Saturday, November 28, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு - பாகம் 3




தஸ்பீஹ் செய்யும் காலணி!



அபூ பௌஸீமா




சல்மான் ருஷ்டியினதும் தஸ்லீமா நஸ்ரினதும் ஆசிரியர் யார் என்பதை இனம் காண முடியும். அவரின் ஆக்கங்களுக்கான தீனி, தீன் என்ற பெயரிலே பள்ளிகளில் வலம் வருகிறது.


உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். அமல்களின் சிறப்புகள் என்ற அதே கிதாபு. தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதி; பக்கம் 101, தலைப்பு: 1. தஸ்பீஹ் செய்யும் காலணி.


வாசியுங்கள்!

பிரபல் சூஃபி, ஷைகு அப்துல் வாஹிது ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகிறார்கள். “ஒரு நாள் இரவு எனக்குத் தூக்கம் மிகைக்கவே வழ்க்கமாக ஓதும் திக்ருகளை ஓதாமல் தூங்கி விட்டேன். கனவில் அழகான ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடைகள் அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகளும் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. அவள் என்னை நோக்கி, ‘நீர் என்னை அடைய முயற்சி செய்வீராக! நான் உம்மை அடைய முயற்சி செய்கிறேன்!’ என்று கூறிச் சில பேரின்பக் கீதங்களைப் பாடினாள். பிறகு நான் விழித்துக் கொண்டேன். இனிமேல் இரவில் தூங்கக்கூடாது என்று சத்தியமிட்டுக் கொண்டேன்.”


இதன்பின் அன்னார் நாற்பது ஆண்டுகள் இஷாவுக்குச் செய்த உலூவுடன் சுப்ஹையும் தொழுது வந்தார்கள் என்று கூறப்படுகிறது.


இந்தக் கதையை உன்னிப்பாகச் சிந்தனையோடு கவனிக்கவும். இதை வாசிக்கும்போது கதைக்குள்ளே இருக்கக் கூடிய ஆபாசத்தைப் பலர் விளங்கிக் கொள்வதில்லை; அல்லது விளங்கியதாகக் காட்டிக் கொள்வதில்லை; அல்லது பக்தியோடு தலையில் கை வைத்துக் கொண்டு கண்மூடி, வாய்பொத்தி, காதடைத்து இருந்து விடுகிறார்கள்.


அப்படியுமல்ல, உலமாக்கள் முன்னின்று நடத்துகிற காரணத்தினால் பேசாமலிருந்து விடுகிறார்கள்; அல்லது பெரும்பான்மையான மக்கள் வாய்மூடி இருக்கிறார்களே, நமக்கேன் இந்த வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்ற எண்ணப்பாட்டில் எப்படியோ வாழ்ந்து விட்டுப் போவோம் என்றிருக்கிறார்கள்.


இப்படி ஒவ்வொருவரும் மௌனம் சாதிக்கிறார்கள்! இந்த மௌனம் எந்த அளவுக்கு நமது சமூகத்தை இட்டுச் செல்கிறதென்றால் வக்கிர புத்தியுள்ள சிலர் அல்லாஹ்வின் தஸ்பீஹ்களை முன்காட்டி காமக் கதைகள் எழுத வழி சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


‘பிரபல’ ஷைகுக்குக் கனவில் கூட தெரிவது அழகான பெண்கள்தான்! அழகான பெண்ணை அவள் உடுத்தியிருக்கும் உடையோடு வர்ணித்துவிட்டுத் தமது மாணாக்கர் தம்மைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரோ என்ற பயம் வந்து விட்டதால் அவள் போட்டிருக்கும் காலணி தஸ்பீஹ் செய்ததாகக் கதை விடுகிறார். அதை அணிந்திருந்த அழகி, பச்சை பட்டாடை உடுத்த அழகி, காதல் கணை தொடுக்கிறாளாம்.


சுருக்கமாகச் சொன்னால், தஸ்பீஹ் செய்யக் கூடிய காலணி ஒரு காமப் பாட்டுப் பாடும் ஒருத்தியின் கால்களை அலங்கரிக்கிறது என்பதுதான் கதை!


பச்சைப் பாவாடை ஏன் தஸ்பீஹ் செய்யவில்லை? நஜீஸாகி விட்டதோ?


அல்லாஹ்வைப் புகழும் தஸ்பீஹ் எங்கே பொருந்துகிறது இவர்களுடைய கிஸ்ஸாக்களில் என்று பார்த்தீர்களா? அது காலுக்குச் செருப்பாகப் போடப் பட்டிருக்கிறது.


‘ஷைகும் ஹதீஸ், குத்புல் அக்தாப்’ ஜக்கரிய்யா ஹஜ்ரத் எப்படி தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் பார்த்தீர்களா?


ஸல்மான் ருஷதியோடும், தஸ்லீமா நஸ்ரினோடும் கை கோர்த்திருக்கிறார்; இல்லை, ஸல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரினும் ஜக்கரிய்யா ஹஜ்ரத்தோடு கை கோர்த்திருக்கிறார்கள்!


