Friday, November 27, 2009

ஜிஹாத்

ஜிஹாத் – அறப்போர் 

ஒரு கண்ணோட்டம்


அபூ பௌஸீமா

போர், யுத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு ‘ஜிஹாத்’ என்ற சொல் பிரயோகிக்கப் படுவது சரிதானா என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய மனித நாகரிகத்தின் ஒரு வளர்ச்சிப் படியிலே நாம் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம்.


‘ஜிஹாத்’ என்ற சொற்பிரயோகம் இந்த நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்ததொரு உதாரணம் என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தாகாது. வழக்கிலிருந்த ‘ஹர்(B)ப்’ என்ற சொல்லும் அதையொத்த சொற்களையும் ‘போர்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகப் பிரயோகிப்பதை இஸ்லாம் முழுமையாக விலக்கிக் கொண்டது. பதிலாக ‘ஜிஹாத்’ என்ற சொல்லை அறிமுகப் படுத்தியது. அந்தச் சொல் வெறும் யுத்தம் மட்டும் என்பதைக் குறித்துக் காட்டாமல் மனித நேயம் பேணும் மகத்தான நாகரிகத்தின் வளர்ச்சிப்படியையும் காட்டி நிற்கிறது.

உரிமைக்காகப் போராடுவது, தற்பாதுகாப்புக்காகப் போராடுவது என்ற குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக யுத்தம் செய்வது என்பது இந்தச் சொற்பிரயோகத்தின் மூலம் ‘அல்லாஹ்வுக்காகப் போராடுவது’ என்ற ஓர் உன்னதமான அர்த்தத்தை அதற்குள் அடக்கியுள்ளது.
மிலேச்சத்தனத்திற்கெல்லாம் யுத்த காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருந்த காலம் அது. அப்படிப்பட்ட சமூக நீதி இருந்த காலத்திலே, யுத்தம் என்பதையும் ஒரு பெரிய சிறப்பான வணக்கமாக வரித்து அங்கேயும் –போர்க் களத்திலும்– சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற மகோன்னத விதி முறைகளை இஸ்லாம் அறிமுகப் படுத்தியது.


ஜிஹாத் என்ற மாத்திரத்தில் அதில் பங்கு பற்றுபவர்களின் உள்ளங்களிலே அல்லாஹ்வின் அச்சம் குடிகொள்கிறது. அல்லாஹ்வுக்காகச் செய்கின்றோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே வரம்பு மீறி விடாமல் பாதுகாவல் தேடிக் கொள்ளும் இஸ்லாமியப் பண்பு அவர்களிடம் உணர்வு பூர்வமாகவே குடிகொள்கிறது.

அப்படிப்பட்டவர்கள் முழுக்க முழுக்கத் தமது பங்களிப்பை அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தில் செய்யும்போது, அந்த மனப்பக்குவத்தை அடையும் போது, அநியாயங்களுக்குத் துணை போக மாட்டார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எழ முடியாது. அல்லாஹ்வுடைய சொல்லைச் சொற்பக் கிரயத்துக்கு விற்று விடுபவர்கள் இந்த எல்லைக் கோட்டுக்குள் அடங்க மாட்டார்கள்.

ஜிஹாத் என்ற அரபிப் பதத்தை மிகச் சுருக்கமாக தமிழில் விளக்கப் புகுந்தால் இப்படிச் சொல்லலாம்:

“தான் கொண்ட கொள்கைக்காக ஒருவன் தன்னாலான முழு முயற்சியையும் பிரயோகித்தல்.”

இஸ்லாம் மனித நலனையே முழுமுதற் கொள்கையாக வகுத்துள்ளது. அதற்கெனவுள்ள தனித்துவமான வாழ்க்கைத் திட்டத்தையும் செயற்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரலும் தன்னகத்தே கொண்டது.
மனிதர்களின் மனங்களை நன்மையின் பக்கம் திருப்புவதற்காக எழுதுவதும், பிரசங்கம் பண்ணுவதும் கூட ஜிஹாத் தான். இம்முயற்சிகளுக்காகச் செலவு செய்து, தமது உடலால், உள்ளத்தால் சிரமத்தைச் செலவிடுவதும் ஜிஹாத் தான்.

ஒரு துப்பாக்கியைப் போலவே பேனாவும் ஜிஹாதிற்காக உயர்த்தப்படும் ஓர் ஆயுதம்தான்! அதற்காகச் செலவிடப்படும் பணமும் ஜிஹாதிற்கான ஆயுதம்தான்!
கருத்து வேற்றுமைகளை முன்னுக்குக் கொண்டு வந்து ஓர் ஒழுங்கமைப்பின்றி ‘இஸ்லாமியப் பெயர் தாங்கிகள்’தலைமத்துவம் கொடுத்து அறிவிக்கப்படும் போராட்டமெல்லாம் ஜிஹாத் என்ற பதப் பிரயோகத்திற்குள் கொண்டுவரக் கூடிய அல்லாஹ்வுக்கான போராட்டமாக ஆக மாட்டா.

