்டார்கள்! அல்லது அவர்கள் மனித உணர்வுகளுக்கு மட்டும் ஆட்பட்டு அறிவுத்தெளிவற்று இருக்கின்றார்கள்.

ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் சொல்லியிருப்பது தெளிவில்லையா? ஒரு சமுகம் நமக்கிழைக்கைக் கூடிய அனர்த்தங்களால் அச்சமுகத்தின் மீதேற்படக் கூடிய விரோதம் நம்மை நீதமாக நடப்பதிலிருந்து வழிதவறி விடுவதற்குக் காரணியாகி விடக் கூடாது.

அவர்கள் நமது மக்களைத் தாக்குகின்ற காரணத்தினால் நாமும் கண்ணை மூடிக்கொண்டு அவர்களைத் தாக்குவதும் அப்படித் தாக்கப்படும் போது சாதாரண பொது மக்கள், பெண்கள், பிள்ளைகள், கடைத்தெருவுக்குச் சாமான் வாங்கப் போகின்றவர்கள், பாடசாலைக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கின்றோம்.

இவையெல்லாம் யுத்த எதிரியை கொன்றதாகத்தான் கருதப்படும் என்று இன்று அறிஞர்கள் சிலர் சொல்வைதைக் கேட்கின்றோம். தர்க்கங்களை வைத்து அவற்றை நியாயப்படுத்துவதையும் பார்க்கின்றோம். அவர்களின் இவ்வாறான கருத்துக்களைக் கண்மூடிப் பின்பற்றி அப்பாவிகளைக் கொன்று வீராப்புப் பேசும் ஒரு கூட்டம் உருவாகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இஸ்ரவேலர்களின் அராஜகமும், மனிதப் படுகொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல, இம்மாபாதகத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் அணிதிரண்டு போராட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அவர்கள் செய்யக்கூடிய பாதகச் செயல்களுக்கு நாமும் அதே பாதகச் செயல்களை அவர்கள் யஹூதிகள் என்ற ஒரே காரணத்துக்காக செய்ய முடியுமா என்பது சிந்தனைக்குரிய ஒரு விடயமே! ஏன் சிந்தனைக்குரிய விடய்மென்றால் மேற்குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளை தவிர வேறல்ல!

அவவறிஞர்களும் மேடைப் பேச்சாளர்கள் சிலரும் உணர்வு வேகத்தால் கொதித்துப் போயிருக்கும் மக்களுக்கு உபதேசம் செய்கின்றார்கள்.

கோபத்திலாகி பழி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசத்திற்கு உள்ளானவர்களின் உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்றார்கள். அதனால் அவர்களுடைய இப்பேச்சுக்களும் இவ்வாரான உணர்வூட்டல்களும் இஸ்லாமிய அணுகு முறைகளுக்குப் பெரும் பாதகமாகி வருவதை அவதானிக்கின்றார்களில்லை.

மேற்குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் மாறுபட்ட உபதேசங்கள் இவை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

சந்தேகமேயில்லை! இஸ்லாம் எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளை, பெண்களை, யுத்த களத்திலல்லாத சாதாரண மனிதனைக் கொலை செயவதற்கு அனுமதிக்கவில்லை.

எங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கின்றது என்பதற்காக அதே அநீதியை அவ்வநியாயத்தோடு சம்பந்தப்படாத ஒரு பொது மகனை அழிப்பதன் மூலம் நிவர்த்திக்கப்படுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
(அல்-குர்ஆன் – ஸூரா பனூ இஸ்ராயீல் 17:15)

இஸ்லாம் எந்தக் கட்டத்திலும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த போர்களிலும் அதன் பின்னால் நல்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்தில் நடந்த யுத்தங்களிலும் அப்படி நடந்ததற்கான் எந்தச் சான்றும் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களில் பலர் அராஜகம் செய்கின்றார்கள் என்பதற்காக அவ்வராஜகத்தின் மூலமே ஏன் முஸ்லிம்கலள் பதிலடி கொடுக்கக் கூடாது என்பதுதான் இத்தலைவர்கள், அறிஞர்களின் வாதம். இவ்வாறு வாதம் செய்து உசுப்பி விடப்படும் போராளிகள் யாரைக் கொல்கின்றார்கள், அராஜகம் செய்தவர்களையா? அல்ல, அந்தக் கொடுமைகளுடன் சம்பந்தப் படாதவர்களைத்தான் தாக்குகின்றார்கள்.