இன்னும் கண்மூடிக் குருடாகவே இருக்கத் தீர்மானித்து விட்டவர்கள் ஏராளம் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.


இவர்களுக்கெல்லாம் சொல்வது இதுதான்.


அல்லாஹ்வுடைய எச்சரிக்கையை ஏளனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! அவன் அனைத்தையும் அறிந்தவன். அவன் தவறு செய்யாத நீதிபதி. தானே இரட்சகன் என்று பிரகடனப் படுத்திய ஃபிர்அவ்னுடைய ஆட்களுக்கும், அதற்கு முன்னர் இருந்தோருக்கும் நடந்ததை ஞாபகமூட்டி எச்சரிக்கிறான்:

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்-குர்ஆன்: ஸூரா அல் அன்ஃபால் – 8:52-53)


ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் மாறாகவே நட்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சமூகம் அல்லாஹ்வின் சாபத்திற்காளாகும் என்பதில் சந்தேகமில்லை.


அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து இப்படிப்பட்ட கதைகள் மூலம் அல்லாஹ்வின் வேதத்தை ஏளனப் படுத்தக் கூடியவர்கள்; அப்படிப்பட்ட ஏளனக் கதைகளைப் பள்ளிகளின் வாசிப்பதற்கு திறந்த அனுமதியளித்திருக்கக் கூடிய நிருவாகிகள்; இந்தக் கதைகளுக்கு மார்க்க அந்தஸ்துக் கொடுத்து அவற்றை ஊக்கப்படுத்தும் உலமாக்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் என்று எச்சரிக்கை விடுப்பதைத் தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை.


 நம்மனைவரையும், வேதம் ஓதும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து அல்லாஹ் காப்பாற்றி, யார் யாருக்கெல்லாம் நேர்வழியைக் காட்டினானோ அதே நேர்வழியில் நம்மையும் வழி நடத்தி, மறுமை நாளின் சுட்டெரிக்கும் அந்தப் பெரு நெருப்பிலிருந்து விடுதலை தருவானாக!

Friday, November 27, 2009

ஜிஹாத்

ஜிஹாத் – அறப்போர் 

ஒரு கண்ணோட்டம்


அபூ பௌஸீமா

போர், யுத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு ‘ஜிஹாத்’ என்ற சொல் பிரயோகிக்கப் படுவது சரிதானா என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய மனித நாகரிகத்தின் ஒரு வளர்ச்சிப் படியிலே நாம் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம்.


‘ஜிஹாத்’ என்ற சொற்பிரயோகம் இந்த நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்ததொரு உதாரணம் என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தாகாது. வழக்கிலிருந்த ‘ஹர்(B)ப்’ என்ற சொல்லும் அதையொத்த சொற்களையும் ‘போர்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகப் பிரயோகிப்பதை இஸ்லாம் முழுமையாக விலக்கிக் கொண்டது. பதிலாக ‘ஜிஹாத்’ என்ற சொல்லை அறிமுகப் படுத்தியது. அந்தச் சொல் வெறும் யுத்தம் மட்டும் என்பதைக் குறித்துக் காட்டாமல் மனித நேயம் பேணும் மகத்தான நாகரிகத்தின் வளர்ச்சிப்படியையும் காட்டி நிற்கிறது.

உரிமைக்காகப் போராடுவது, தற்பாதுகாப்புக்காகப் போராடுவது என்ற குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக யுத்தம் செய்வது என்பது இந்தச் சொற்பிரயோகத்தின் மூலம் ‘அல்லாஹ்வுக்காகப் போராடுவது’ என்ற ஓர் உன்னதமான அர்த்தத்தை அதற்குள் அடக்கியுள்ளது.
மிலேச்சத்தனத்திற்கெல்லாம் யுத்த காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருந்த காலம் அது. அப்படிப்பட்ட சமூக நீதி இருந்த காலத்திலே, யுத்தம் என்பதையும் ஒரு பெரிய சிறப்பான வணக்கமாக வரித்து அங்கேயும் –போர்க் களத்திலும்– சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற மகோன்னத விதி முறைகளை இஸ்லாம் அறிமுகப் படுத்தியது.


ஜிஹாத் என்ற மாத்திரத்தில் அதில் பங்கு பற்றுபவர்களின் உள்ளங்களிலே அல்லாஹ்வின் அச்சம் குடிகொள்கிறது. அல்லாஹ்வுக்காகச் செய்கின்றோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே வரம்பு மீறி விடாமல் பாதுகாவல் தேடிக் கொள்ளும் இஸ்லாமியப் பண்பு அவர்களிடம் உணர்வு பூர்வமாகவே குடிகொள்கிறது.

அப்படிப்பட்டவர்கள் முழுக்க முழுக்கத் தமது பங்களிப்பை அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தில் செய்யும்போது, அந்த மனப்பக்குவத்தை அடையும் போது, அநியாயங்களுக்குத் துணை போக மாட்டார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எழ முடியாது. அல்லாஹ்வுடைய சொல்லைச் சொற்பக் கிரயத்துக்கு விற்று விடுபவர்கள் இந்த எல்லைக் கோட்டுக்குள் அடங்க மாட்டார்கள்.

