Tuesday, November 24, 2009

வித்தியாசமான கோணத்தில் தஃலீம் ஓர் ஆய்வு – பாகம் 2


நரகவிடுதலை பெறக் குறுக்குவழி!

கிழக்காசிய நாடுகளிலுள்ள மிக அதிகமான பள்ளிகளில் அல்-குர்ஆனைவிட மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாசிக்கப்படும் கிதாபின் மற்றுமொரு கதையை இன்று படிப்போம்.

புத்தகம் : அமல்களின் சிறப்புகள்
பகுதி: திக்ரின் சிறப்புகள் – ஹதீஸ் 17
உப தலைப்பு: இந்த உம்மத்தினரின் பெருமை
என்னிடமுள்ள கிதாபில் இது அச்சாகியுள்ள பக்கங்கள்: 626-628
(இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள பகுதி பக்கம் 627ன் கடைசிப் பத்தியிலிருந்தாகும்.)

எந்தப் பக்கமும் சாராமல் திறந்த உள்ளங்களோடும் சிந்தனைத் தெளிவோடும் வாசிக்குமாறு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வாசிப்போமா?
“ஷைகு அபூயஜீத் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற பெரியார் கூறுவதாவது: ஒருவர் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’வை எழுபதினாயிரம் தடவை ஓதினால் அவருக்கு நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்” என்று நான் கேள்விப்பட்டு என் மனைவிக்காக எழுபதினாயிரம் தடவை ஓதி ஹதியாச் செய்தேன். எனக்காகவும் அதுபோன்று பல தொகைகளை ஓதி மறுமைக்காகச் சேமித்து வைத்துக் கொண்டேன்.

இந்நிலையில் எங்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் இருந்து வந்தார். அவர் ‘கஷ்ப்’ (ஞான திருஷ்டி) உள்ளவர் என்பதாகவும், சுவர்க்கம், நரகம் சம்பந்தமான காட்சிகளும் அவருக்குத் தெரிகின்றன என்பதாகவும் அவரைப் பற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. அது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ஒரு நாள் அந்த வாலிபர் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகச் சப்தமிட்டு அலரினார். அவருக்கு மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. “என்னுடைய தாயார் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறார், அக்காட்சி எனக்குத் தெரிகிறது” என்று கூறினார்.

குர்தூபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். “அவ்வாலிபருடைய திடுக்கத்தை நான் பார்த்தபோடு, நான் ஓதி வைத்திருந்த கலிமாவிலிருந்து ஒரு எழுபதினாயிரத்தை அவருடைய தாயாருக்கு ஹதியாச் செய்து விட்டால், எழுபதினாயிரம் தடவை கலிமாவை ஓதுவதினால் நரக விடுதலை கிடைக்கும் என்ற விஷயத்தின் உண்மையும், அவ்வாலிபருடைய கஷ்பு சம்பந்தமான சந்தேக நிவர்த்தியும் தெரிய வரும் என்று எண்ணி அவ்வாறே ஹதியாச் செய்தேன். நான் ஹதியாச் செய்ததை எவரிடமும் கூறவில்லை; அது விஷயம் அல்லாஹ்வுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாலிபர் உடனே, “சிறிய தந்தையவர்களே! இப்பொழுது என் தாயார் நரக வேதனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.” என்று கூறினார். இச்சம்பவத்தினால் எனக்கு இரண்டுவிதப் பலன்கள் கிடைத்தன. முதலாவது, எழுபதினாயிரம் தடவை கலிமா ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டிருந்ததை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டாவது, அவ்வாலிபரின் கஷ்பு சம்பந்தமான உறுதியும் ஏற்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை சம்பவங்கள் இந்த உம்மத்தில் நடைபெற்று இருக்கின்றனவோ யாரறிவார்.”

இந்தக் கிதாபுதான் இன்று பள்ளிபள்ளியாக தனிமரியாதை கொடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டு மார்க்கத்தைப் போதிக்கிறது.


சொல்லப்பட்ட சம்பவம் பற்றிச் சிந்தித்தால் அதில் உள்ள அபத்தங்கள் தெளிவாகும். 


படித்தவர்கள், சிந்தனையாளர்கள் கூட இன்று இப்படிப்பட்ட போலிகளுக்குப் பின்னால் வலம் வருவதைப் பார்க்கிறொம்! அப்படிப்பட்டவர்களைக் காட்டி இந்தப் போலிகள் புத்தி குறைந்தவர்களை வழிகெடுக்கிறார்கள்!


அந்த மருத்துவர், இந்த வழக்கறிஞர், அந்த நீதிபதி, இந்தப் போதனாசிரியர், அந்தப் பொறியியலாளர் என்றிப்படி படித்தவர்கள், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களைக் காட்டி வழிகேட்டைச் சந்தைப் படுத்துகிறார்கள்!

இந்தப் படித்தவர்கள் நிச்சயமாகத் தம் புத்தியைக் காவு கொடுத்தது சம்பந்தமாக நாளை மறுமையில் விசாரிக்கப் படுவார்கள் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.


