Thursday, November 12, 2009

ஏகத்துவத்திற்குத் திரும்புவோம்!

ஏகத்துவத்திற்குத் திரும்புவோம்!

- அபூ பௌஸீமா -

“லா இலாஹ இல்லல்லாஹு” – வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹுவைத்தவிர.

சர்வ வல்லமையுள்ளவன் – அனைத்தையும் படைத்தவன் – போஷிப்பவன் – இரட்சிப்பவன் என்று நம்பியிருக்கின்றோம்.

மனிதன் படைக்கப்பட்ட நாள் முதல் அவனுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த, கட்டளையிட்ட கொள்கை கோட்பாடுதான் “லா இலாஹ இல்லல்லாஹு” என்ற பிரகடனத்திற்குள் அடங்கியுள்ள பரிபூரணமான வாழ்க்கைத் திட்டமாகும்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், மனிதனுக்கு அனைத்தையும் கற்பித்து அவற்றைப் பிரித்தறியும் அறிவை அளித்தவன்.

பாலைத் தண்ணீரிலிருந்து வேறாக்கிப் பிரித்து அருந்தும் ஆற்றலை அன்னப் பறவைக்குக் கொடுத்தான்.

ஊர்ந்து செல்லும் ஒவ்வோர் எறும்பின் ஒவ்வொரு காலடியோசையையும் தெளிவாக்க கேட்கிறவன் அவன்! கல்லுக்குள்ளிருக்கும் தேரைக்கும் நேரத்திற்கு உணவளிப்பவன் அவன்!

ஒரே நேரத்தில் அனைத்துப் படைப்பினங்களினதும் செயற்பாடுகளைப் பிசகற வகுத்துச் செயல் படுத்துபவன்!

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கொள்கையின் மூலம் நெறிப்படுத்தப்படும் – “தவ்ஹீத்” – ஏகத்துவம் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து வரும் கோட்பாடாகும். அதன் மூலம் நியாயத் தீர்ப்பு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு ஆணித்தரமாக அறிவுறுத்தப் படுவதென்னவென்றால் – அல்லாஹுவைத் தவிர எந்தச் சக்தியுமில்லை; அவனுக்கு யாரும் எதுவும் துணையுமில்லை; அவனைப் போல் எதுவுமில்லை; அவனைத் தவிர யாருக்கும் படைத்து, போஷித்து, இரட்சிக்கும் ஆற்றலுமில்லை; படைப்புக்களை ஆட்சி செய்யும் உரிமை, சட்டமியற்றும் அதிகாரம் அவனைத் தவிர வேறு யாருக்குமே இல்லை; அவனுடைய அதிகாரத்தில் யாருக்கும் தலையிடுவதற்கு உரிமையில்லை – என்பதுதான்.

மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதனைப் படைத்து அவனுக்கு அறிவையும் கொடுத்து சுதந்திரமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமையையும் அல்லாஹ் அளித்தான். மேலும், அவன் வழி கெட்டுவிடாமல் அவ்வப்போது அவனது தூதர்களை மனிதர்களிடமிருந்தே தேர்ந்து அல்லாஹ்வே வழி காட்டினான்.

அவனைப்பற்றித் தெளிவாக அவனே குர் ஆனில் கூறுகின்றான்:

“(நபியே!) நீர் கூறுவீராக: அவன், அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளை எதிர்பார்க்கின்றன). அவன் (எவரையும்) பெறவில்லை; (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.”(112:1-4)

“தவ்ஹீத்” – ஏகத்துவத்தின் தாற்பரியத்தை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இச்சிறு அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குகின்றான். ஆகவே, இவற்றிலிருந்து மனிதனுக்கு என்ன அறிவுறுத்தப் படுகிறதென்றால், மனிதன் அவனுக்குக் கொடுக்கப் பட்டுள்ள அருட்கொடைகளைத் தெளிந்து உணர்ந்து வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் எதுவுமில்லை என்பதுதான்.

நாளடைவில், “இபாதா” – வணக்கம் என்பது சில சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மட்டும் பொதுவானதாக ஆக்கப்பட்டு விட்டதைக் காண முடிகிறது. வணக்கம் என்பது அல்லாஹ்வின் தத்துவத்தை உணர்ந்து அதை உறுதிப் படுத்தும் தெளிவான எண்ணங்களோடுள்ள செயற்பாடுகளே! வணக்க வழிபாடுகள் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தை ஆட்கொண்டு அவனது வாழ்க்கையை ஆட்சி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே, “லா இலாஹ இல்லல்லாஹு” என்பதின் தாற்பரியம் வாய்ச் சவடாலுக்கு மட்டும் இருந்து விடாமல் அல்லாஹ்வை வணங்குவதாக அமையும்.