ஜிஹாத் என்ற அரபிப் பதத்தை மிகச் சுருக்கமாக தமிழில் விளக்கப் புகுந்தால் இப்படிச் சொல்லலாம்:

“தான் கொண்ட கொள்கைக்காக ஒருவன் தன்னாலான முழு முயற்சியையும் பிரயோகித்தல்.”

இஸ்லாம் மனித நலனையே முழுமுதற் கொள்கையாக வகுத்துள்ளது. அதற்கெனவுள்ள தனித்துவமான வாழ்க்கைத் திட்டத்தையும் செயற்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரலும் தன்னகத்தே கொண்டது.
மனிதர்களின் மனங்களை நன்மையின் பக்கம் திருப்புவதற்காக எழுதுவதும், பிரசங்கம் பண்ணுவதும் கூட ஜிஹாத் தான். இம்முயற்சிகளுக்காகச் செலவு செய்து, தமது உடலால், உள்ளத்தால் சிரமத்தைச் செலவிடுவதும் ஜிஹாத் தான்.

ஒரு துப்பாக்கியைப் போலவே பேனாவும் ஜிஹாதிற்காக உயர்த்தப்படும் ஓர் ஆயுதம்தான்! அதற்காகச் செலவிடப்படும் பணமும் ஜிஹாதிற்கான ஆயுதம்தான்!
கருத்து வேற்றுமைகளை முன்னுக்குக் கொண்டு வந்து ஓர் ஒழுங்கமைப்பின்றி ‘இஸ்லாமியப் பெயர் தாங்கிகள்’தலைமத்துவம் கொடுத்து அறிவிக்கப்படும் போராட்டமெல்லாம் ஜிஹாத் என்ற பதப் பிரயோகத்திற்குள் கொண்டுவரக் கூடிய அல்லாஹ்வுக்கான போராட்டமாக ஆக மாட்டா.

அல்லாஹ்வின் பக்கம் மக்களை பலாத்காரமாக இழுத்து இஸ்லாத்தை ஏற்கச் செய்வதும் ஜிஹாத் என்று மக்களுக்குத் தவறான விளக்கமளிக்கப் பட்டுள்ளது. இப்போதும் சில ஊடகங்கள் அப்படித்தான் அந்த ஜிஹாத் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும், உண்மைக்கப்பால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணத்தோடு மனித நேயத்தை முதல் நோக்காகக் கொண்டு சமூக நலனுக்காக மனிதர்களால் எடுக்கப்படும் நேர்மையான எந்த நடவடிக்கையும் தவறாக முடியாது.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக இந்த விடயத்தை விளக்கியள்ளார்கள்.

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணீயதுதான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்.”

(அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹுல் புகாரி. தமிழாக்கம் ஹதீஸ் எண்: 1 – ரஹ்மத் அறக்கட்டளை பிரசுரம்)

மேற்கூறிய அறிவிப்பிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், இன்று உலகிலே நடைபெறக் கூடிய எல்லாச் செயல்களும் அவற்றின் நோக்கங்களை அடிப்படையாக வைத்தே நியாயப்படுத்தப்படல் வேண்டும்.
தம்மை முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு, இஸ்லாத்திற்காகச் செய்கிறோம் என்று அறிவித்து விட்டால் மட்டும் அவை இஸ்லாத்திற்காகச் செய்யப்பட்டவையாக ஆக முடியாது.  ‘இஸ்லாமிய’என்ற அடைமொழியிட்டுச் செய்யக் கூடிய எல்லாச் செயல்களும் இஸ்லாமிய ஷரீஆவின் கட்டுக்கோப்புக்குள் வந்து விட்டதாகப் பாமர மக்களும், முஸ்லிமல்லாதார்களும் நம்புகின்றனர்.

உண்மையில், கொடூர உள்ளம் கொண்ட, அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சந்தோஷப்படும் பயங்கரவாதிகள் தமது வக்கிர ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஜிஹாத் என்ற பதத்தைத் தாராளமாக உபயோகித்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் அறியாத மக்களின் உணர்வுகளைத் தட்டிவிட்டு அவர்களின் இரத்தப் பசிக்கு அவர்களை ஆதரவாளர்களாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் உலகளாவிய ரீதியில் ஜிஹாத் என்ற பதத்திற்குப் பிழையான அர்த்தத்தைக் கற்பிக்கிறார்கள். ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்று சொல்லும் அளவிற்கு இன்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்படி இஸ்லாத்தைப் பற்றிப் பிழையான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியிலே பரப்புவதில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள். இஸ்லாத்தின் விரோதிகளுக்கு இரண்டாம் இடம்தான். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு மார்க்கம் என்ற ஒரு மனோ நிலையை இஸ்லாத்தைச் சரியாக அறியாத மக்களிடையே – முஸ்லிம்களாக இருந்தாலும், முஸ்லிம் அல்லதாராயிருந்தாலும் – ஏற்படுத்தி விடுகிறார்கள்.
அல்லாஹ்வுக்காகப் போராடுதல் என்ற உன்னதமான அர்த்தத்துக்குக் களங்கம் விளைவித்து அதை உபயோகப்படுத்தி செய்யக் கூடிய நடவடிக்கையெல்லாம் ஜிஹாத் ஆக முடியாது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையிலே நடந்த மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “ஒரு மனிதன் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகின்றார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகின்றார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகின்றார்.  (இவர்களில்) எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(இவர்களில் எவருமே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவராக இல்லை.) எவர் அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்,” என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம்-பாகம் 3. ஹதீஸ் எண். 2810 பிரசுரம்: ரஹ்மத் அறக்கட்டளை)

நிச்சயமாக, இஸ்லாம் அதன் சொல்லாட்சிப்படியே சமாதானத்துக்கான ஒரு மார்க்கமாகும்.

³                                        அநியாயமான யுத்தங்கள் அதன் சரித்திரத்தில் எப்போதும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை.

³                                       ஆக்கிரமிப்பு என்பது இஸ்லாத்தின் கொள்கையிலுமில்லை; அதை இஸ்லாம் சகித்துக் கொள்ளவும் மாட்டாது.

³                                   யார் மீதும் அதிகாரம் செலுத்தி பலாத்காரமாக எதையும் திணிப்பதும் இல்லை.

³                                        இஸ்லாம் அடக்கு முறையாலும் திணிப்பினாலும் பரப்பப் பட்டதுமல்ல. 

மனோ இச்சைக்கு ஆட்பட்டவர்கள் தமக்கு இயைந்தவாறு அர்த்தம் கொடுத்து செயல் படுத்தக் கூடிய பலமற்ற சொல்லாட்சிகள் இஸ்லாமிய ஷரீஆவிலே இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாது என்பது இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையோடு சம்பந்தப்படும் ஒரு முடிவாகும். ஏனென்றால், இஸ்லாமிய ஷரீஆ, அல்-குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மூலாதாரமாகக் கொண்டது. அங்கே, மனித இடைச் செருகல்களுக்கு இடமில்லை.

இஸ்லாம் மிகக் கஷ்டமான கால கட்டங்களிலும் தனித்து நின்று தன்னை இப்படிப்பட்ட அநியாயங்களிலிருந்து சிலிர்த்தெழுந்து விடுவித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால், அது அல்லாஹ்வினால் பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கம்; மனிதர்களுக்கு மறுமை நாள்வரை பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கம். ஆகவே, அதுதான் சமாதானத்தின் வழிகாட்டி; நேர்வழியைக் காட்டும் ஒளிக்கதிர்; அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவன் அல்லாஹ்!

…….இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்…….

(அல்-குர்ஆன்: ஸூரா அல் மாயிதா – 5:3வது வசனத்தின் ஒரு பகுதி)

இவவசனத்தைப் பற்றி ஒரு யஹூதி உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தங்களுக்கு அந்த வசனம் இறங்கியிருந்ததென்றால் அன்றைய தினத்தை தாங்கள் பெரும் பண்டிகைத் தினமாக ஆக்கியிருப்போம் என்று தெரிவித்தார். அது இறங்கிய தினத்தைத் தாம் அறிவதாகவும், அந்தத் தினம் அரஃபாவுடைய தினம் என்றும் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலளித்தார்கள். இந்த விபரம் ஸஹீஹ் புகாரியிலே பதிவாகியுள்ளது. இவ்வசனத்தின் மூலம் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அன்றிருந்த யஹூதிகள் உணர்ந்துதான் இருந்தார்கள்.
ஆனால், நாம் இவ்வசனத்தின் அர்த்தத்தைப் பற்றி அல்லும் பகலும் மேடைகளில் பேசியும், அச்சூடகங்கள் மூலமாகப் பிரசுரித்தும், வலைப்பூக்கள் வாயிலாகப் பதிந்தும் வருகிறோம்; ஏராளமானவர்கள் இவற்றைக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். ஆனால், அதன் தாற்பரியத்தை, அண்ட சராசரங்களும் உள்ளடங்கியிருக்கும் அதன் விரிந்த பாடத்தை உணர்கிறார்களா என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது. சிந்தித்துப் பார்க்க இந்தச் சமூகம் எப்போது முனைப்போடு முன்வரும்?

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கருத்து வேறுபாடு. கருத்து வேறுபாட்டை விமர்சிப்பவனல்ல நான். அந்தக் கருத்துக்கள் வரும் போது அவை அல்-குர்ஆன், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டுக்கும் உட்பட்டது எது என்று பார்த்து அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை உருவாக வேண்டும். அதை விடுத்து நம்மில் பலர் எப்படிப்பட்ட பிழையைச் செய்கிறோம் என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். ஆதாரங்கள் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் எடுத்து வைக்கப்பட்டதன் பின்னாலும் குதர்க்கம் பேசி தமது வாதத்திறமையால் பாமர மக்களை வழிகெடுப்பதுதான் அந்தப் பிழை!

இன்று ஒவ்வொரு முஸ்லிமும் விசேடமாக ஜிஹாத் என்பதின் சரியான விளக்கத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நம்மோடு வாழக் கூடிய முஸ்லிமல்லாதாருக்கு அதன் சரியான விளக்கத்தைச் சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வது ஒவ்வொருவரினதும் கடமை என்பதைக் கட்டாயம் உணர வேண்டும்.
ஆகவே, அருமை இஸ்லாமியச் சகோதரர்களே! இனிமேலும், தெளிவான மார்க்கத்தைத் தெளிவு படுத்தும் பொறுப்பைச் சிலருக்கு மட்டும் காவு கொடுத்துவிட்டுத் தலையாட்டி பொம்மைகளாகவிருந்து வாழ்க்கையை வீணடித்து விடாமல், அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி வாழ முற்படுவோம்.

அவ்வாறு, அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆகிய இரண்டின் பக்கம் நம்மை ஒருமுனைப்படுத்தி செயல் படுவதுதான், இன்ஷா அல்லாஹ், அவலங்கள் நிறைந்த, பொசுக்கிக் கருக்கி விடும் பெரு நெருப்பினாலான நரகத்தில் இருந்து விடுதலை பெற ஒரு காரணியாக அமையும்.


()()()()()()()()()()()o()()()()()()()()()()()
அல்-குர்ஆன் தமிழாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அல்-குர்ஆன் தர்ஜுமாவில் இருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரித்த மூன் பப்ளிஷர்ஸ்க்கும் எனது நன்றி. மேலும், ரஹ்மத் அறக்கட்டளைக்கும் நன்றி.


ஹஜ்ஜுப் பெரு நாள்!?


ஃதுல்ஹிஜ்ஜா 9வது பிறையன்றுதான் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் அரஃபா மைதானத்தில் தரிப்பார்கள். அந்தத் தினத்தை முதலாம் பிறையன்றே அறிவித்து விட்டார்கள்.

இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கக் கூடிய முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தினத்தை அறிவிக்கும் பொறுப்பு சவூதி அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. இதுவும் அல்லாஹ்வுடைய ஏற்பாடுதான்.

இவ்வருடம் அரஃபாவில் ஹஜ்ஜாஜிகள் தரித்து அங்குள்ள பள்ளிவாசலில் நடந்த பிரசங்கத்தை நேரடியாக  ஒளிபரப்பினார்கள். இந்தியா, இலங்கை மட்டுமல்ல உலகம் பூராவுள்ள மக்கள் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார்கள். கிரிகோரியான் நாட்காட்டி (Gregorian Calander) காட்டும் திகதி நவம்பர் மாதம் 26ம் திகதி அது நடந்தது.

அரஃபா தினம் நேற்று, வியாழக்கிழமை, 26.11.2009ம் திகதியாகும். அப்படியானால் ஹஜ்ஜுப் பெருநாள் அதற்கு அடுத்த நாள்தான். அந்த நாள் 27.11.2009ம் திகதி வெள்ளிக்கிழமையாகும். இதை மாற்ற தலை வெடிக்கும் எந்தத் தர்க்கமும் ஏற்புடையதல்ல.

அரஃபாப் பெருவெளி மக்காவில்தான் இருக்கிறது. அது இலங்கையின் மினுவங்கொடையில் இல்லை. இந்தியாவில் சென்னையிலுமில்லை; மும்பையிலுமில்லை; மண்ணடியிலுமில்லை. கொல்கத்தாவிலுமில்லை; கள்ளிக்கோட்டையிலுமில்லை.

அன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் கையடக்கத் தொலைபேசியுமிருக்கவில்லை; நேரடி ஒளிபரப்பு வசதியுள்ள தொலைக்காட்சி சேவைகளுமிருக்கவில்லை. அதனால், இப்போதும் அவற்றைப் பாவித்து அரஃபா நோன்பு வைக்க முடியாது; ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட முடியாது என்று வாதிடுவது தெளிவாகவே அறிவின்மை அல்லது விதண்டாவாதம்.

27.11.2009 ம் திகதி நோன்பு வைத்தவர்கள் தெரிந்து கொண்டே பிழையான தினத்தில் நோன்பு வைத்துள்ளார்கள்!!!

எந்தப் பெரிய அறிஞர் சொன்னாலும் ஹஜ்ஜாஜிகள் அரஃபாப் பெருவெளியிலிருந்து வெளியேறிய அடுத்த நாள் அரஃபா தினமாக ஆக முடியாது; முடியாது; முடியாது.

ஒன்பது நாட்களுக்கு முன்பே அதிகாரம் படைத்தவர்கள் அந்நாட்களை முன் கூட்டியே அறிவித்து விட்டதன் பின் அதை ஏற்க முடியாது என்று  சொல்லும் எவரும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

ஆதாரம் தெளிவாகவே இருப்பதனால் வேறு மேற்கோள்கள் எதுவுமே தேவையில்லை.

கண்மூடிப் பின்பற்றுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

இஸ்லாம் பரிபூரணப் படுத்தப்பட்டுவிட்டது.
உலகம் பூரணப் படுத்தப் பட வில்லை. அது விரிந்து கொண்டே இருக்கும்.

Tuesday, November 24, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு – பாகம் 2


நரகவிடுதலை பெறக் குறுக்குவழி!

கிழக்காசிய நாடுகளிலுள்ள மிக அதிகமான பள்ளிகளில் அல்-குர்ஆனைவிட மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாசிக்கப்படும் கிதாபின் மற்றுமொரு கதையை இன்று படிப்போம்.

புத்தகம் : அமல்களின் சிறப்புகள்
பகுதி: திக்ரின் சிறப்புகள் – ஹதீஸ் 17
உப தலைப்பு: இந்த உம்மத்தினரின் பெருமை
என்னிடமுள்ள கிதாபில் இது அச்சாகியுள்ள பக்கங்கள்: 626-628
(இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள பகுதி பக்கம் 627ன் கடைசிப் பத்தியிலிருந்தாகும்.)

எந்தப் பக்கமும் சாராமல் திறந்த உள்ளங்களோடும் சிந்தனைத் தெளிவோடும் வாசிக்குமாறு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வாசிப்போமா?
“ஷைகு அபூயஜீத் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற பெரியார் கூறுவதாவது: ஒருவர் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’வை எழுபதினாயிரம் தடவை ஓதினால் அவருக்கு நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்” என்று நான் கேள்விப்பட்டு என் மனைவிக்காக எழுபதினாயிரம் தடவை ஓதி ஹதியாச் செய்தேன். எனக்காகவும் அதுபோன்று பல தொகைகளை ஓதி மறுமைக்காகச் சேமித்து வைத்துக் கொண்டேன்.

இந்நிலையில் எங்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் இருந்து வந்தார். அவர் ‘கஷ்ப்’ (ஞான திருஷ்டி) உள்ளவர் என்பதாகவும், சுவர்க்கம், நரகம் சம்பந்தமான காட்சிகளும் அவருக்குத் தெரிகின்றன என்பதாகவும் அவரைப் பற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. அது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ஒரு நாள் அந்த வாலிபர் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகச் சப்தமிட்டு அலரினார். அவருக்கு மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. “என்னுடைய தாயார் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறார், அக்காட்சி எனக்குத் தெரிகிறது” என்று கூறினார்.

குர்தூபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். “அவ்வாலிபருடைய திடுக்கத்தை நான் பார்த்தபோடு, நான் ஓதி வைத்திருந்த கலிமாவிலிருந்து ஒரு எழுபதினாயிரத்தை அவருடைய தாயாருக்கு ஹதியாச் செய்து விட்டால், எழுபதினாயிரம் தடவை கலிமாவை ஓதுவதினால் நரக விடுதலை கிடைக்கும் என்ற விஷயத்தின் உண்மையும், அவ்வாலிபருடைய கஷ்பு சம்பந்தமான சந்தேக நிவர்த்தியும் தெரிய வரும் என்று எண்ணி அவ்வாறே ஹதியாச் செய்தேன். நான் ஹதியாச் செய்ததை எவரிடமும் கூறவில்லை; அது விஷயம் அல்லாஹ்வுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாலிபர் உடனே, “சிறிய தந்தையவர்களே! இப்பொழுது என் தாயார் நரக வேதனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.” என்று கூறினார். இச்சம்பவத்தினால் எனக்கு இரண்டுவிதப் பலன்கள் கிடைத்தன. முதலாவது, எழுபதினாயிரம் தடவை கலிமா ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டிருந்ததை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டாவது, அவ்வாலிபரின் கஷ்பு சம்பந்தமான உறுதியும் ஏற்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை சம்பவங்கள் இந்த உம்மத்தில் நடைபெற்று இருக்கின்றனவோ யாரறிவார்.”

இந்தக் கிதாபுதான் இன்று பள்ளிபள்ளியாக தனிமரியாதை கொடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டு மார்க்கத்தைப் போதிக்கிறது.


சொல்லப்பட்ட சம்பவம் பற்றிச் சிந்தித்தால் அதில் உள்ள அபத்தங்கள் தெளிவாகும். 


படித்தவர்கள், சிந்தனையாளர்கள் கூட இன்று இப்படிப்பட்ட போலிகளுக்குப் பின்னால் வலம் வருவதைப் பார்க்கிறொம்! அப்படிப்பட்டவர்களைக் காட்டி இந்தப் போலிகள் புத்தி குறைந்தவர்களை வழிகெடுக்கிறார்கள்!


அந்த மருத்துவர், இந்த வழக்கறிஞர், அந்த நீதிபதி, இந்தப் போதனாசிரியர், அந்தப் பொறியியலாளர் என்றிப்படி படித்தவர்கள், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களைக் காட்டி வழிகேட்டைச் சந்தைப் படுத்துகிறார்கள்!

