Tuesday, December 1, 2009

அமைதிப் பெரும்பான்மை விழித்தெழ வேண்டும்!

அபூ பௌஸீமா

இன்று சகோதரர்களிடையே இருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள், பொய் புரட்டுகள், வாக்கு மாற்றங்கள், வஞ்சகம், களவு, பொறாமை, இப்படிப்பட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குணங்கள் அவர்கள் பிளவு பட்டுப் போவதற்கு வழி அமைத்திருக்கின்றன.

இஸ்லாமிய நாடுகளில் இன்று எத்தனை குழுக்கள்! அரசு ஒரு பக்கம்; ஆயுதமேந்திய பல குழுக்கள் ஒவ்வொரு பக்கம்; ஒவ்வொரு குழுவுக்கும் வெவ்வேறான நிகழ்ச்சி நிரல்! தனித்தனியாக இயங்கி சகோதரர்களையே கொன்று வீராப்புப் பேசுகிறார்கள்!

ஏந்தியிருக்கும் கொடி ‘இஸ்லாமியக் கொடி’!

“லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” – வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அல்லாஹுவைத் தவிர; முஹம்மது அல்லாஹ்வின் தூதர் – என்று அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்குச் சாட்சி சொன்னவர்களை, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பி ஏற்றுக் கொண்டவர்களைக் கொன்று விட்டு தாம் முஜாஹிதுகள் – அறப் போராளிகள் – என்று பிரகடனம் செய்கிறார்கள்.

இன்று, பாலஸ்தீனத்தில், ஆஃப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், எகிப்தில், ஏன் – மொரொக்கோ தொடங்கி இந்தோனேசியா வரை பெரிய சிறிய அளவுகளில் முஸ்லிம்கள் குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருக்கிறார்கள்!

அரச பயங்கரவாதத்தை முஸ்லிம்களின் எதிரிகள் அப்பட்டமாக அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். முஸ்லிம் நாடுகள் அணியணியாகப் பிரிந்து தத்தமக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

மூன்று வருடங்களுக்கொரு முறை உச்சி மகாநாடு நடத்துகிறார்கள்! தலைவர்கள் ஒன்று கூடி அழகான சொற்கள் நிறைந்த ஆகர்சனமிக்க வசனங்களால் மெருகூட்டப்பட்ட அறிக்கைகளை விடுக்கிறார்கள். உலக இஸ்லாமிய நாடுகளின் ஒன்றிய உச்சி மகாநாடு கலைகிறது.

அடுத்த மூன்றாண்டுகளுக்கு அமைதி, மயான அமைதி, பயங்கர அமைதி…………!

குவாலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மகாநாடு தொடங்குவதற்கு முன் இலங்கையில் சிங்கள மொழியில் வெளிவரும் ஒரு முன்னணி தினசரிப் பத்திரிகையில் ஒரு முஸ்லிமல்லாத ஊடகவியலாளர் எழுதியிருந்தார். வழக்கம் போல இஸ்லாமிய மகாநாடு வெறும் வாய்ச் சவடாலாகவே முடிந்து விடுமா என்ற கேள்வியை ஆதங்கத்தோடு எழுப்பியிருந்தார். இந்த முஸ்லிமல்லாத பத்திரிகையாளருக்குள்ள அக்கறை நமக்கிருக்கிறதா? தேடிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

தலைவர்கள் தமாஷாவோடு நிறுத்திக் கொள்கிறார்கள்!

அமைதிப் பெரும்பான்மை கைபொத்தி, கண்மூடி, வாயடைத்து வாளாவிருக்கின்றது.

பேசுவது வெள்ளிக்காசென்றால், பேசாமல் அமைதியாக இருப்பது தங்கக் காசு என்ற அர்த்தத்தில் ஒரு பழமொழியை எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகின்றது.

சிந்தனையாளன் ஒருவன் சொன்னான்! “எகிப்தின் உயரமான பிரமிட் ஆயிரக்கணக்கான வருடங்கள் அமைதியாக இருந்து மனிதனுக்கு அமைதியாக இருக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.”

