

மேகங்கள் என்றால் அவை மழையைக் கொண்டு வரும் கருமேகங்களாயினும் அல்லது அங்கும் இங்கும் வெளிரிப்போய் சிறகடித்துப் பறக்கும் சிறு சிறு மேகக் கூட்டங்களாயினும் அவை கண்ணுக்கு விருந்தாய் மனதுக்கு இன்பமூட்டும் காட்சிகளை துளிர் விட்டுக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இவ்விரண்டு காட்சிகளுமே எனது வீட்டின் முன்பகுதியில் இருந்து கையடக்கத் தொலைபேசியின் Digital Camara வில் பதிந்தவையே!
அச்சத்தையூட்டும் மேகங்கள்! அவற்றினால் ஏற்படக் கூடிய நன்மைகளை நமக்கு அளித்து அவற்றினால் ஏற்படக் கூடிய அழிவுகளிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வின் அதியற்புதப் படைப்புகளின் எழில் வடிவங்கள் நம் கண் முன்னே நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறிப் புதுப்புது வண்ணங்களில், வடிவங்களில் காட்சி தந்து நம்மை ஆனந்தப்படுத்துவதை அவதானிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் வல்லமையை உண்ராமலிருக்க மாட்டான்.
மேகங்கள் பற்றி அல்-குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்த்து சிறிது நேரம் சிந்திப்போமா?
ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழி கேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள். அல்லது (இவர்களது தன்மை) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
(அல்-குர்ஆன் 2:17-19)
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா(எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்,” (என்று கூறினோம்.) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
(அல்-குர்ஆன் 2:57)
மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும் வானவர்களும் வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும். (அல்-குர்ஆன் 2:210)
தந்து அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்-குர்ஆன் 7:57)
அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாய்த்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது, “உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!” என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா(எனும் உண)வை இறக்கினோம். உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! (என்றோம்.) அவர்கள் நமக்குட் தீங்கு இழைக்கவில்லை. மாறாக, தமக்கே தீங்கிழைத்தனர்.
(அல்-குர்ஆன் 7:160)
அச்சத்தையும், எதிர்பார்ப்பயும் ஏற்படுத்தக் கூடயதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
(அல்-குர்ஆன் 13:12)
பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம். எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம். சூழ் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை. நாமே உயிப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நாமே உரிமையாளர்களாவோம்.
(அல்-குர்ஆன் 15:19-23)
(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன். அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை அதன் மேலெ மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.
(அல்-குர்ஆன் 24:39-40)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது. அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.
(அல்-குர்ஆன் 24:42-43)
“நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா?” என்று நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப்பற்றி பெருமையடிக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர். வானவர்களை அவர்கள் காணும் நாளில் குற்றவாளிகளுக்கு அனறைய தினம் எந்த நற்செய்தியும் இருக்காது. “(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன,” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம். அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள். (அது) மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள். (அல்-குர்ஆன் 25:21-25)
அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
(அல்-குர்ஆன் 26:189)
மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும். இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.
(அல்-குர்ஆன் 27:88)
அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
(அல்-குர்ஆன் 30:48)
அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே!
(அல்-குர்ஆன் 35:09)
தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். “இது நமக்கு மழை பொழியும் மேகமே,” எனவும் கூறினர். “இல்லை! எதற்கு அவரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்,” (என்று கூறப்பட்டது.)
(அல்-குர்ஆன் 46:24)
வானிலிருந்து ஒரு பகுதி விழுவதை அவர்கள் கண்டால், “அது அடர்ந்த மேகம்,” என்று கூறுவார்கள்.
(அல்-குர்ஆன் 52:44)
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இற்க்கினீர்களா அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கி இருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?
(அல்-குர்ஆன் 56:68-70)
தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார் மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.
குறிப்பு: அல்-குர்ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

No comments:
Post a Comment