இந்தப் படித்தவர்கள் நிச்சயமாகத் தம் புத்தியைக் காவு கொடுத்தது சம்பந்தமாக நாளை மறுமையில் விசாரிக்கப் படுவார்கள் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.


அல்லாஹ் கூறுகிறான்:
ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அலக் – 96:3-5)

அறிவு என்பதும் புத்தி என்பதும் இரு வேறுபட்ட செல்வங்கள். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அறிவைப் பெறலாம். ஆனால், புத்தியின்றேல் அந்த அறிவின் தாக்கம் சமூகத்தை அடையாது. அறிவின் பலனைப் பெறவேண்டுமானால் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் புத்தியாக அதை சமூகமயப்படுத்த வேண்டும். அப்படியில்லாமையால்தான், இன்று பல இடங்களில் ஏட்டறிவைப் பெற்ற அறிவாளிகளை புத்தகப் படிப்பில்லாத புத்திசாலிகள் மிஞ்சி நிற்கிறார்கள்!

அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்:
அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் ஹஜ் – 22:46-47)

அல்லாஹ் மனிதனை விழித்து உலகத்தில் பிரயாணம் செய்து அவனுடைய படைப்பினங்களைப் பார்ப்பதன் மூலம் அவனுடைய வல்லமையை உணர வேண்டாமா என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றான்.

கவலைக்கும் வருதத்திற்குமுள்ள விடயமென்ன என்றால் இந்த கப்ஸாக்களைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அதன் வழி நடப்பவர்கள் உண்மையில் பூமியில் பிரயாணம் செய்கிறார்கள். ஆனால், அல்லாஹ் எதிர்பார்த்தபடி அவர்கள் தம் மனக்கண்களைத் திறந்து கொண்டு செய்கிறார்களில்லை.

அதனால்தான், அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பற்றியோ அல்லது அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற வழிமுறைகள் பற்றியோ எந்தவித அக்கறையுமின்றி கண்மூடித்தனமாக புத்தி மழுங்கி ஷைகுகளையும் பெரியார்களையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமோரிடத்திலே அல்லாஹ்வின் எச்சரிக்கை இப்படிப் பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த எச்சரிக்கைதான் என்ன?

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா: 2:6-7)

திரும்பத் திரும்ப அல்லாஹ் உதாரணங்களையும், அவனுடைய படைப்பின் தாற்பரியங்களையும், அவனுடைய தூதர்களுடைய சரிதங்களையும், அழிக்கப்பட்ட சமுதாயங்களையும் பற்றிச் சொல்லிக் காட்டுகிறான். அவற்றிலிருந்து பாடம் படிக்கும்படி கட்டளையிடுகின்றான். அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான்.

இந்த அடிப்படையை மனதிலிருத்தி மேலே எடுத்துக்காட்டப்பட்ட கதையை கொஞ்சம் அலசுவோம்.

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:

  1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் அன்று அந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டும்?
  2. அவர்களின் ஆணைக்காகக் காத்திருந்து தங்கள் சொத்துக்களையும் குடும்பத்தையும் இழந்த, உயிர்த்தியாகம் செய்த அந்த நபித்தோழர்களுக்கு ஏன் அந்த இழப்புகள்?
  3. பிறந்த மண்ணை விட்டுத் துரத்தப்படுமளவிற்கு ஏன் அவர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்களால் கூட வெறுக்கப்பட்டிருக்க வேண்டும்?
  4. எதற்காக அந்த யுத்தங்கள்?

இப்படி 70,000க்கும் அதிகமான கேள்விகள் எழும்புகின்றன!

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:
Ø      தொழுகை எதற்கு?
Ø      நோன்பு எதற்கு?
Ø      ஸக்காத் எதற்கு?
Ø      ஹஜ் எதற்கு?

இவற்றிற்கும் அதிகமாக:
Ø      நஃபில் தொழுகைகள்,
Ø      ஸுன்னத்தான நோன்புகள்,
Ø      தான தர்மங்கள்,
Ø      உம்ரா,
Ø      உறவினர்களைக் கவனித்தல்,
Ø      அயலவர்களின் நலம் பேணல்

இப்படியான நல்லமல்கள் எதற்காக?

23 ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஏனிந்தக் கஷ்டத்தைக் கொடுத்தான்?

உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப் பட்டதாக அல்லாஹ் சொல்லிக் காட்டும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த மகத்துவமிக்க வழிமுறையை ஏன் அவன் காட்டிக் கொடுக்க மறந்து விட்டான்?

ஷைகு அபூயஜீத் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை மட்டும் சந்திக்க வைத்திருந்தால் போதுமே! அவர் நரகத்திலிருந்து விடுதலை பெறும் இந்தக் குறுக்கு வழியைக் காண்பித்திருப்பாரே!

குறைந்தபட்சம், இப்படி ஒரு ஷைகு வருவார் அவர் சொல்லக் கூடிய திக்ரை அவர் சொல்லித்தருகின்ற படி ஓதி நரக விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும்படியாவது அல்லாஹ் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லையே!

அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் கூட இந்த ஷைகுகளுக்கில்லை. எதை எடுத்தாலும் ஏதோ ஒரு பலனைக் குறிப்பிட்டுக் கதை கட்டித்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளை இது, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் இது என்று கீழ்ப்படியும் தன்மை இல்லை. அப்படியிருக்க எப்படி அல்லாஹ்வின் பொருத்தம் அச்செயல்களில் இருக்கும்.

இஸ்லாமிய நம்பிக்கையை கேவலம் இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டுக் காவு கொடுத்துவிட்டுக் கைசேதப்பட்ட கூட்டத்திலாகி விடாமல் அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!
 

குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

Monday, November 23, 2009

மாற்றுக் கருத்துக் கொள்ளலாமா?

பாகம் 1
அங்கசுத்தி

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டுவிட்டார்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் அஹ்ஸாப் – 33:36)

எவன் ஒருவன் அல்லாஹ்வின் ஒரு கட்டளையில், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு வழிகாட்டல் சம்பந்தமாக மாற்றுக் கருத்துக் கொண்டானோ அவன் வழிகேட்டிலாகி விட்டான் என்பது இந்த வசனம் மூலம் மிகவும் தெளிவாகவே அல்லாஹ் தீர்மானமாக எச்சரிக்கை கலந்த தொனியில் குறிப்பிடுகிறான்.

இன்று நம்மத்தியில் அவ்வாறான மாற்றுக் கருத்துக்கள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முடிந்த அளவு ஒவ்வொன்றாக வாரத்திற்கொன்று வீதம் பார்ப்போம். பார்த்து நாம் அவ்வாறு அந்தந்த விடயங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கின்றோமா என்பதை அல்-குர்ஆன், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒளியில் உரசிப்பார்த்து தவறாயிருந்தால் திருத்தி நேர்வழியில் நடக்கத் திடமான உறுதிப்பாட்டை எடுப்போம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால் நமக்கு நேர்வழியை அவன் காட்டுவான்.

இன்று வுளூ (அங்கசுத்தி) செய்வதில் தலையைத் தடவுதல்  (மஸஹு) செய்தல் பற்றிப் பார்ப்போம்:

அல்லாஹ் அல்-குர் ஆனிலே கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும், கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள். குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தவுமே விரும்புகிறான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் மாயிதா – 5:6)

இனி வுளு (அங்கசுத்தி) பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வழிகாட்டியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்:
அதாவு பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு உளூ செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தமது முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதன்மூலம் தமது வலது கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது கையைக் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தமது தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள். “இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூ செய்ய நான் பார்த்தேன்” எனவும், இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி – தமிழாக்கம் பாகம் 1 ஹதீஸ் இல. 140 - ரஹ்மத் அறக்கட்டளை)

வுளூ எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கும் இன்னுமொரு ஹதீஸ்:
ஹும்ரான் கூறியதாவது:
உதுமான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளின் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினாரகள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் “யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உதுமான் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி – தமிழாக்கம் பாகம் 1 ஹதீஸ் இல. 159 - ரஹ்மத் அறக்கட்டளை)

வுளூ எப்படிச் செய்ய வேண்டுமென்ற விளக்கமான மேலும் பல ஹதீஸ்கள் தொடர்ந்து பதியப்பட்டுள்ளதை ஹதீஸ் நூல்களிலே பார்க்கிறோம்.

இங்கே, வுளூ (அங்கசுத்தி) செய்யும் போது குறிப்பிட்டுக் காட்டிய அல்-குர் ஆன் வசனம் தெளிவாக உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையை முன்வைக்கின்றது. தலையை எப்படித் தடவ வேண்டும் என்பதை ஸஹாபாக்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

ஆனால், இன்று பெருமளவிலான முஸ்லிம்கள் தலையைத் தடவுவதாக நினைத்துக் கொண்டு தலையின் முன்னெற்றியில் அல்லது பக்கவாட்டில் சில் முடிகளை இலேசாகத்தடவிக் கொள்கிறார்கள். இவர்கள் வுளூ செய்யவில்லை! தொழுகைகளின் நிலை என்ன? அல்லாஹ்வே அறிந்தவன்!

அல்லாஹ் சொல்லித்தந்த ஒரு விடயத்தில் இவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டு அந்த விடயத்தை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து காட்டிய முறைக்கு மாற்றமாகச் செய்கிறார்கள்.

இப்படிச் செய்யக் கூடியவர்களே! அல்லாஹ்வுடைய கட்டளையையும் அதற்கு மாற்றமாகச் செய்பவர்கள் பற்றிய எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள். உடனடியாகவே உங்களுடைய நிலைப்பாடுகளை அல்லாஹ்வும், அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொன்ன செய்து காட்டிய முறைப்படி சொல்லிச் செய்வதற்கு முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

வெற்றியாளர்கள் யாரென்றால் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுவார்கள்; அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கட்டுப் படுவார்கள். மூன்றாவது ஆள் அங்கே பின்பற்றப்பட மாட்டார்!
                                தொடரும்…………..

குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.