அவன் சொன்னது போல, அதனிடமிருந்து பாடம் படித்து அமைதியாகவே இருக்க நாம் என்ன கல்லா? உலகத்தோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் செய்தித் தொடர்புகள் மூலம் அவ்வப்போது உலக அரங்கில் நடப்பவற்றை அறிந்து கொள்வதற்கும் அல்லாஹ்வின் அருளால் ஆற்றல் பெற்றிருக்கிறோமே!

அல்லாஹ் கூறுகின்றான்:
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்…..
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா – 2:31வது வசனத்தின் ஒரு பகுதி)

அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அலக் – 96:5)

ஊடகங்கள் யாவும் அமைதிப் பெரும்பான்மையை நோக்கித்தான் தமது செய்திகளை, கருத்துக்களை விரிக்கின்றன. அதுவும் இன்றைய உலகில் முஸ்லிம் பெரும்பான்மையை முன்னோக்கித்தான் ஈட்டிகள் பாய்கின்றன.

‘இஸ்லாமிய பயங்கரவாதிகள்’ என்ற அடைமொழியோடு கூடிய செய்திகளின் மூலம் முழு முஸ்லிம் சமூகமும், உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். உண்மையில் முஸ்லிம்கள், ‘பயங்கரவாதத்தினால் பாதிப்படைந்தவர்கள்’ என்பதை உணர்ந்தாலும் அதை அவ்வூடகங்கள் கண்டு கொள்வதில்லை.

முஸ்லிம்கள் மிகக் கவனமாகவும் உன்னிப்பாகவும் விழிப்பாயிருந்தால் மட்டுமே எதிர் நோக்கக் கூடிய ஆபத்துக்களை முன் கூட்டி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும். அப்படியானால்தான் பாதுகாப்புக்கான அரண்களைப் பலப்படுத்த முடியும். பொய்யர்களதும் சதிக் கூட்டத்தினரதும் ஆசை வார்த்தைகளில் மயங்கி முஸ்லிம்கள் மோசம் போய்விடக் கூடாது. அது உள்ளிருந்து வந்தாலும் சரியே! வெளியிலிருந்து வந்தாலும் சரியே!

ஊடகங்கள் மூலமாக நடக்கும் வாதப் பிரதிவாதங்களின் போது முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகமிகத் தெளிவானதாகவும் உண்மையை மறைக்காத நீதியான பங்களிப்பாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், அண்மைக் காலங்களிலே முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே நடைபெற்ற சில அசம்பாவிதங்களுக்குக் காரணகர்த்தாக்கள் முஸ்லிம்களில் உள்ள சுயநலவாதிகள் சிலர்தான்!

சொந்தப் பிரச்சினைகளைச் சமூகப் பிரச்சினைகளாகச் சித்தரிப்பது இவர்களுக்கு இவர்களுக்குக் கைவந்த கலை! பாதிப்படையும் தனிமனிதனைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை; சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களுக்கே வசதியாக அரசியல்வாதிகள் சிலரும் தமது வாக்கு வங்கிக்காகக் குரல் கொடுப்பார்கள்; சமூகப் பிரச்சினைகள் இவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்!

பயங்கரவாதம் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் முஸ்லிம்கள் மறக்கக் கூடாத ஒரு சம்பவத்தை குர்ஆனிலே நாம் பார்க்க முடிகிறது.

அதுதான், யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களின் பொய்யும், அந்தச் சதிக் கூட்டத்தின் அநியாயமும்! நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அவர்களின் பொய் அம்பலத்திற்கு வந்தது. ஓநாய் கடித்துக் குதறி விட்டது என்ற செய்தி பொய்யென்று தெரிய வந்து அந்தக் கற்பனை ஓநாய் நிரபராதியானது!

அமைதி காப்பது எப்போதும் நன்மை பயக்காது. சில சந்தர்ப்பங்களில் அது மீள முடியாத பிழைக்கு இட்டுச் சென்று விடும். அநியாயம் அநியாயம்தான். அது நடக்கும் போது அமைதியாக இருப்பது அதை விடப் பெரிய அநியாயம்.

அல்லாஹ்வின் அற்புதங்களை நம்புகிறோம். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தவுடனே பேசினார்கள்!

பத்ர் போர்க்களத்திலே மலக்குகளை அனுப்பி அல்லாஹ் அவனுடைய அடியார்களின் எதிரிகளைத் துவம்சம் செய்தான். யுத்தப் பயிற்சியே இல்லாத அந்தச் சிறு படைக்குச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றியைக் கொடுத்தான்.

இப்படி அற்புதங்கள் நடக்கட்டும் என்று நாம் அமைதியாக வாய் மூடி இருக்க முடியாது. அமைதிப் பெரும்பான்மை வீரிட்டெழ வேண்டும். அநியாயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நீதி நிலை நாட்டப்படத் தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

அநியாயத்தின் போது வாய் மூடி இருப்பது வணக்கமாக மாட்டாது. அப்படி அது ஒரு வணக்கம் என்று அல்லாஹ் எமக்குக் கட்டளையிடவில்லை.

அற்புதங்கள் நடந்து அதன் மூலம் நற்பயன் விளைய வேண்டுமாயின் அதற்குரிய முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருப்பது. இனி, நம்மிடம் நீதி செலுத்துவதில் பாரபட்சமில்லாமை… இப்படி இஸ்லாம் பரிபூரணமாக நம்மிடம் இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
(அல்-குர்ஆன்: ஸூரா அல் பகரா – 2:208)

முஸ்லிம்கள் நோன்பு நோற்பது கடமை. பசியோடிருப்பது; உடலிச்சைகளைக் கட்டுப்படுத்துவது; மனோவிச்சைகளைக் களைந்து மனிதம் செழிக்கப் பாடுபடுவது; இப்படி நோன்பின் அர்த்தம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆனால், அநியாயங்களுக்கு எதிராகப் பேசுவதை அல்லாஹ் தடை செய்யவில்லை; அதை ஒரு நோன்பாக ஆக்கவில்லை.

பொய்யும், புரட்டும், வஞ்சமும், வஞ்சகமும் கொடி கட்டிப் பறக்கும் இவ்வுலகிலே ‘வாய்மூடி இரு’ என்ற கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனையே தம் தாரக மந்திரமாக்கிக் கொண்டுள்ள சமூகம் தளைக்காது. யாருடைய கட்டளை இது? ஒவ்வொருவரும் தனக்குத் தானே இட்டுக் கொண்ட கட்டளைதான் இது!

உலக வாழ்வே சதமென்றெண்ணி சுகபோக வாழ்வுக்கு அர்ப்பணித்து விட்ட பிறகு தானும் தன் குடும்பமும் பிரச்சினைகளுக்கு ஆளாகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் வந்ததுதான் அது. அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்ச வேண்டிய சமூகம் இன்று கண்டவனுக்கெல்லாம் பயந்து கருகுகிறது.

கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்டவர்களையெல்லாம் கொன்று குவிப்பது வீரமுமல்ல; உரிமைப் போராட்டமும் அல்ல!

தனக்கோ அல்லது தனது பிள்ளைக்கோ ஓர் ஆபத்தென்றால் உடுக்கை இழந்தவன் கை போல் ஆபத்திலிருந்து காப்பாற்ற யார்தான் முனைவதில்லை! ஆனால், இன்று இஸ்லாமிய சமூகம் அதள பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. பாதாளத்திற்குள் விழுந்து விடுவதற்குள் அதைத் தடுத்து நிறுத்த இந்த அமைதிப் பெரும்பான்மையால் முடியும்!

அப்படிச் செய்ய எது தேவை?

அல்லாஹ்விடம் மட்டும் பாதுகாவல் தேடிய நிலையில் துணிவு!

சமூகம் விழுந்து விட்டால் தனி மனிதன் சவம்தான்! ஆகவே, அமைதி காப்பவர்கள் அநியாயங்கள் எங்கு நடந்தாலும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்! பேசிக் கொண்டே இருக்க வேண்டும்!

நம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் போது நடந்த ஒரு சம்பவம் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கும் உலக மாந்தருக்கும் ஒரு படிப்பினையாகும்.