யாரோ செய்த கொடுமைக்கு யாருக்கோ தண்டனை!

மேலே மேற்கோள் காட்டிய அல்-குர்ஆன் வசனம் அல்லாஹ்வின் வாக்கு என்பதை ஏன் மறந்து விடுகின்றார்கள்? இந்த உலகத்தில் அந்த அல்லாஹ்வின் கட்டளைகளப் பின்பற்றுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாதவர்களுக்குத் தண்டனை கொடுக்க முஸ்லிம்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

சடுதியாக வரும் உணர்வு வேகத்திற்கு மட்டும் ஆட்பட்டு தீர்ப்புகள் கொடுக்கப் படுமானால் இன்று ஒரு மனிதன் தன்னுடைய இனத்துக்கு, தன்னுடைய குடும்பத்துக்கு, தனக்கு, சார்பாக நீதி செலுத்தலாம் என்றாகிவிடும்.


இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்-குர்ஆன் – ஸூரா அன்னிஸா – 4:58)

இவவசனத்திலே அல்லாஹ் சொல்வதை மறைக்காமல் நாம் வெளிக் கொணர்வோமானால், சிந்திக்கும் மக்களுக்கு அது ஒரு பெரும் அருட்கொடையாகத்தான் இருக்கும். அல்லாஹ் (பைனன்னாஸ்) மனிதர்களுக்கிடையில் என்ற சொல்லைத்தான் பிரயோகித்திருக்கிறான். (பைனல்முஸ்லிமூன் என்றோ பைனல்முஃமினூன்) முஸ்லிம்களுக்கிடையில் என்றோ முஃமின்களுக்கிடையில் என்றோ குறிப்பிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹராமான இரத்தத்தத் தொடாத வரை (யாரையும் அநியாயமாகக் கொலை செய்யாத வரை) ஒரு முஃமின் – நம்பிக்கையாளன் – தனது தீனின் விஸ்தீரனத்தில் (தம் ரப்பின் ரஹ்மத்தின் ஆதரவில்) ஆகிவிடுவார்.
(ஆதார நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் இல. 220)

குற்றமிழைத்த ஒருவனின் இனத்தைச் சேர்ந்த காரணத்திற்காக மற்றொருவனைத் தண்டிக்க எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறிய அறிவிப்பில் வருவது மிகத் தெளிவானது. அப்பவியான ஒரு மனிதனைக் கொல்வது ஹராம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

“எங்கள் இனத்தவர்களைக் கொல்கின்றார்கள். செய்தவனைத் தேடிப்பிடிக்க முடியாது. அவன் உலகத்தில் பொது நிறுவனங்களைத தன்னாதிக்கத்திற்குள் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றான். நவீன ஆயுதங்களின் ஒட்டு மொத்த உரிமையாளன் அவன். அவனைத் தண்டிக்க, அவனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்த எங்களால் முடயாது. எமக்கு அதற்கான சக்தியில்லை. ஆகவே, எப்படியோ ஒரு வகையில் அவனுக்குப் பாடம் புகட்டியாக வேண்டும். எனவே, நாமும் அவனுடைய இனத்தைச் சேர்ந்தவனை நம்மிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொலை செய்வது கொலையாக ஆகாது. அப்படி நமது தாக்குதலில் யார் இறந்தாலும் அவ்விறப்பு போர்க்களத்தில் எதிரியின் இழப்புத்தான்.”

இப்படிப் பேசும் அறிஞர்களும், சமூக நலன் விரும்பிகளும் நம்மிடையே இல்லாமலில்லை.

அவர்களிடம் ஒரு வினயமான வேண்டுகோள்.

தயவு செய்து அதற்கான அல்-குர் ஆன், அல்-ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டுங்கள். அப்படிக் காட்டுவது என்னைப் போன்றவர்கள் அறிந்து திருந்துவதற்கு அது பேருதவியாக இருக்கும்.

ஆகவே, இன்று சர்வதேச அளவில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆகிய இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறிழைக்கக் கூடிய தலைவர்களின் அராஜகங்களை எதிர்க்க வேண்டும். அந்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக அநியாயக்காரர்கள் என்று விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித விமர்சனங்களுக்குப் பயந்து நீதி செலுத்துவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள ஒரு முஸ்லிம்முக்கு அனுமதியில்லை. இதைத்தான் மேற்காட்டப்பட்டுள்ள அல்-குர் ஆன் வசனங்கள் நமக்குப் போத்க்கும் பாடம். அதுதான் அல்லாஹ்வின் கட்டளை.

நீதி நிலை நிறுத்தப்படுவது தத்ரூபமாகத் தெரியும் போதுதான் அல்லாஹ்வின் மார்க்கம் மனித இனத்துக்குப் பொதுவானது என்ற நிலைப்பாடு உறுதியாக நிலை நிறுத்தப்படும். அதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தமந்திருக்கிறார்கள். புதிதாக புகுத்துவதற்கு அங்கே எதுவும் குறைபாடுகள் இல்லை.

உணர்ச்சி ததும்பப் பேசுவதன் மூலம் மட்டும் இஸ்லாமிய சகோதரத்துவத்தை எப்படி ஏற்படுத்த முடியாதோ அப்படித்தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறி அவனுடைய் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலைப் புறக்கணித்து அறிஞர்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நீதியை நிலை நாட்ட முடியாது.

அல்-குர்ஆனும் அல்-ஹதீஸும் மட்டுமே நீதி நிலை நாட்டப்பட வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன் தனிப்பட்ட வாழ்விலும் கூட தன்னுடைய் உடல்ரீதியாக அதற்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பது நீதியை நிலை நாட்டுவதாகும். அப்போதுதான் அவன் உடல், மனோரீதியாக தனக்குத்தானே அநியாயம் இழைக்காதவனாகலாம். ஆன்மிகத்தைத் தேடி உடலை வருத்திக் கொள்ளும் கடப்பாடு இஸ்லாத்தில் இல்லை.

இஸ்லாமிய நடைமுறைகள், வழிகாட்டல்கள், செயல்கள், வணக்கங்கள் யாவற்றிலும் நீதியின் அடையாளம் ஓங்கி பளிச்சென்று விளக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளதைத் தெளிவான சிந்தனையுள்ளவர்கள் காணலாம், உணரலாம்.

Ø      கூட்டுத் தொழுகையின் போதுள்ள வரிசை. அதில் ஒருவர் மற்றவரை விட விசேடப் படுத்தப்பட்டு முன்னுரிமை பெற முடியாது.
Ø      ஏழை, பணக்காரன், ஆள்பவன், ஆளப்படுபவன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், அரபி, அரபியல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.
Ø      ஆட்சியாளனுக்கும் ஆளப்படுபவனுக்குமிடையில் நீதி செலுத்தும் போது எந்தப் பாகுபாடும் இல்லை.
Ø      கூட்டாகக் குற்றமிழைத்துவிட்டு அரசு தரப்புச் சாட்சியாக மாறி குற்றமற்றவன் என்ற நிலையை அடைய இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
Ø      குற்றமிழைத்தவன் குற்றத்தை உணர்ந்து திருந்தும் போது அல்லாஹ் நாடினால அவனுக்கு மன்னிப்பு அல்லாஹ்வின் பக்கமேயுள்ளது.
Ø      குடும்பத்தில் ஒரு பிள்ளையைவிட மற்றொரு பிள்ளையை விசேடப்படுத்திக் கவனிக்க முடியாது.

எந்த விடயமானாலும் நடவடிக்கையானாலும் முஸ்லிம்கள் நிலையான நீதியின் பக்கமே இருக்க வேண்டும். அது குடும்ப அங்கத்தவர்கள் சம்பந்தப் பட்டவையாயிருந்தாலும் சரியே; சம்பந்தப் பட்டவர் அதிக ஆதரவுக்கும் நேசத்துக்கும் உட்பட்டவராக இருந்தாலும் சரியே; மிகவும் விரும்பக்கூடிய ஒரு விடயமாக இருந்தாலும் சரியே; சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரியே!

அநியாயம் நடந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டால் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தைக் கூட விட்டு விடுவதுதான் மிகவும் நல்லது.

அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தினால் முஸ்லிம் அல்லாதோருக்குப் பாதிப்போ அல்லது அச்சுறுத்தலோ உள்ளது என்று முஸ்லிமல்லாதோர் மத்தியில் சந்தேகமுண்டாகி அதனால் இருதரப்பார்க்குமிடையில் பிரச்சினையுண்டாகும் என்ற நிலை உருவாகும் என்றிருந்தால் அச்சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப் பட்டவைகள் தடுக்கப் பட்டவையாகும். – இது ‘ஷரீஆ’வின் ஒரு முக்கியமான மூலக் கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்:
நீதி, நன்மை, மற்றும் உறவினறுக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக் கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அந்நஹ்ல் – 16:90)

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 
(அல்-குர்ஆன்: ஸூரா அன்னிஸா – 4:135)

இப்படி நீதி செலுத்துதல் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்டிருக்கக் கூடிய கட்டளைகள் ஏராளம்.

முஸ்லிம்கள், ஆட்சியதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாத்தின் கொடியைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவர்கள் என்பதைக் கண்ணிமைப் பொழுதேனும் மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்துவிடாமல் இருப்பதற்கு முஸ்லிம்களுக்குள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் நம்பிக்கை பரிபூரணமாக இருக்க வேண்டும்; அப்படியானால்தான் இறையச்சம் உள்ளத்திலே வேறூன்றி நிற்கும்.

அப்படி ஏகத்துவத்தின் நம்பிக்கை முழுமை பெற்று இறையச்சம் வேறூன்றும் போதுதான் நம் மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவம் சந்தேகத்திற்கிடமின்றி இறுக்கம் பெறும். சகோதரத்துவத்தின் அவ்விறுக்கத்தில் நீதி நிறுவப்படும் போது நிச்சயமாக முஸ்லிம்கள் மற்றோருக்கு முன்மாதிரியான ஒரு சமுகம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.


குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.


Sunday, November 15, 2009

இரகசியம் பேணுதல்!

  
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வுலகில் வாழ்வது எப்படியென்று வழி காட்டுகிறது அது.

படைத்தவன் இறைவன். பரிபாலிப்பவன் அவனே! அழிப்பவனும் அவன் தான்! பின்னர் மீளெழுப்புபவனும் அவனேதான்!

எனவே, படைத்துப் பரிபாலித்து மரணிக்கச் செய்து மீண்டும் எழுப்பினால் அதன் பின் என்ன, என்ற கேள்வி எழுகிறதல்லவா?

மீண்டும் ஏன் எழுப்பப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பலரும் பல விதமாகப் பதில் எழுதியிருக்கலாம்.

இறைவன் மனிதனைப் படைத்து அவனுக்குச் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அறிவையும் கொடுத்தான். அந்த அறிவின் உச்சமாக பகுத்தறிவை உரிமையாக்கி தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் அளித்தான். 


மனிதனாக தனது வாழ்க்கை வழிமுறையை அமைத்துக்கொள்ள இடமளித்தானா என்றால் அதுதான் இல்லை. அப்படி இடம் கொடுத்திருந்தால் உலகில் அராஜகம்தான் ஆட்சி செய்யும். 


தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகி இருப்பான். பலவீனமானவன் எல்லாம் அடிமையாக்கப் பட்டிருப்பான். 

ஆகவே, மனிதனுக்கு வாழ வேண்டிய வழிமுறைகளை அவ்வப்போது அனுப்பி வைப்பதாக அவனே மனிதனுக்கு அறிவித்தான். அதன் வெளிப்பாடுதான் காலத்துக்குக் காலம் அவனது தூதர்கள் மூலம் அவன் அனுப்பிய வேதங்கள்.

மனித வாழ்வில் ஒரு மனிதன் சந்திக்கக் கூடிய ஒவ்வொரு விடயத்திலும் அவனுடைய அறிவுறுத்தல், வழிகாட்டல் இல்லாமலில்லை!

அதில் ஒரு முக்கியமான அம்சம்தான் இரகசியம் பேணுதல். அது பற்றி இறைவன் என்ன கூறுகிறான் என்பதைச் சிறிது பார்ப்போம்.

அல்-முஜாதலா – தர்க்கம் செய்தல் என்ற 58 வது அத்தியாயத்திலே அவன் கூறுவதை கவனமாகப் படித்துச் சிந்தனைக்குட்படுத்துவது சாலச் சிறந்தது.

5வது வசனம்:
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோர் இவர்களுக்கு முன் சென்றோர் இழிவு படுத்தப்பட்டது போல இழிவு படுத்தப்படுவார்கள். தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம். (நம்மை) மறுப்போருக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது.

அல்லாஹ்வை மறுப்போரைப் பற்றி குறிப்பிட்டு அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையையும் காட்டுகிறான். அப்படித் தண்டனை ஏன் வழங்கப் படுகிறது என்பதும் இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம் என்று குறிப்பிடுவதன் மூலம் அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்களே மனிதர்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளான்.

தொடர்ந்து 6 வது வசனத்தைப் படியுங்கள்.
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர்ப்பிக்கும் நாளில் அவர்கள் செய்ததை அப்போது அவர்களுக்கு அறிவிப்பான். அதை அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அதை மறந்து விட்டனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.

மனிதன் குறைபாடுகளுடன் கூடிய ஒர் படைப்பேயன்றி வேறல்ல என்பதை இவ்வசனம் தெளிவாகவே சொல்கிறது. இதை மறந்துவிட்ட மனிதன் தன் மனோ இச்சையின் படி வாழ்ந்து அவனே அனைத்தையும் ஆளுமைக்குட்படுத்தியவன் என்ற மெத்தனப் போக்கில் தனக்குத் தானே நஷ்டமிழைத்துக் கொண்டிருப்பதை அறிய முற்படுகிறானில்லை. அதிகமான மனிதர்கள் இறைவன நம்புகிறார்கள் தான்! ஆனால், அவர்கள் அந்த இறைவனுக்கே பொருந்தக் கூடிய பண்புகளோடு நம்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை!

கல்லையும், மண்ணையும், சந்திர சூரியனையும், பன்றியையும், யானையையும், எலியையும், எருமையையும், பெரியார்களையும், ஷைகுகளையும், இறைவனின் தூதர்களையும் வணங்குகிறார்கள்.

அனைத்தும் அவன் கணக்கிலிருந்து தப்பா!

இனி 7 வது வசனம் என்ன சொல்கிறது?
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாம நாளில் அவர்கள்  செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

இரகசியம் பேசும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் தனக்கும் தான் எவனோடு பேசுகிறானோ அவனுக்கும் மட்டுமே பேசப் படும் விடயம் தெரியும் என்று! அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை எத்தனை படிப்பினைகளைக் கண்டாலும் அறிந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இன்று நாடு நாடுகளின் தலைவர்களுக்கிடையே நடக்கும் இரகசியங்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இறைவன் நேரடியாக வந்து அவற்றை அம்பலப்படுத்துகிறானா என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருக்காது. உள்ளங்களை ஆட்சி செய்பவன் அவனே! அவற்றைப் புரட்டிப் புரட்டி எடுப்பவன் அவனே! இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்காமைக்கு இறைவனின் பங்களிப்புத்தான் காரணமேயன்றி வேறொன்றல்ல. ஏனோ இந்த மனிதன் இதை மறந்து விட்டான்.