அல்லாஹ்வின் பக்கம் மக்களை பலாத்காரமாக இழுத்து இஸ்லாத்தை ஏற்கச் செய்வதும் ஜிஹாத் என்று மக்களுக்குத் தவறான விளக்கமளிக்கப் பட்டுள்ளது. இப்போதும் சில ஊடகங்கள் அப்படித்தான் அந்த ஜிஹாத் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும், உண்மைக்கப்பால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணத்தோடு மனித நேயத்தை முதல் நோக்காகக் கொண்டு சமூக நலனுக்காக மனிதர்களால் எடுக்கப்படும் நேர்மையான எந்த நடவடிக்கையும் தவறாக முடியாது.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக இந்த விடயத்தை விளக்கியள்ளார்கள்.

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணீயதுதான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்.”

(அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹுல் புகாரி. தமிழாக்கம் ஹதீஸ் எண்: 1 – ரஹ்மத் அறக்கட்டளை பிரசுரம்)

மேற்கூறிய அறிவிப்பிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், இன்று உலகிலே நடைபெறக் கூடிய எல்லாச் செயல்களும் அவற்றின் நோக்கங்களை அடிப்படையாக வைத்தே நியாயப்படுத்தப்படல் வேண்டும்.
தம்மை முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு, இஸ்லாத்திற்காகச் செய்கிறோம் என்று அறிவித்து விட்டால் மட்டும் அவை இஸ்லாத்திற்காகச் செய்யப்பட்டவையாக ஆக முடியாது.  ‘இஸ்லாமிய’என்ற அடைமொழியிட்டுச் செய்யக் கூடிய எல்லாச் செயல்களும் இஸ்லாமிய ஷரீஆவின் கட்டுக்கோப்புக்குள் வந்து விட்டதாகப் பாமர மக்களும், முஸ்லிமல்லாதார்களும் நம்புகின்றனர்.

உண்மையில், கொடூர உள்ளம் கொண்ட, அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சந்தோஷப்படும் பயங்கரவாதிகள் தமது வக்கிர ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஜிஹாத் என்ற பதத்தைத் தாராளமாக உபயோகித்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் அறியாத மக்களின் உணர்வுகளைத் தட்டிவிட்டு அவர்களின் இரத்தப் பசிக்கு அவர்களை ஆதரவாளர்களாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் உலகளாவிய ரீதியில் ஜிஹாத் என்ற பதத்திற்குப் பிழையான அர்த்தத்தைக் கற்பிக்கிறார்கள். ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்று சொல்லும் அளவிற்கு இன்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்படி இஸ்லாத்தைப் பற்றிப் பிழையான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியிலே பரப்புவதில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள். இஸ்லாத்தின் விரோதிகளுக்கு இரண்டாம் இடம்தான். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு மார்க்கம் என்ற ஒரு மனோ நிலையை இஸ்லாத்தைச் சரியாக அறியாத மக்களிடையே – முஸ்லிம்களாக இருந்தாலும், முஸ்லிம் அல்லதாராயிருந்தாலும் – ஏற்படுத்தி விடுகிறார்கள்.
அல்லாஹ்வுக்காகப் போராடுதல் என்ற உன்னதமான அர்த்தத்துக்குக் களங்கம் விளைவித்து அதை உபயோகப்படுத்தி செய்யக் கூடிய நடவடிக்கையெல்லாம் ஜிஹாத் ஆக முடியாது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையிலே நடந்த மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “ஒரு மனிதன் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகின்றார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகின்றார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகின்றார்.  (இவர்களில்) எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(இவர்களில் எவருமே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவராக இல்லை.) எவர் அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்,” என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம்-பாகம் 3. ஹதீஸ் எண். 2810 பிரசுரம்: ரஹ்மத் அறக்கட்டளை)

நிச்சயமாக, இஸ்லாம் அதன் சொல்லாட்சிப்படியே சமாதானத்துக்கான ஒரு மார்க்கமாகும்.

³                                        அநியாயமான யுத்தங்கள் அதன் சரித்திரத்தில் எப்போதும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை.

³                                       ஆக்கிரமிப்பு என்பது இஸ்லாத்தின் கொள்கையிலுமில்லை; அதை இஸ்லாம் சகித்துக் கொள்ளவும் மாட்டாது.

³                                   யார் மீதும் அதிகாரம் செலுத்தி பலாத்காரமாக எதையும் திணிப்பதும் இல்லை.

³                                        இஸ்லாம் அடக்கு முறையாலும் திணிப்பினாலும் பரப்பப் பட்டதுமல்ல. 