அல்லாஹ்வை மறந்து மனோ இச்சையைப் பின்பற்றக்கூடிய மனிதர்களுக்கான எச்சரிக்கையை இங்கு எடுத்துக் காட்டுவது மிகப் பொருத்தமாகவிருக்கும். அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பாருங்கள்:

“(நபியே!) தன்னுடைய (மனோ) இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி கெடுவதற்குரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான், அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான், அன்றியும் அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை ஆக்கிவிட்டான். அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுவது யார்? நீங்கள் நினைவு கூ(ர்ந்து உண)ர மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 45:23)

அரசியல் சித்தாத்தங்கள், தேசியத் தலைமைத்துவங்கள், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்கள், செல்வம், அலங்காரம் மற்றும் உலகாயத இன்பங்கள் போன்ற பொய்மைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் தொழுகையில் தலை குனிந்து விட்டால் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதாக எண்ணிக் கொள்கிறார்கள்!

ஆனால், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பிழையான எண்ணத்தைத் தெளிவு படுத்துச் சீர்படுத்தினார்கள். ஒரு முறை, அதீ இப்னு ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் ஒரு வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது வந்தார்கள்:

“(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே இரட்சகனையே வணங்க வேண்டும் என்றல்லாது (வேறெதெனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை.” (அல்-குர்ஆன் 9:31)

அதீ இப்னு ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் கிறிஸ்தவராக இருந்தவர்) விழித்தார்கள்!

“அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அவர்களை வணங்கவில்லையே!”

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.

“(அல்லாஹ்) தடுத்தவற்றை ஆகும் என்றும் (அல்லாஹ்) தடுக்காதவற்றை கூடாதென்றும் அவர்கள் அவர்களுக்குச் சொல்லவில்லையா? அப்படிச் சொன்ன போது அவர்கள் அவற்றைப் பின்பற்றவில்லையா?” அதீ அதை “ஆம்” என்று ஏற்றுக் கொண்ட போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “அதுதான் அவர்கள் அவர்களை வணங்குதல் என்பது!” (ஆதார நூல்கள்: அஹ்மத், திர்மிதி)

இவ்வாறு, வணக்கம் என்பது கீழ்ப்படிதல், மற்றொன்றுக்குத் தன்னைச் சமர்ப்பித்துச் சரணடைதல் என்று கொள்ளலாம். இதை அல்லாஹ் திரும்பத் திரும்ப குர்ஆனில் சொல்லிக் காட்டுவதை அவதனிக்கலாம்:

“(நபியே!) கூறுவீராக! அல்லாஹுவுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடவுங்கள்.” (அல்-குர்ஆன் 3:32,132, 4:59, 8:1,64, 24:54, 47:33, 58:13, 64:12)

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதென்பது அவனது கட்டளைகளை ஏற்று நடப்பதாகும். தூதருக்குக் கீழ்ப்படிவதென்பது அவரை வணங்குவதல்ல, மாறாக அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளின்படி வாழ்க்கையை அமைத்துக் கொளவது.

“ஆட்சி செலுத்தும் (சட்டமியற்றும்) அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) இல்லை; அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான். இதுதான் நிலையான மார்க்கமாகும்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.” (அல்-குர்ஆன் 12:40)

அல்லாஹ்வின் தூதர் முஹ்ம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னும் பின்னும் இரண்டு விதமான இணை வைத்தல்கள் இருந்தன – இருக்கின்றன.

முதலாவது: அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் நம்பிக்கையுண்டு என்று சொல்லிக்கொண்டு மற்றவரிடம் பிரார்த்தித்தல். அல்லாஹ் கூறுகின்றான்:

“அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 12:40)

இரண்டாவது: அல்லாஹ் ஆக்கித்தந்த சட்டதிட்டங்களை விடவும் மனிதன் ஏற்படுத்தியவற்றை மேன்மைப்படுத்திச் சுயவிருப்பத்துடன் அவற்றுக்கு அடிபணிதல். இப்படிப்பட்டவர்களைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

“(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட(இவ்வேதத்தை)தையும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டுள்ள(வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்போர் பால் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் தாகூத்தை (ஷைத்தானை) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்க நாடுகிறார்கள். (ஆனால்) அவர்களோ அவனை நிராகரித்து விட வேண்டுமெனத் திட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள்.” (அல்-குர்ஆன் 4:60)

(உதாரணம்: வணங்குவதற்குள்ள பொய்யான பொருட்கள் அல்லது ஆட்சி செய்வதற்குள்ள புனித உரிமை உண்டென்று கூறும் முரண்பட்டோர்-வழிகேட்டிலானோரே தாகூத்தை நாடுபவர்கள்.)

“தவ்ஹீத்” – ஏகத்துவம், கவலைக்கிடமான் முறையில் முஸ்லிம்கள் மத்தியில் அதன் யதார்த்தத்தை இழந்து வருகிறது. எதனாலென்றால்:

1. இஸ்லாத்திற்கு வெளியேயுள்ள தத்துவங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம்;

2. அங்குள்ள வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம்;

3. அரசியல் அடக்கு முறைகள் மூலம்;

4. மார்க்கத்தில் நல்லமல்கள் என்ற பெயரில் குர்ஆன், ஸுன்னாவில் இல்லாத புதியனவற்றைப் புகுத்தி அவற்றை அவை மார்க்கம் என்று குதர்க்கம் பேசி நியாயப்படுத்துவதன் மூலம்;

5. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற வழிமுறைகளில் கூட்டுதல், குறைத்தல் மூலம்;

6. வழிவழியாக வந்த செயல்களை, நல்லமல்கள் என்று வகுத்து வயிறு வளர்க்க முற்படுவதன் மூலம்;

7. இதுகால வரை தமது பகுதியில் நடைமுறையில் இல்லை என்பதற்காக ஸுன்னாவை மறுப்பதன் மூலம்.

இன்னும், இன்னும், இன்னும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் நமது கண்களைத் திறக்கப் போதுமானவை:

“உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றிப் பாதுகாவலர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்.” (அல்-குர்ஆன் 7:3)

“பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை.” (அல்-குர்ஆன் 6:116)

“மேலும், நிச்சயமாகப் பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மனோ இச்சையின் படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழிகெடுத்து விடுகிறார்கள்.” (அல்-குர்ஆன் 6:119)

“மேலும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் மறக்கச் செய்து அவன் தன் மனோ இச்சையைப் பின்பற்றி விட்டானோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்; அவனுடைய காரியமும் எல்லை கடந்ததாகி விட்டது.” (அல்-குர்ஆன் 18:28)

முஸ்லிம்கள் அல்லாஹ்வை உண்மையாக வணங்கி, எவ்விதமான இணை வைத்தலையும் தயவு தாட்சணயமின்றி தன்னிலிருந்து அகற்றி – தவ்ஹீத் – ஏகத்துவத்தைப் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏகத்துவத்திற்குத் திருமப முடியும்.

அல்லாஹ்வின் எச்சரிக்கையை நிதானமாகச் சிந்திப்பவர்கள் இணை வைப்பின் கொடுமையை உணர முடியும்:

“…..தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்…..” (அல்-குர்ஆன் 13:11)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம், அதில் எது ஆகும் (ஹலால்) என்று சொல்லப்பட்டுள்ளதோ அதை நாம் ஆகுமானதாக எடுப்போம், அதில் எது தடுக்கப்பட்டது (ஹராம்) என்று சொல்லப் பட்டுள்ளதோ அதை நாம் தடுக்கப்பட்டதாக ஏற்போம் (என்று) நம்பிக்கையோடு ஒருவர் சொல்வாரேயானால் (அவர் வெற்றியடைந்து விட்டார்). ஆனால், யாராவது என்னிலிருந்து ஒரு ஹதீஸை அறிவித்து அதில் அவர் பொய்யைக் கல்ந்தாரோ அப்படிப் பட்டவர் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் பொய்யுரைத்து விட்டார்.” (நூல்கள் : அபூதாவூத், அஹ்மத்)

பெரும்பான்மையின் விருப்பத்திற்கு அடிபணிந்து அல்லது வழி வழியாக நடந்து வரும் சடங்குகள் சம்பிரதாயங்களுக்குத் தம்மை அர்ப்பணித்து அல்லது மனோ இச்சைப்படி நடந்து – தவ்ஹீத் – ஏகத்துவத்தின் பால் திரும்ப முடியாது.

ஏகத்துவத்தின் - “தவ்ஹீத்” – பக்கம் திரும்புவதற்கான தீர்வு ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி காட்டலுக்கும் மட்டும் தன்னைச் சமர்ப்பிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

ஏகத்துவம் – தவ்ஹீத் – சிறப்பு வாய்ந்தது. மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான்.

“ஜின்களையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.” (அல்-குர்ஆன் 51:56)

அவனை மட்டுமே வணங்குவது சுவனம் செலவதற்குரிய காரணங்களில் மிக முக்கியமான காரணமாகவும் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரிய காரணமாகவும் இருக்கிறது.

ஆகவே, ஏகத்துவத்தின் பாலிருந்து தவறிப் போவதிலிருந்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வோம். நமது கௌரவப் பிரச்சினைகளை மறந்து தாழ்வுச் சிக்கலிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் கட்டளையாகிய ஏகத்துவத்தின் பக்கம் திரும்புவோம். அல்லாஹ் நம்மனைவரையும் பரிபூரணமான நம்பிக்கையாளர்களாகவே மரணிக்கச் செய்வானாக.

No comments:

Post a Comment