8 வது வசனத்தை உன்னிப்பாகக் கவனிக்கவும்!
இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப் பட்டார்களொ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்வதிலும் இவர்கள் இரகசியமாகக் கூடிக் கூடி திட்டங்களை வகுத்து செயல் படுகின்றவர்கள், இவ்வசனத்தின் தாற்பரியத்தைச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். அவ்வாறு சிந்திப்பார்களேயானால் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றி இறைவனின் ஏகத்துவத்தின் பால் திரும்ப வாய்ப்பிருக்கும்.

ஆனால், அவர்களெல்லாம் உள்ளத்தால் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றாமல் புகழ்வதில் மட்டும் தம்மை ஆக்கிக் கொண்டு அதன் மூலம் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர். அதனால்தான், மௌலீதுகளும், மீலாத் விழாக்களும் அரங்கேற்றப்படுகின்றன.

இப்படி அல்லாஹ்வின் விடயத்தில் அவனுடைய வேதத்தின் வழிகாட்டலுக்கு மாற்றமாக இரகசியம் பேசி மக்களை வழி நடத்தும் பேர்வழிகளின் நிலை என்னவென்பதை தெளிவாகவே பிரகடனம் செய்திருக்கிறான். திருந்த வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு இந்த வசனம் போதுமானது.

9 வது வசனம் எச்சரிக்கை கலந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.

இரகசியம் பேசுதலில் ஒரு தெளிவான தடையை அல்லாஹ் விதிக்கிறான். பாவத்தின் பாற்பட்ட விடயங்கள், தனக்கு இன்னொருவர் மூலம் ஏற்பட்ட ஒரு விடயத்தில் அதற்கு ஒன்றுக்கொன்று செய்யும் போது வரம்பு மீறுதல், அல்லாஹ்வுடைய தூதருக்கு மாறு செய்தல் – அல்லாஹ்வின் தூதர் மீது இட்டுக்கட்டுதல், அவர் சொன்னதாக ஒரு விடயத்தை முன்வைத்தல், அவர் செய்யாத ஒரு செயலைச் செய்ததாக கூறுதல், அவர் அங்கீகரிக்காத ஒரு காரியத்தை அவர் அங்கீகரித்ததாக மக்கள் மத்தியிலே பரப்புதல், வணக்க வழிபாடுகளிலே புதியனவற்றைப் புகுத்துதல் – இப்படி பூர்த்தியாக்கப் பட்ட வேதத்திலே தமது மனோ இச்சைப் பிரகாரம் சட்டங்களை உருவாக்குதல். இவற்றை முழுமையாகத் தடை செய்து இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.

இரகசியம் பேசுவதற்குத் தகுதியான விடயங்களையும் அல்லாஹ் இந்த வசனத்திலே தெளிவு படுத்துகிறான். நல்ல விடயங்கள் எதுவாக இருந்தாலும் பேசலாம். இறையச்சம் பற்றிய விடயங்கள் சம்பந்தமாகப் பேசலாம்.

எனவே, இரகசியம் பேசும் போது மீண்டும் எழுப்பப்படக் கூடிய நாளை எண்ணிப்பார்த்து அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுமாறு அவன் முத்தாய்ப்பாய்க் கட்டளையிடுகிறான்.

10 வது வசனம் கூறுவதைச் சிந்தியுங்கள்.
இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

பாவம், வரம்பு மீறுதல், அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக இரகசியம் பேசுதல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தீர்களா? இது அல்லாஹ்வுடைய வார்த்தை. வேறு விளக்கம் தேவையில்லை.

தொடர்ந்து அவன் அளிக்கும் உத்தரவாதம் ஷைத்தானால் எந்த ஒரு தீங்கையும் நம்பிக்கை கொண்டோருக்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் எவ்வாறிருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் இங்கே இருக்கிறது. அது இறைவன் விதித்த நிபந்தனை. அதுதான்:


நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். 

ஆகவே, இரகசியம் பேசுதல் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் விதிமுறைகளில் வரம்பு மீறாமல் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடப்போமாக.

குறிப்பு: அல்-குர்ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.