ஒரு முறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவர் விமர்சித்தார். அப்போது அந்தச் சபையிலே இருந்த மற்றொருவர் அவரைத் தடுக்க முயற்சி செய்தார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை அவதானித்தார்கள். உடனே, அவரைப் பேச விடும்படி கட்டளையிட்டு, அப்படிப் பேச விடாமல் தடுப்பது நற் பயனில்லாமலாகிவிடும் என்றும் அவ்வாறு விமர்சனங்களில் வரக் கூடிய நல்ல கருத்துக்களை ஏற்காவிட்டால் தம் மூலமாகவும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் சொன்னார்கள்.

ஆகவே, அமைதியாக இருந்துவிட்டுப் போவதென்பது நன்மை பயக்கப் போவதில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஊடகங்கள், இயக்கங்கள், உலக அரங்கில் இயங்கும் பொதுநலத் தாபனங்கள் என்றிப்படி எல்லா மனித நேய அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு தத்தமது கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது, குறைந்த பட்சம் 1300 கோடி (1.3 பில்லியன்) மக்களில் இருந்து எத்தனை இலட்சம் தபாலட்டைகள் அனுப்ப முடியும்!

ஐக்கிய நாடுகள் சபையாகவிருக்கட்டும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமாகவிருக்கட்டும், G8, G21 இப்படி எந்தக் குழுவாகவிருக்கட்டும், ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கட்டும், ஏன், தனிப்பட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள், அவ்வந்நாடுகளின் பாராளுமன்றங்கள் என்றிப்படி அநியாயங்கள் பற்றித் தத்தம் கருத்துக்களை எத்தி வைக்க முடியும்; அப்படி எத்தி வைக்க வேண்டும்.

கிடைக்கக் கூடிய தபாலட்டைகளை எல்லாரும் குப்பைக் கூடையில் போட மாட்டார்கள். ஒரு பக்க நியாயங்களை மட்டும் கேட்டு தமது கருத்துக்களை அந்தப் பக்கத்திற்கு ஆதரவாக வைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் சிந்திக்க ஒரு சந்தர்ப்பத்தை இத்தபாலட்டைகள் உருவாக்கலாம்.

அநியாயங்கள் நடக்கும் போது வாய்மூடி அமைதி காப்பது அறிவின் அடையாளமாக இருக்க முடியாது; அது ஒரு பாவமாகத்தான் இருக்க முடியும்!

அக்கிரமங்களைப் பற்றிப் பேசுவது அவ்வக்கிரமங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகை வகுக்காமல் இருக்கலாம். ஆனால், அது பற்றிப் பேசாமல் இருப்பதால் அக்கிரமக்காரர்களின் கைகள் ஓங்குவதற்கு அது ஒரு தூண்டுகோளாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கண்டுகொள்ள யாரும் இல்லையென்னும் போது அநியாயக்காரன் சுதந்திரமாக அவனுக்கு வேண்டியதை எல்லாம் செய்யத் துணிந்து விடுவான்.

எனவே, இனியும் வாளாவிருக்காமல், அமைதியாக இருக்கும் பெரும்பான்மை தூசி தட்டிச் சிலிர்த்தெழ வேண்டும். அநியாயங்கள் எங்கு, யாருக்கு நடந்தாலும், அவை பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசப்பட்டால்தான் நியாயங்கள் நிறைந்த ஒரு எதிர் காலத்திற்கு உலகை இட்டுச் செல்ல முடியும்.

எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை……
(அல்-குர்ஆன்: ஸூரா அல் அன்ஃபால் – 8:53 வசனத்தின் ஒரு பகுதி)

ஆகவே, அற்புதங்கள் நடந்து அநியாயங்கள் அழியட்டும் என்று இருந்து விட முடியாது. இறைவனின் கட்டளை தெளிவானது. மனிதன் மனித நேய விரோதிகளை இனம் கண்டு அவனுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அப்போது ஒருபக்கச் சார்பின்றி உண்மை தெளிவு பெற வழியேற்படும்.

No comments:

Post a Comment