அல்லாஹ் கூறுகிறான்:
ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அலக் – 96:3-5)

அறிவு என்பதும் புத்தி என்பதும் இரு வேறுபட்ட செல்வங்கள். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அறிவைப் பெறலாம். ஆனால், புத்தியின்றேல் அந்த அறிவின் தாக்கம் சமூகத்தை அடையாது. அறிவின் பலனைப் பெறவேண்டுமானால் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் புத்தியாக அதை சமூகமயப்படுத்த வேண்டும். அப்படியில்லாமையால்தான், இன்று பல இடங்களில் ஏட்டறிவைப் பெற்ற அறிவாளிகளை புத்தகப் படிப்பில்லாத புத்திசாலிகள் மிஞ்சி நிற்கிறார்கள்!

அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்:
அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் ஹஜ் – 22:46-47)

அல்லாஹ் மனிதனை விழித்து உலகத்தில் பிரயாணம் செய்து அவனுடைய படைப்பினங்களைப் பார்ப்பதன் மூலம் அவனுடைய வல்லமையை உணர வேண்டாமா என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றான்.

கவலைக்கும் வருதத்திற்குமுள்ள விடயமென்ன என்றால் இந்த கப்ஸாக்களைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அதன் வழி நடப்பவர்கள் உண்மையில் பூமியில் பிரயாணம் செய்கிறார்கள். ஆனால், அல்லாஹ் எதிர்பார்த்தபடி அவர்கள் தம் மனக்கண்களைத் திறந்து கொண்டு செய்கிறார்களில்லை.

அதனால்தான், அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பற்றியோ அல்லது அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற வழிமுறைகள் பற்றியோ எந்தவித அக்கறையுமின்றி கண்மூடித்தனமாக புத்தி மழுங்கி ஷைகுகளையும் பெரியார்களையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமோரிடத்திலே அல்லாஹ்வின் எச்சரிக்கை இப்படிப் பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த எச்சரிக்கைதான் என்ன?

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா: 2:6-7)

திரும்பத் திரும்ப அல்லாஹ் உதாரணங்களையும், அவனுடைய படைப்பின் தாற்பரியங்களையும், அவனுடைய தூதர்களுடைய சரிதங்களையும், அழிக்கப்பட்ட சமுதாயங்களையும் பற்றிச் சொல்லிக் காட்டுகிறான். அவற்றிலிருந்து பாடம் படிக்கும்படி கட்டளையிடுகின்றான். அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான்.

இந்த அடிப்படையை மனதிலிருத்தி மேலே எடுத்துக்காட்டப்பட்ட கதையை கொஞ்சம் அலசுவோம்.

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:

  1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் அன்று அந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டும்?
  2. அவர்களின் ஆணைக்காகக் காத்திருந்து தங்கள் சொத்துக்களையும் குடும்பத்தையும் இழந்த, உயிர்த்தியாகம் செய்த அந்த நபித்தோழர்களுக்கு ஏன் அந்த இழப்புகள்?
  3. பிறந்த மண்ணை விட்டுத் துரத்தப்படுமளவிற்கு ஏன் அவர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்களால் கூட வெறுக்கப்பட்டிருக்க வேண்டும்?
  4. எதற்காக அந்த யுத்தங்கள்?

இப்படி 70,000க்கும் அதிகமான கேள்விகள் எழும்புகின்றன!

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:
Ø      தொழுகை எதற்கு?
Ø      நோன்பு எதற்கு?
Ø      ஸக்காத் எதற்கு?
Ø      ஹஜ் எதற்கு?

இவற்றிற்கும் அதிகமாக:
Ø      நஃபில் தொழுகைகள்,
Ø      ஸுன்னத்தான நோன்புகள்,
Ø      தான தர்மங்கள்,
Ø      உம்ரா,
Ø      உறவினர்களைக் கவனித்தல்,
Ø      அயலவர்களின் நலம் பேணல்

இப்படியான நல்லமல்கள் எதற்காக?

23 ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஏனிந்தக் கஷ்டத்தைக் கொடுத்தான்?

உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப் பட்டதாக அல்லாஹ் சொல்லிக் காட்டும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த மகத்துவமிக்க வழிமுறையை ஏன் அவன் காட்டிக் கொடுக்க மறந்து விட்டான்?

ஷைகு அபூயஜீத் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை மட்டும் சந்திக்க வைத்திருந்தால் போதுமே! அவர் நரகத்திலிருந்து விடுதலை பெறும் இந்தக் குறுக்கு வழியைக் காண்பித்திருப்பாரே!

குறைந்தபட்சம், இப்படி ஒரு ஷைகு வருவார் அவர் சொல்லக் கூடிய திக்ரை அவர் சொல்லித்தருகின்ற படி ஓதி நரக விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும்படியாவது அல்லாஹ் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லையே!

அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் கூட இந்த ஷைகுகளுக்கில்லை. எதை எடுத்தாலும் ஏதோ ஒரு பலனைக் குறிப்பிட்டுக் கதை கட்டித்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளை இது, அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் இது என்று கீழ்ப்படியும் தன்மை இல்லை. அப்படியிருக்க எப்படி அல்லாஹ்வின் பொருத்தம் அச்செயல்களில் இருக்கும்.

இஸ்லாமிய நம்பிக்கையை கேவலம் இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டுக் காவு கொடுத்துவிட்டுக் கைசேதப்பட்ட கூட்டத்திலாகி விடாமல் அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக!
 

குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment