இன்று இமாம்களை அவமதிக்கிறார்கள் என்று பொதுவாகவே ஒரு விமர்சனம் இருந்துகொண்டிருக்கிறது. இமாம்களை அவமதிக்கிறார்கள் என்று சப்தம் போட்டுச் சொல்லக் கூடிய உலமாக்கள் சிலர் அப்படி யாரைக் குற்றம் சாட்டுகிறார்கள் தெரியுமா?
அல்-குர்ஆனையும், குர்ஆனுக்கு முரணில்லாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும்தான் பின்பற்ற வேண்டுமென்று சொல்பவர்களைத்தான் அப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள்!
ஆனால், உண்மையில் இமாம்களை அவமதிப்பது யார் என்பதைக் கீழே மேற்கோள் காட்டியுள்ள செய்தியை வாசித்தால் சிந்திப்பவர் உணர்வர்!
மேற்கோள்:
அல்லாஹுதஆலாவுடைய தர்பாரில் நெருக்கம் பெறுவதற்குப் பரிசுத்தக் குர்ஆனைவிடச் சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை என்ற கருத்து பல ஹதீஸ்களின் மூலமாகக் கூறப்பட்டுள்ளது.
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அல்லாஹு தஆலாவைக் கனவில் தரிசித்து, ‘யா அல்லாஹ்! எதைக் கொண்டு உன்னுடைய சன்னிதானத்தை நெருங்க முடியும்?’ என்று கேட்டேன். அஹ்மதே! என்னுடைய வேதத்தை ஓதுவது கொண்டு, என் அல்லாஹ் பதிலளித்தான். விளங்கியா? விளங்காமலா? என்று கேட்டேன். விளங்கி ஓதினாலும் விளங்காவிட்டாலும் இரண்டுமே நெருக்கத்திற்குக் காரணமாகும் என்று கூறுனான்.”
மேற்கோள் முடிவு
தான் அல்லாஹ்வைக் கனவில் கண்டு அல்லாஹ்வோடு பேசியதாகவும், அதுவும் கேள்வி கேட்டுப் பதில் கிடைத்ததாகவும் – அதாவது அல்லாஹ்வோடு உரையாடியதாக – இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹி அலைஹி (ஹன்பலி மத்ஹப் இவர் பெயரில்தான் உண்டாக்கப் பட்டுள்ளது.) மீது இவ்வளவு பெரிய அபாண்டத்தைச் சுமத்தி அவர்களைப்பற்றி அதுவும் இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான செய்தியொன்றை அவர் சொன்னதாகக் கூறி அவதூறொன்றைச் சுமத்தியிருக்கிறார் இந்தக் கிதாபின் ஆசிரியர் ஷைகுல் ஹதீஸ், குத்புல் அக்தாப் மர்ஹூம் முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்கள்! (புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் புத்தகத்திலுள்ளவாறே குறிப்பிட்டுள்ளேன்.)
ஹன்பலி இமாம் ரஹ்மஹுல்லாஹி அலைஹி அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் வேலையை இப்புத்தகத்தின் ஆசிரியர் செய்கிறார் என்பதுதானே இந்தக் கதையின் சுருக்கம்! கனவு கண்டவர் அவ்வுருவத்தை வடிவமைக்கலாம்தானே!!!
இந்தக் கிதாபுதான், “அமல்களின் சிற்ப்புகள்.” இந்தக் கதையைக் காண திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற பகுதிக்குச் சென்று ஹதீஸ் எண் 23: அல்லாஹ்வை நெருங்கச் சிறந்தது குர்ஆன்! என்ற தலைப்பை வாசிக்கவும். (என்னிடம் இருக்கும் புத்தகத்தில் 213வது பக்கம்.)
அல்லாஹ்வை நம்பியவர்களை நல்லறிஞர்களின் பெயரைக் கொண்டு ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுக்கின்றான் என்பதை விசுவாசிகள் உணர வேண்டும்; சிந்திக்க வேண்டும்; கதைகளின் கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
சிந்தனைகளை, அல்குர்ஆனோடும் அல்குர்ஆனுக்கு முரணில்லாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடும் சம்பந்தப் படுத்திப் பார்த்தால்தான் வழிகேட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான்:
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்,” எனக் கூறினார். அதற்கு (இறைவன்), “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்,” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்,” எனக் கூறினார்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அஃராஃப் - 7:143)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்-குர்ஆன்: ஸூரா அஷ்ஷூரா – 42:51)
மேற்கூறிய வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவாகச் சொல்லிக்காட்டுவது:
1. அல்லாஹ்வை எவராலும் பார்க்க முடியாது.
2. அல்லாஹ் அவனுடைய தூதுவர்களைத்தவிர வேறெந்த மனிதனுடனும் பேசுவதில்லை,என்பதுதான்!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கவனியுங்கள்:
உங்கள் இறைவனை நீங்கள் பார்த்தீர்களா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள், “அவனோ ஒளியானவன். எப்படி அவனை நான் காண முடியும்?” என்று பதில் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)
அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அல்லாஹ்வைப் பார்க்கவில்லை எனும்போது ஹன்பலி இமாம் எப்படிப் பார்த்திருக்க முடியும்?
அல்லாஹ்வை நம்பியவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் ஃபுர்கான் – 25:73)
ஆகவே, எந்தப் பெரிய ஷைகாகவிருந்தாலும், இமாமாக இருந்தாலும் அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுக்கு மாற்றமாகக் கருத்துத் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவிப்பது தூரமான வழிகேட்டில் அவர்களை இட்டுச் செல்லும். அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அஹ்ஸாப் – 33: 36)
அல்லாஹ்வே வழிகெட்டு விட்டார் என்று சொல்லி விட்டதன் பின்னால் அதை மறைத்து திரித்து அர்த்தம் சொல்ல முற்படுவது அல்லாஹ்வை மறுப்பதற்குச் சமமாகும். அல்லாஹ் எங்கள் அனைவரையும் அவ்வாறான பெரும் பாவத்திலிருந்து காப்பாற்றுவானாக!
அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்கு வேட்டு வைக்கும் இப்படிப்பட்ட கதை கப்ஸாக்களை நம்பி இஸ்லாமிய கோட்டைக்குள்ளிருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையொன்றைச் சுட்டிக்காட்டி இவ்விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ்வின் எச்சரிக்கை:
அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
“அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்,” எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவரகள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
“பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது “நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே,” எனக் கூறுகின்றனர்.
கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.
“இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது, “இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?” எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது, “நம்பிக்கை கொண்டுள்ளோம்,” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே,” எனக் கூறுகின்றனர்.
அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.
அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா – 2: 7-16)
ஆகவே, இமாம்களை அவமதிக்கக் கூடிய இவ்வாறான கிதாபுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்கமாக இந்தக் கிதாபைப் போதிக்கக் கூடியவர்கள் இவ்வபத்தங்களை இனம் கண்டு அவற்றைத் தூக்கியெறிந்து நேர்வழி பெற வேண்டும் என்பதே எனதவா என்று கூறி முடிக்கிறேன். அதற்கான தைரியத்தையும் நல்லறிவையும் அல்லாஹ் அனைவருக்கும் அருள்வானாக!
No comments:
Post a Comment