Thursday, November 12, 2009

கைதட்டி ஆரவாரித்தல் – யாருடைய நடைமுறை?

- அபூ பௌஸீமா -

கைதட்டி ஆரவாரித்தல் என்பது இன்று உலகலாவிய ரீதியில் அனைத்து மனித சமூகங்களுக்கிடையிலும் ஒரு பழக்கப்பட்ட வழக்கமான செயலாக இருப்பதை அவதானிக்காதவர்கள் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லப் புகுமிடத்து நாமும் கூட சில சமயங்களில் நம்மையறியாமலேயே இந்தச் செயலைச் செய்கின்றோம்.

இன்று மேடைகளில் உரையாற்றுபவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று சமூகத்தில் எந்தவொரு கோணத்தைப் பார்த்தாலும் அவர்கள் தம் வெற்றிக்காக மற்றவர்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

ஆசிரியர்கள் தமது மாணவரகள் மத்தியில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை உற்சாகப் படுத்துவதற்காக மற்ற மாணவர்களைக் கைதட்டும் படி கேட்டுக் கொள்கின்றார்கள்.

இந்த வழிகாட்டலால், சின்னஞ்சிறுசுகள் பள்ளிக் கூடங்களிலே பெற்ற பரிசுகளுக்காகக் கைதட்டலை எதிர்பார்க்கின்றார்கள்.

முஸ்லிமகளைப் பொறுத்தவரையில் எந்தவொரு சிறிய விடயமானாலும் அந்த விடயம் சம்பந்தமாக அழகிய வழிகாட்டல் இல்லாமலில்லை.

என்னடா இது? கை தட்டுதலுக்கும் முன்மாதிரியுண்டா என்று கேட்கும் மனித மனங்கள், இவையெல்லாம் சின்னச் சின்ன விடயம்தானே, இவர்களுக்கு வேறு வேலையில்லை, எழுதித் தள்ளுகிறார்கள், என்ற எண்ணவோட்டங்கள் வாசகர்களின் உள்ளங்களிலே ஓடுவது தெரிகின்றது.

நன்மைகளை ஏவுவதும், தீமைகளைத் தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதால் ஒவ்வொருவரும் தனக்கு இயன்ற வழியில் அவற்றைச் செய்துதான் ஆக வேண்டும். அதுதான் நம்மைப் படைத்துப் போஷித்து இரட்சிக்கும் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தும்.

சின்னச் சின்ன விடயங்கள் என்று ஒழுங்கீனங்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆகவே, சிலர் சொல்வது போல இஸ்லாத்தில் சின்னச் சின்ன விடயங்கள் என்றொறில்லை.

அல்லாஹ் தன் திருமறை அல்-குர்ஆனிலே இந்தச் செயலைக் குறிப்பிட்டுக் காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்:

“மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை; ‘ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத் தினம்) வேதனையைச் சுவையுங்கள்,’ (என்று மறுமையில் கூறப்படும்).” (அல்-குர்ஆன் 8:35)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை நிராகரிப்பாளர்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்தியை மக்கள் தெளிவாக அறிந்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடன் சீட்டியடிப்பதையும் கை தட்டி ஆரவாரிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

சீட்டியடித்துக் கை தட்டுவதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப் படுத்துவதும் அவர்களின் மற்றொரு இலக்காக இருந்தது.

அல்லாஹ்வின் மார்க்கம் மக்களுக்குப் போய்ச் சேர்வதைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு அவர்கள் தயாராகவே இருந்தார்கள்; செய்தும் காட்டினார்கள்.

அன்று கஃபாவில் கூடி இப்படிப்பட்ட இழிசெயல்களைச் செய்த நிராகரிப்பாளரைப் பார்த்துத்தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியுள்ளான். இவ்வசனத்தின் எச்சரிக்கை அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே பொருந்தும்!

இச்செயலை முஸ்லிம்களாகிய நாமும் செய்வதன் மூலம் அவ்விஸ்லாமிய விரோதிகளைப் பின்பற்றுகிறோம் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

எவ்வளவு சிறந்த பேச்சாளராக இருந்தாலும் அவரின் பேச்சைப் பாராட்டுகிறோம் என்ற நோக்கில் கை தட்டும் பார்வையாளர்களைப் பார்க்கின்றோம். அக்கைதட்டலுக்கிடையே, பேச்சின் ஒரு பகுதி, மக்களைச் சென்றடையாமல் போவதையும் அவதானிக்கின்றோம்.

இதன் காரணமாக ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு சொல், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அபார வளர்ச்சி பெற்றுள்ள ஊடகத்துறையின் மூலம் உலகின் சகல சந்து பொந்துகளிலெல்லாம் பரப்பப்படுகின்றது. பாரதூரமான விளைவுகளுக்கு அது வழிவகுத்து விடுவதுமுண்டு.

அன்று சீரழிந்து போயிருந்த மனிதர்களை நல்வழிப்படுத்த ஓர் அழகிய முன்மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அந்த மாமனிதர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புண்படுத்துவதற்காக, அவர்களின் செய்தி மற்றவர்களை அடைவதைத் தடுப்பதற்காக நிராகரிப்பாளர்கள் கையாண்ட இக்கைதட்டும் பழக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

சின்னஞ்சிறிய செயல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு அண்மைக்கால சரித்திரத்திலிருந்தே நாம் படிப்பினை பெறலாம்.

ஃபாலஸ்தீனத்தின் சிறுவர்கள் தொடங்கிய சின்னஞ்சிறிய வேலையொன்றுதான் சிறுசிறு கற்களை இஸ்ரவேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மீது விட்டெறிந்தமை!

அச்சின்னஞ்சிறிய வேலை, ‘இன்திஃபாதா’ என்ற அறிமுகத்துடன் ஃபாலஸ்தீன விடுதலை எழுச்சிக்குப் புத்துயிரளித்தது.

ஊடகங்களின் உட்பக்கங்களுக்கு மட்டுமே சொந்தமாகியிருந்த ஃபாலஸ்தீனப் போராட்டம் மீண்டும் முன்பக்கச் செய்தியானது!

தொலைக்காட்சிச் செய்திகளில் ஒவ்வொரு செய்திக்கான நேரத்திலும் முதல் செய்தியானது!

சிறுசிறு கற்களை வீசியெறியும் சின்னஞ்சிறார்களின் வீரமான பங்களிப்புகள்தான் சின்னத்திரைகளை ஆக்கிரமித்தன!

மனித இனமே வெட்கித் தலை குனியும் அளவிற்கு ஃபாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள், அக்கிரமங்கள், உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லப்பட்டன!

உலகமாந்தர் மத்தியில் அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதைப் பார்த்தோம். முஸ்லிம்கள் மட்டுமல்ல முஸ்லிமல்லாத மனித நேயத்தை மதிக்கும் மாற்று மதத்தவர்களும் அவ்வநியாயங்களுக்கெதிராகக் குரல் கொடுத்தார்கள்.

இதற்கெல்லாம் காரணியாகவிருந்தது இச்சிறிய செயல்தான்!

ஆகவே, மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் தூது மற்றவர்களுக்குச் சென்றடைவதைத் தடுப்பதற்காகவுமே நிராகரிப்பாளர்களால் கையாளப்பட்ட இந்தக் கைதட்டலை நாம் சிறிய விடயம் என்று நினைத்து விடாமல் அதை நிறுத்தித்தான் ஆக வேண்டும்.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடும் நாம் அவன் விரும்பாத எந்தச் செயலாக இருந்தாலும், சிறியதாக நமக்குத் தோன்றினாலும், அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் நாம் அவனைப் பரிபூரணமாக அவனுக்கே உண்டான பண்புகளோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி!

ஆகவே, சின்னச் சின்ன விடயங்கள் என்று எதையுமே எடை போடுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சிறியதோ பெரியதோ எதுவாயிருந்தாலும் அனைத்திற்கும் அல்-குர்ஆனிலிருந்தும் அல்-ஹதீஸிலிருந்தும் மட்டுமே வழிகாட்டல்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஒரு முஸ்லிம் உணர்ந்து விசுவாசித்துச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படுவது, நிச்சயமாக, சாபத்திற்குள்ளானவர்களுக்கான நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற ஒரு காரணியாக அமையும்.

- எனது இவ்வாக்கம் இதுதான் இஸ்லாம்.காம் - idhuthanislam.com - ல் ஏலவே பிரசுரமாகியது. அவ்விணையதளத்திற்கு நன்றி.

JJJ

1 comment:

  1. தொழுகையின் போது இமாம் பிழைவிட்டால் அதனை சுட்டிக்காட்ட(பெண்களுக்கு மாத்திரம் ) கைகளின் மூலம் சத்தம் எழுப்ப அனுமதியிருக்கிறதே. அல்லாஹ் ஹராத்தை தொழுகையில் அனுமதித்துள்ளானா? என்ற கேள்வி என் நண்பர் ஒருவர் மனதில் எழுந்துள்ளது இதற்கும் தக்க பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
    www.facebook.com/valifarsangam

    ReplyDelete