Thursday, November 19, 2009

வட்டி!

வட்டி என்ற சொல் இன்று உலகெங்கும் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு சொல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

வட்டிக்கு வரைவிலக்கணம் கூறுபவர்கள் தத்தமக்கு வசதி மாதிரி அதைச் செய்து கொள்கிறார்கள்.

ஒருவன் இன்னொருவனுக்குக் கடனுக்குக் கொடுக்கும் ஒரு தொகைக்கு மேலதிகமாகப் பெற்றுக் கொள்ளும் தொகை வட்டி என்று சொல்லப்படும். இங்கு தொகை என்பது பணம் மட்டுமல்ல அது ஒரு பெறுமதியான பொருளாகவும் இருக்கலாம்.

மனிதன் தோன்றிய காலத்தின் பின்னர் அவன் பரவலாக பரவலாக அவன் மற்ற மனிதர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்தான். ஆரம்பத்தில் பண்டமாற்று முறையில் அவன் தனது தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொண்டான்.

நாளாக நாளாக அவன் அதற்குப் பதிலாக நாணய மாற்று முறையை ஏற்படுத்திக் கொண்டான். காலப்போக்கில் இன்று உலகம் முழுவதும் பல நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அதே வேளையில் கடன்பத்திரங்கள் (Credit Cards) என்ற பெயரில் வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கடன்பத்திரத்தின் மூலம் பொருட்களை வாங்கக்கூடிய ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் வந்து விட்டன.

வட்டி சர்வசாதாரணமாக எல்லாராலும் பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வட்டியின் நிலைப்பாடு மனித சமூகத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பது பற்றி ஆண்டாண்டு காலமாக ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

எது எப்படியிருப்பினும் வட்டி சம்பந்தமாக படைப்பாளனாகிய அல்லாஹ் என்ன சொல்கிறானோ அதுதான் அதன் அர்த்தமாகவும் இருக்கும். அவன் வட்டி சம்பந்தமாக என்ன கட்டளையிட்டிருக்கின்றானோ அதுதான் பின்பற்றப்பட வேண்டியதாகும். எனவே, அவன் வட்டி பற்றி என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே,” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:275)

வட்டி எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பது இவ்வசனதின் மூலம் தெளிவு படுத்தப்பட்டு கடுமையாக எச்சரிக்கப் பட்டுள்ளது. வேறு விளக்கங்கள் தேவையில்லாத அளவிற்கு அதன் பாரதூரம் விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:276-277)

வட்டியை அனுபவிப்பவன் நன்றி கெட்டவன் என்று இறைவனால் இனம் காணப் பட்டுள்ளதைச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். வட்டியில் இருப்பவனின் சொத்துக்கள் அழிவை நோக்கிச் செல்லும் அதே வேளையில் தர்மங்களைச் செய்யக் கூடியவனின் சொத்துக்கள் வளர்ச்சியடையும் என்பதையும் குறிப்பிட்டு நம்பிக்கையாளனின் பண்புகளையும் அவன் தெளிவு படுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-பகரா – 2:280)

வர வேண்டிய வட்டியை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக விட்டு விடும்படி நம்பிக்கையாளர்களை விழித்து அல்லாஹ் வேண்டுகோள் விடுக்கின்றான்; நம்பிக்கை கொண்டிருந்தால் என்ற சொற்பிரயோகத்தின் மூலம் அவன் தெளிவு படுத்துவது வட்டி வாங்குபவன் நம்பிக்கை கொண்டவனல்ல என்பதே! நவூதுபில்லாஹ்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா – 2:279)

மிகப் பாரதூரமான எச்சரிக்கை! உடனடியாகவே வட்டிக்கு விட்டிருக்கும் மூலதனங்களை வட்டியில்லாமலாக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

வட்டி பல பெயர்களில் இன்று சமூகத்திலே உலா வருகிறது. இஸ்லாமிய வங்கிகள் என்ற அடை மொழிக்குள் ஹலால் ஃபத்வா பெற்று சமூகத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறது. நாமாக முயற்சிக்காமல் தீமைகள் நம்மை விட்டு விலகா!

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா ஆலு இம்ரான் – 3:130)

மீண்டும் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து வட்டியை உண்ண வேண்டாம் என்று சொல்லி அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று எச்சரிப்பதோடு நின்று விடாமல் அப்படி வட்டி உண்ணாதவர்கள் அதன் காரணமாக வெற்றி பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தையும் தருகிறான். இந்தப் பெரும் பாக்கியத்தை ஏனோ நம்மில் பலர் சிந்திக்கிறார்களில்லை.

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், வட்டியை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப் பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும், அவர்களின் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்-குர்ஆன்: ஸூரா அன்னிஸா – 4:160-162)

வட்டியைச் சாப்பிடுபவர்கள் அல்லாஹ்வை மறுப்பவர்கள் என்பதை அடித்துச் சொல்கின்றான். ஆகவே, வட்டி என்பது அல்லாஹ்வை மறுக்கும் ஒரு காரியமாக இருப்பதனை மிகவும் உன்னிப்பாகச் சிந்தித்து அதிலிருந்து நாம் கட்டாயம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அர்ரூம் – 30:39)

வட்டியைத் தடுக்கும் எந்த ஒரு வசனத்தை எடுத்தாலும் அங்கே வட்டிக்குக் கொடுத்து செல்வத்தைப் பெருக்குவது செல்வத்தை அழித்துவிடக் கூடியது என்று சொல்வதோடு வெற்றிக்கு வழியாக தர்மமாக, ஸகாத்தாகக் கொடுத்து வெற்றி பெருமாறு அழைப்பு விடுக்கிறான். நிச்சயமாக, அவனே அழிப்பவன், அவனே பெருக்குபவன்!

வட்டியின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு திருந்தினாலல்லாது சொர்க்கம் நம்மை விட்டுத் தூரமாகிவிடும். அல்லாஹ் நம்மனைவரையும் இந்தக் கொடிய பாவத்திலிருந்து காப்பாற்றுவானாக!




குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment