Thursday, November 12, 2009

அபூர்வ மலர் - பனை இனம்






கண்கொள்ளாக் காட்சிகள் என்று இலக்கியவாதிகள் இறைவனின் படைப்புக்களை இயற்கை என்ற சொற்பிரயோகத்திற்குள் அடக்கி தம் மொழித் திறமையை வசன நடையிலும் செய்யுள் வடிவிலும் பாடல் மொழியிலும் எடுத்தியம்புவார்கள். எப்போது? அப்போது! அதாவது புகைப்படக் கருவிகள் இல்லாத போது!


ஆனால், இப்போது கையடக்கத் தொலைபேசிகள், டிஜிட்டல் கெமராக்களோடு எல்லோரும் தாம் பார்க்கும் காட்சிகளை கைக்குள்ளே அடக்கிக் கொள்கிறார்கள்.


இந்தப் புகைப்படம் அக்குறணை, புளுகஹதென்னையூடாகச் செல்லும் ஓவிஸ்ஸ என்ற கிராமத்தில் எடுத்தது. Nokia - N95 டிஜிட்டல் புகைப்படமிது!
இந்த மரம் பனை இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்கள் மரத்தோடு வைத்து நுனிப்பகுதி வெட்டப்பட்டு அதிலிருந்து வடியும் ஒரு விதமான பானத்தை சேகரிப்பார்கள். அப்பானத்தை நெருப்பில் காய வைத்து பாணி எடுப்பதுமுண்டு; அப்படியல்லாமல், மதுபானம் செய்வதுமுண்டு.


ஆனால், இங்கே நீங்கள் காண்பது மரத்தின் மேல்பகுதி முழுமையாக பூத்துக் குழுங்குகிறது! மரம் அதன் இறுதியை அடைந்து விட்டது என்று இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். பூக்கள் வாடிப் போகப் போக மரம் செத்துவிடும். சாவதற்கு முன் தன் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கவோ இவ்வளவு அழகு!


ஒரு மாபெரும் மரச்சோலையினுள் தனியனாக அழகு கொழிக்கும் இம்மரமும் கூட நமக்குப் படிப்பினைதான். மரணிப்பதற்கு முன் முடிந்தளவு மனிதனை மகிழ்விக்க விளைகிறதோ இம்மரம்.


அல்லாஹ்வின் படைப்பின் ரகசியங்கள் அவனே அறிவான்!


சோலை, மரம், பூங்காக்கள் பற்றி அல்-குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா!


சொர்க்கச் சோலைகள், அங்குள்ள மரங்கள், சொர்க்கப் பூங்காக்கள் பற்றிய இறைவனின் அறிவிப்புகளும் இங்கே எடுத்து வைக்கப்படும். அவற்றோடு இங்குள்ளவை ஒப்பாகுமா என்ற கேள்வியைத் தொடுக்காமல் அவற்றை இனம் கண்டுகொள்ள இவை முன்னோடிகளாக இருக்கலாமே என்பதே கருத்து.


இனி அல்லாஹ் சொல்வதைப் பார்ப்போம்:


“நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன,” என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம், “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது,” எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையதுதான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்-குர்ஆன் 2:25)


படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்-குர்ஆன் 6:141)


அடர்ந்த தோப்புகளில் வசித்தோரும் (மத்யன் வாசிகளும்) அநீதி இழைத்தனர். அவர்களையும் தண்டித்தோம். அவ்விரண்டு(ஊர்களு)ம் (அனைவருக்கும்) தெரிந்த வழியில்தான் உள்ளன.
(அல்-குர்ஆன் 15:78-79)


அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே, அவர் வழி தவறினார்.
(அல்-குர்ஆன் 20:121)


பூமியில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?
(அல்-குர்ஆன் 26:7)


அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அந்த நேரம் வரும் போது குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள். அந்த நேரம் நிலை பெரும் அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோர், சோலையில் மகிழ்விக்கப் படுவார்கள். (நம்மை) மறுத்து நமது வசனங்களையும் மறுமைச் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோர் வேதனையின் முன்னே நிறுத்தப் படுவார்கள்.
(அல்-குர்ஆன் 30:11-16)


நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.
(அல்-குர்ஆன் 31:10)


ஸஃபா வாசிகளுக்கு அவர்களின் குடியிருப்புகளில் சான்று உள்ளது. அதன் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு சோலைகள் (இருந்தன). உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (எனக் கூறப்பட்டது.) ஊரும் நல்ல ஊர். இறைவனும் மன்னிப்பவன்.
(அல்-குர்ஆன் 34:15)


ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உண்வாகும். உருக்கிய செம்பைப் போலும், கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.
(அல்-குர்ஆன் 44:43-46)


(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
(அல்-குர்ஆன் 44:51-52)


(இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கி வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.
(அல்-குர்ஆன் 51:15-16)


(இறைவனை) அஞ்சியோர் தமது இறைவன் தங்களுக்கு வழங்கியதை அனுபவித்துக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், இன்பத்திலும் இருப்பார்கள். அவர்களின் இறைவன் நரகின் வேதனையை விட்டு அவர்களைக் காப்பாற்றினான். நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் சாய்ந்து கொண்டு மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்.) ‘ஹூருல் ஈன்’களை அவர்களுக்குத் துணைவியராக்குவோம்!
(அல்-குர்ஆன் 52:17-20)


(இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும்,நதியிலும் இருப்பார்கள்.
(அல்-குர்ஆன் 54:54)


தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
(அல்-குர்ஆன் 55:46-49)


அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
(அல்-குர்ஆன் 55:54-55)


அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? 
(அல்-குர்ஆன் 55:62-63)


(மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே. அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர். இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
(அல்-குர்ஆன் 56:10-12)


நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்-குர்ஆன் 57:12)


அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தி உள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
(அல்-குர்ஆன் 58:22)


உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
(அல்-குர்ஆன் 61:12)


ஒன்று திரட்டும் நாளில் அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே நஷ்டமளிக்கும் நாள். அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றேன்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்-குர்ஆன் 64:9)


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை இருள்களிலிருந்து ஒளிக்குக் கொண்டு செல்வதற்காகவே தெளிவுபடுத்தும் அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை (அனுப்பினான்.) அல்லாஹ்வை நம்பி, நல்லறம் செய்வோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவருக்காக அல்லாஹ் உணவை அழகாக்கி வைத்துள்ளான்.
(அல்-குர்ஆன் 65:11)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்,” என்று கூறுவர்.
(அல்-குர்ஆன் 66:8)


(இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.
(அல்-குர்ஆன் 68:34)


ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலது புறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம், “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை,” எனக் கூறுவார்கள்.
(அல்-குர்ஆன் 74:38-44)


தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார் மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.
(அல்-குர்ஆன் 78:14-16)


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெறும் வெற்றி.
(அல்-குர்ஆன் 85:11)


அவர்கள் இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றேன்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.
(அல்-குர்ஆன் 98:8)


அநீதி இழைத்தோர் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை வீழ்த்தக் கூடியது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. இதுவே பேரருள்.
(அல்-குர்ஆன் 42:22)


சோலைகள், மரங்கள், பூக்கள், செடிகள், புற்பூண்டுகள் யாவுமே மனதுக்கு இதமளிப்பவை. இன்பம் தருபவை. இது மேற்கூறிய இறைவாக்குகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.


அந்த இன்பக் கிளுகிளுப்பை மறுமையில் நிரந்தரமாகச் சுவைக்க வேண்டுமென்றால் நாம் இவையனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதிலிருந்து பரிபூரணமாக விடுபட வேண்டும். அவன் புகழுக்கு இணையாக வேறு யாரையும் எதையும் புகழக் கூடாது.


அல்லாஹ்வின் கட்டளையும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையும் மட்டுமே மறுமை வெற்றிக்கு உத்தரவாதம்.


குறிப்பு: அல்-குர்ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment