நாளாந்தம் காணும் காட்சிதான்! நாமெல்லாம் கண்டு இன்புறும் காட்சிதான்! சூரியன் தினமும் உதிக்கிறது; காலைப் பொழுது என்கிறோம்! தினம் தினம் மறைகிறது; மாலைப் பொழுது என்கிறோம்! அழகை மட்டும் ரசிக்கிறோம்; உபயோகத்தைப் பற்றிய சிந்தனையற்றிருக்கின்றோம்!
ஒரு காலத்தில் சூரியனை மனிதன் வணங்கினான் என்று சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தறிகிறோம்! ஏன், இன்றும் கூட சூரிய பகவான் என்று அதற்கு நாமம் சூட்டி சிரம் சாய்க்கும் மனிதன் இருக்கத்தான் செய்கிறான்!
ஆனால், சூரியன் இணை கற்பிக்கவே முடியாத இறைவனின் படைப்பென்பதை உணராதவர்கள் இருப்பதைப் போலவே அது இறைவனால் படைக்கப்பட்டதுதான் என்று தெளிவாக நம்புபவர்களும் இருக்கிறார்கள்.
பூமி தட்டையானது என்று நம்பிய காலத்திலே சூரியனும் தட்டையானது என்றும் அது நான்காம் வானத்திலே ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னவர்களும் அதை நம்பியவர்களும் இருந்தார்கள்.
அப்படிச் சொன்னவர்கள் விஞ்ஞானிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் புவியியல், வானியல் அறிஞர்கள் என்று ஏற்றிப் போற்றப்பட்டார்கள்.
இன்று, அன்றாடம் சூரியனைப் பார்க்கும் எந்த மனிதனும் ஒரு நாளையின் ஒரு சாதாரண நிகழ்வாகவே அதைப் பார்க்கின்றான்.
சூரியன் இறைவனின் படைப்பு என்று எப்போதுமே சொன்னது, சொல்லி வந்தது இஸ்லாம் ஒன்றே! அது ஸபூர் வேதமாகவிருக்கட்டும், இன்ஜீல் வேதமாகவிருக்கட்டும், ஃபுர்கான் வேதமாகவிருக்கட்டும், அவை இறைவனின் படைப்பென்றே பறை சாற்றின!
மனித குலத்திற்கு நேர்வழியாகக் கடைசியாக பூரணப் படுத்தப்பட்டு வேதமாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கத்தின் மூலாதாரமான அல்-குர்ஆன் சூரியனைப்பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
சிந்திக்கும் மக்களுக்கு அது ஒரு படிப்பினையாக, ஒரு வழிகாட்டியாக இருக்கட்டுமே!
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்,” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்,” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே, நீ மேற்கில் அதை உதிக்கச் செய்,” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்-குர்ஆன் 2:258)
சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது, “இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது,” என்றார். அது மறைந்த போது, “என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்,” எனக் கூறினார். (அல்-குர்ஆன் 6:78)
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு. (அல்-குர்ஆன் 6:96)
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும் கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல்-குர்ஆன் 7:54)
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகின்றான். (அல்-குர்ஆன் 10:5)
“என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும், நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்,” என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்-குர்ஆன் 12:4)
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர், அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கின்றான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான். (அல்-குர்ஆன் 13:2)
தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும் பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான். (அல்-குர்ஆன் 14:33)
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப் பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல்-குர்ஆன் 16:12)
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் ஃபஜ்ரு (அதிகாலைத் தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! ஃபஜ்ரு (அதிகாலைத் தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது. (அல்-குர்ஆன் 17:78)
சூரியன் உதிக்கும் போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவர் நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர். (அல்-குர்ஆன் 18:17)
சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக் கொள்ளலாம்,” என்று கூறினோம். (அல்-குர்ஆன் 18:86)
முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்த போது ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை. (அல்-குர்ஆன் 18:90)
(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தி அடையலாம். (அல்-குர்ஆன் 20:130)
அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன. (அல்-குர்ஆன் 21:33)
“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்,” என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான். (அல்-குர்ஆன் 22:18)
உமதிறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 25:45)
அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று). (அல்-குர்ஆன் 27:24)
“வானங்களையும் பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால், “அல்லாஹ்,” என்று கூறுவார்கள். அப்படியாயின், “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?” (அல்-குர்ஆன் 29:61)
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்-குர்ஆன் 31:29)
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவ்னே அல்லாஹ்; உங்கள் இறைவன்; அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். (அல்-குர்ஆன் 35:13)
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். (அல்-குர்ஆன் 36:38)
சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன. (அல்-குர்ஆன் 36:40)
தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்-குர்ஆன் 39:5)
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸ்ஜ்தா செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வண்ங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸ்ஜ்தா செய்யுங்கள். (அல்-குர்ஆன் 41:37)
அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், மறைவதற்கு முன்பும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! (அல்-குர்ஆன் 50:39)
சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. (அல்-குர்ஆன் 55:5)
அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான். (அல்-குர்ஆன் 71:16)
வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
(அல்-குர் ஆன் 25:61)
இரவை ஆடையாக்கினோம். பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம். உங்களுக்கு மேல் ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம். ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம். (அல்-குர் ஆன் 78:10-13)
பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான். (அல்-குர்ஆன் 75:7–10)
அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். (அல்-குர்ஆன் 76:13)
சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிரும் போது, மலைகள் பெயர்க்கப்படும் போது, கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது, விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது, கடல்கள் தீ மூட்டப்படும் போது, உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்டவள் விசாரிக்கப்படும் போது, ஏடுகள் விரிக்கப்படும் போது, வானம் அகற்றப்படும் போது, நரகம் கொளுத்தப்படும் போது, சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும் போது, ஒருவன் தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான். (அல்-குர் ஆன் 81:1-14)
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! (அல்-குர்ஆன் 91:1)
சூரியன் படைக்கப்பட்டதன் நோக்கம், அதன் தாற்பரியம் அனைத்தையும் இரத்தினச் சுருக்கமாக இறைவன் அல்-குர்ஆனிலே தெளிவு படுத்தியிருப்பதைப் பார்த்தோம். சிந்தனையை முடுக்கி விடுபவர்களுக்கு இதிலே படிப்பினை இருக்கிறது.
சிந்தனைச் சிறகடித்துப் பறந்து செல்ல முடியுமானவர்கள் படைப்பின் ரகசியங்களை அறிந்து கொள்வார்கள். அதுவே அவர்களை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருக்க வழி வகுக்கும்.
குறிப்பு: அல்-குர்ஆனின் தமிழ் மொழியாக்கம் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் மூன் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர்களுக்கும் மன்முவந்த நன்றிகள்.