மனோ இச்சைக்கு ஆட்பட்டவர்கள் தமக்கு இயைந்தவாறு அர்த்தம் கொடுத்து செயல் படுத்தக் கூடிய பலமற்ற சொல்லாட்சிகள் இஸ்லாமிய ஷரீஆவிலே இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாது என்பது இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையோடு சம்பந்தப்படும் ஒரு முடிவாகும். ஏனென்றால், இஸ்லாமிய ஷரீஆ, அல்-குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மூலாதாரமாகக் கொண்டது. அங்கே, மனித இடைச் செருகல்களுக்கு இடமில்லை.

இஸ்லாம் மிகக் கஷ்டமான கால கட்டங்களிலும் தனித்து நின்று தன்னை இப்படிப்பட்ட அநியாயங்களிலிருந்து சிலிர்த்தெழுந்து விடுவித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால், அது அல்லாஹ்வினால் பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கம்; மனிதர்களுக்கு மறுமை நாள்வரை பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கம். ஆகவே, அதுதான் சமாதானத்தின் வழிகாட்டி; நேர்வழியைக் காட்டும் ஒளிக்கதிர்; அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவன் அல்லாஹ்!

…….இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்…….

(அல்-குர்ஆன்: ஸூரா அல் மாயிதா – 5:3வது வசனத்தின் ஒரு பகுதி)

இவவசனத்தைப் பற்றி ஒரு யஹூதி உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தங்களுக்கு அந்த வசனம் இறங்கியிருந்ததென்றால் அன்றைய தினத்தை தாங்கள் பெரும் பண்டிகைத் தினமாக ஆக்கியிருப்போம் என்று தெரிவித்தார். அது இறங்கிய தினத்தைத் தாம் அறிவதாகவும், அந்தத் தினம் அரஃபாவுடைய தினம் என்றும் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலளித்தார்கள். இந்த விபரம் ஸஹீஹ் புகாரியிலே பதிவாகியுள்ளது. இவ்வசனத்தின் மூலம் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அன்றிருந்த யஹூதிகள் உணர்ந்துதான் இருந்தார்கள்.
ஆனால், நாம் இவ்வசனத்தின் அர்த்தத்தைப் பற்றி அல்லும் பகலும் மேடைகளில் பேசியும், அச்சூடகங்கள் மூலமாகப் பிரசுரித்தும், வலைப்பூக்கள் வாயிலாகப் பதிந்தும் வருகிறோம்; ஏராளமானவர்கள் இவற்றைக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். ஆனால், அதன் தாற்பரியத்தை, அண்ட சராசரங்களும் உள்ளடங்கியிருக்கும் அதன் விரிந்த பாடத்தை உணர்கிறார்களா என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது. சிந்தித்துப் பார்க்க இந்தச் சமூகம் எப்போது முனைப்போடு முன்வரும்?

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கருத்து வேறுபாடு. கருத்து வேறுபாட்டை விமர்சிப்பவனல்ல நான். அந்தக் கருத்துக்கள் வரும் போது அவை அல்-குர்ஆன், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டுக்கும் உட்பட்டது எது என்று பார்த்து அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை உருவாக வேண்டும். அதை விடுத்து நம்மில் பலர் எப்படிப்பட்ட பிழையைச் செய்கிறோம் என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். ஆதாரங்கள் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் எடுத்து வைக்கப்பட்டதன் பின்னாலும் குதர்க்கம் பேசி தமது வாதத்திறமையால் பாமர மக்களை வழிகெடுப்பதுதான் அந்தப் பிழை!

இன்று ஒவ்வொரு முஸ்லிமும் விசேடமாக ஜிஹாத் என்பதின் சரியான விளக்கத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நம்மோடு வாழக் கூடிய முஸ்லிமல்லாதாருக்கு அதன் சரியான விளக்கத்தைச் சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வது ஒவ்வொருவரினதும் கடமை என்பதைக் கட்டாயம் உணர வேண்டும்.
ஆகவே, அருமை இஸ்லாமியச் சகோதரர்களே! இனிமேலும், தெளிவான மார்க்கத்தைத் தெளிவு படுத்தும் பொறுப்பைச் சிலருக்கு மட்டும் காவு கொடுத்துவிட்டுத் தலையாட்டி பொம்மைகளாகவிருந்து வாழ்க்கையை வீணடித்து விடாமல், அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி வாழ முற்படுவோம்.

அவ்வாறு, அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆகிய இரண்டின் பக்கம் நம்மை ஒருமுனைப்படுத்தி செயல் படுவதுதான், இன்ஷா அல்லாஹ், அவலங்கள் நிறைந்த, பொசுக்கிக் கருக்கி விடும் பெரு நெருப்பினாலான நரகத்தில் இருந்து விடுதலை பெற ஒரு காரணியாக அமையும்.


()()()()()()()()()()()o()()()()()()()()()()()
அல்-குர்ஆன் தமிழாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அல்-குர்ஆன் தர்ஜுமாவில் இருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரித்த மூன் பப்ளிஷர்ஸ்க்கும் எனது நன்றி. மேலும், ரஹ்மத் அறக்கட்டளைக்கும் நன்றி.


No comments:

Post a Comment