Saturday, November 28, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு - பாகம் 3




தஸ்பீஹ் செய்யும் காலணி!



அபூ பௌஸீமா




சல்மான் ருஷ்டியினதும் தஸ்லீமா நஸ்ரினதும் ஆசிரியர் யார் என்பதை இனம் காண முடியும். அவரின் ஆக்கங்களுக்கான தீனி, தீன் என்ற பெயரிலே பள்ளிகளில் வலம் வருகிறது.


உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். அமல்களின் சிறப்புகள் என்ற அதே கிதாபு. தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதி; பக்கம் 101, தலைப்பு: 1. தஸ்பீஹ் செய்யும் காலணி.


வாசியுங்கள்!

பிரபல் சூஃபி, ஷைகு அப்துல் வாஹிது ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகிறார்கள். “ஒரு நாள் இரவு எனக்குத் தூக்கம் மிகைக்கவே வழ்க்கமாக ஓதும் திக்ருகளை ஓதாமல் தூங்கி விட்டேன். கனவில் அழகான ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடைகள் அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகளும் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. அவள் என்னை நோக்கி, ‘நீர் என்னை அடைய முயற்சி செய்வீராக! நான் உம்மை அடைய முயற்சி செய்கிறேன்!’ என்று கூறிச் சில பேரின்பக் கீதங்களைப் பாடினாள். பிறகு நான் விழித்துக் கொண்டேன். இனிமேல் இரவில் தூங்கக்கூடாது என்று சத்தியமிட்டுக் கொண்டேன்.”


இதன்பின் அன்னார் நாற்பது ஆண்டுகள் இஷாவுக்குச் செய்த உலூவுடன் சுப்ஹையும் தொழுது வந்தார்கள் என்று கூறப்படுகிறது.


இந்தக் கதையை உன்னிப்பாகச் சிந்தனையோடு கவனிக்கவும். இதை வாசிக்கும்போது கதைக்குள்ளே இருக்கக் கூடிய ஆபாசத்தைப் பலர் விளங்கிக் கொள்வதில்லை; அல்லது விளங்கியதாகக் காட்டிக் கொள்வதில்லை; அல்லது பக்தியோடு தலையில் கை வைத்துக் கொண்டு கண்மூடி, வாய்பொத்தி, காதடைத்து இருந்து விடுகிறார்கள்.


அப்படியுமல்ல, உலமாக்கள் முன்னின்று நடத்துகிற காரணத்தினால் பேசாமலிருந்து விடுகிறார்கள்; அல்லது பெரும்பான்மையான மக்கள் வாய்மூடி இருக்கிறார்களே, நமக்கேன் இந்த வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்ற எண்ணப்பாட்டில் எப்படியோ வாழ்ந்து விட்டுப் போவோம் என்றிருக்கிறார்கள்.


இப்படி ஒவ்வொருவரும் மௌனம் சாதிக்கிறார்கள்! இந்த மௌனம் எந்த அளவுக்கு நமது சமூகத்தை இட்டுச் செல்கிறதென்றால் வக்கிர புத்தியுள்ள சிலர் அல்லாஹ்வின் தஸ்பீஹ்களை முன்காட்டி காமக் கதைகள் எழுத வழி சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


‘பிரபல’ ஷைகுக்குக் கனவில் கூட தெரிவது அழகான பெண்கள்தான்! அழகான பெண்ணை அவள் உடுத்தியிருக்கும் உடையோடு வர்ணித்துவிட்டுத் தமது மாணாக்கர் தம்மைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரோ என்ற பயம் வந்து விட்டதால் அவள் போட்டிருக்கும் காலணி தஸ்பீஹ் செய்ததாகக் கதை விடுகிறார். அதை அணிந்திருந்த அழகி, பச்சை பட்டாடை உடுத்த அழகி, காதல் கணை தொடுக்கிறாளாம்.


சுருக்கமாகச் சொன்னால், தஸ்பீஹ் செய்யக் கூடிய காலணி ஒரு காமப் பாட்டுப் பாடும் ஒருத்தியின் கால்களை அலங்கரிக்கிறது என்பதுதான் கதை!


பச்சைப் பாவாடை ஏன் தஸ்பீஹ் செய்யவில்லை? நஜீஸாகி விட்டதோ?


அல்லாஹ்வைப் புகழும் தஸ்பீஹ் எங்கே பொருந்துகிறது இவர்களுடைய கிஸ்ஸாக்களில் என்று பார்த்தீர்களா? அது காலுக்குச் செருப்பாகப் போடப் பட்டிருக்கிறது.


‘ஷைகும் ஹதீஸ், குத்புல் அக்தாப்’ ஜக்கரிய்யா ஹஜ்ரத் எப்படி தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் பார்த்தீர்களா?


ஸல்மான் ருஷதியோடும், தஸ்லீமா நஸ்ரினோடும் கை கோர்த்திருக்கிறார்; இல்லை, ஸல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரினும் ஜக்கரிய்யா ஹஜ்ரத்தோடு கை கோர்த்திருக்கிறார்கள்!


இன்னும் கண்மூடிக் குருடாகவே இருக்கத் தீர்மானித்து விட்டவர்கள் ஏராளம் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.


இவர்களுக்கெல்லாம் சொல்வது இதுதான்.


அல்லாஹ்வுடைய எச்சரிக்கையை ஏளனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! அவன் அனைத்தையும் அறிந்தவன். அவன் தவறு செய்யாத நீதிபதி. தானே இரட்சகன் என்று பிரகடனப் படுத்திய ஃபிர்அவ்னுடைய ஆட்களுக்கும், அதற்கு முன்னர் இருந்தோருக்கும் நடந்ததை ஞாபகமூட்டி எச்சரிக்கிறான்:

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்-குர்ஆன்: ஸூரா அல் அன்ஃபால் – 8:52-53)


ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் மாறாகவே நட்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சமூகம் அல்லாஹ்வின் சாபத்திற்காளாகும் என்பதில் சந்தேகமில்லை.


அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து இப்படிப்பட்ட கதைகள் மூலம் அல்லாஹ்வின் வேதத்தை ஏளனப் படுத்தக் கூடியவர்கள்; அப்படிப்பட்ட ஏளனக் கதைகளைப் பள்ளிகளின் வாசிப்பதற்கு திறந்த அனுமதியளித்திருக்கக் கூடிய நிருவாகிகள்; இந்தக் கதைகளுக்கு மார்க்க அந்தஸ்துக் கொடுத்து அவற்றை ஊக்கப்படுத்தும் உலமாக்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் என்று எச்சரிக்கை விடுப்பதைத் தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை.


 நம்மனைவரையும், வேதம் ஓதும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து அல்லாஹ் காப்பாற்றி, யார் யாருக்கெல்லாம் நேர்வழியைக் காட்டினானோ அதே நேர்வழியில் நம்மையும் வழி நடத்தி, மறுமை நாளின் சுட்டெரிக்கும் அந்தப் பெரு நெருப்பிலிருந்து விடுதலை தருவானாக!

No comments:

Post a Comment