ஃதுல்ஹிஜ்ஜா 9வது பிறையன்றுதான் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் அரஃபா மைதானத்தில் தரிப்பார்கள். அந்தத் தினத்தை முதலாம் பிறையன்றே அறிவித்து விட்டார்கள்.
இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கக் கூடிய முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தினத்தை அறிவிக்கும் பொறுப்பு சவூதி அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. இதுவும் அல்லாஹ்வுடைய ஏற்பாடுதான்.
இவ்வருடம் அரஃபாவில் ஹஜ்ஜாஜிகள் தரித்து அங்குள்ள பள்ளிவாசலில் நடந்த பிரசங்கத்தை நேரடியாக ஒளிபரப்பினார்கள். இந்தியா, இலங்கை மட்டுமல்ல உலகம் பூராவுள்ள மக்கள் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார்கள். கிரிகோரியான் நாட்காட்டி (Gregorian Calander) காட்டும் திகதி நவம்பர் மாதம் 26ம் திகதி அது நடந்தது.
அரஃபா தினம் நேற்று, வியாழக்கிழமை, 26.11.2009ம் திகதியாகும். அப்படியானால் ஹஜ்ஜுப் பெருநாள் அதற்கு அடுத்த நாள்தான். அந்த நாள் 27.11.2009ம் திகதி வெள்ளிக்கிழமையாகும். இதை மாற்ற தலை வெடிக்கும் எந்தத் தர்க்கமும் ஏற்புடையதல்ல.
அரஃபாப் பெருவெளி மக்காவில்தான் இருக்கிறது. அது இலங்கையின் மினுவங்கொடையில் இல்லை. இந்தியாவில் சென்னையிலுமில்லை; மும்பையிலுமில்லை; மண்ணடியிலுமில்லை. கொல்கத்தாவிலுமில்லை; கள்ளிக்கோட்டையிலுமில்லை.
அன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் கையடக்கத் தொலைபேசியுமிருக்கவில்லை; நேரடி ஒளிபரப்பு வசதியுள்ள தொலைக்காட்சி சேவைகளுமிருக்கவில்லை. அதனால், இப்போதும் அவற்றைப் பாவித்து அரஃபா நோன்பு வைக்க முடியாது; ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட முடியாது என்று வாதிடுவது தெளிவாகவே அறிவின்மை அல்லது விதண்டாவாதம்.
27.11.2009 ம் திகதி நோன்பு வைத்தவர்கள் தெரிந்து கொண்டே பிழையான தினத்தில் நோன்பு வைத்துள்ளார்கள்!!!
எந்தப் பெரிய அறிஞர் சொன்னாலும் ஹஜ்ஜாஜிகள் அரஃபாப் பெருவெளியிலிருந்து வெளியேறிய அடுத்த நாள் அரஃபா தினமாக ஆக முடியாது; முடியாது; முடியாது.
ஒன்பது நாட்களுக்கு முன்பே அதிகாரம் படைத்தவர்கள் அந்நாட்களை முன் கூட்டியே அறிவித்து விட்டதன் பின் அதை ஏற்க முடியாது என்று சொல்லும் எவரும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
ஆதாரம் தெளிவாகவே இருப்பதனால் வேறு மேற்கோள்கள் எதுவுமே தேவையில்லை.
கண்மூடிப் பின்பற்றுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
இஸ்லாம் பரிபூரணப் படுத்தப்பட்டுவிட்டது.
உலகம் பூரணப் படுத்தப் பட வில்லை. அது விரிந்து கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment