Wednesday, November 18, 2009

நீதி செலுத்துங்கள்!


 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்-குர்ஆன் ஸூரா அல்-மாயிதா= 5:8)
                                                                
நீதி இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மிக முக்கியமான சிறப்பு மிக்க உன்னதமான ஓர் அம்சம். அல்லாஹ் நீதியை நிலை நாட்டுங்கள் என்ற கட்டளையை அவனுடைய எச்சரிக்கையுடன் கூடவே நம்மீது விதித்திருப்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நீதி பற்றிய அல்லாஹ்வின் கட்டளைகள் மிகத் தெளிவாகவே உள்ளன. அதைப் பற்றி மிக உன்னிப்பாகச் சிந்திக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இன்றைய முஸ்லிம் சமுகம் இருக்கிறது.

உலகின் எக்கோணத்தை எடுத்துக் கொண்டாலும் அராஜகம், அநியாயம் தலைவிரித்தாடுவது கண்கூடு. முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள்! முஸ்லிமல்லாதவர்களும் அவ்வாறே அநியாயமாக இம்சிக்கப் படுகிறார்கள்.

எம்மதத்தவர்களாக, எவ்வினத்தவர்களாக இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் அடுத்தவருடைய உரிமையில் கை வைக்க உரிமையுண்டா?

இஸ்லாம் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்கின்றது. ஏன்? அது, ஒட்டுமொத்த மனித சமுகத்திற்கும் வழிகாட்டி! அல்லாஹ் அதை முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கவில்லை. இதை ஏனோ இன்று பலர் மறந்து விட்டார்கள்! அல்லது அவர்கள் மனித உணர்வுகளுக்கு மட்டும் ஆட்பட்டு அறிவுத்தெளிவற்று இருக்கின்றார்கள்.

ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் சொல்லியிருப்பது தெளிவில்லையா? ஒரு சமுகம் நமக்கிழைக்கைக் கூடிய அனர்த்தங்களால் அச்சமுகத்தின் மீதேற்படக் கூடிய விரோதம் நம்மை நீதமாக நடப்பதிலிருந்து வழிதவறி விடுவதற்குக் காரணியாகி விடக் கூடாது.

அவர்கள் நமது மக்களைத் தாக்குகின்ற காரணத்தினால் நாமும் கண்ணை மூடிக்கொண்டு அவர்களைத் தாக்குவதும் அப்படித் தாக்கப்படும் போது சாதாரண பொது மக்கள், பெண்கள், பிள்ளைகள், கடைத்தெருவுக்குச் சாமான் வாங்கப் போகின்றவர்கள், பாடசாலைக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கின்றோம்.

இவையெல்லாம் யுத்த எதிரியை கொன்றதாகத்தான் கருதப்படும் என்று இன்று அறிஞர்கள் சிலர் சொல்வைதைக் கேட்கின்றோம். தர்க்கங்களை வைத்து அவற்றை நியாயப்படுத்துவதையும் பார்க்கின்றோம். அவர்களின் இவ்வாறான கருத்துக்களைக் கண்மூடிப் பின்பற்றி அப்பாவிகளைக் கொன்று வீராப்புப் பேசும் ஒரு கூட்டம் உருவாகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இஸ்ரவேலர்களின் அராஜகமும், மனிதப் படுகொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல, இம்மாபாதகத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் அணிதிரண்டு போராட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அவர்கள் செய்யக்கூடிய பாதகச் செயல்களுக்கு நாமும் அதே பாதகச் செயல்களை அவர்கள் யஹூதிகள் என்ற ஒரே காரணத்துக்காக செய்ய முடியுமா என்பது சிந்தனைக்குரிய ஒரு விடயமே! ஏன் சிந்தனைக்குரிய விடய்மென்றால் மேற்குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளை தவிர வேறல்ல!

அவவறிஞர்களும் மேடைப் பேச்சாளர்கள் சிலரும் உணர்வு வேகத்தால் கொதித்துப் போயிருக்கும் மக்களுக்கு உபதேசம் செய்கின்றார்கள்.

கோபத்திலாகி பழி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசத்திற்கு உள்ளானவர்களின் உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்றார்கள். அதனால் அவர்களுடைய இப்பேச்சுக்களும் இவ்வாரான உணர்வூட்டல்களும் இஸ்லாமிய அணுகு முறைகளுக்குப் பெரும் பாதகமாகி வருவதை அவதானிக்கின்றார்களில்லை.

மேற்குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் மாறுபட்ட உபதேசங்கள் இவை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

சந்தேகமேயில்லை! இஸ்லாம் எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளை, பெண்களை, யுத்த களத்திலல்லாத சாதாரண மனிதனைக் கொலை செயவதற்கு அனுமதிக்கவில்லை.

எங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கின்றது என்பதற்காக அதே அநீதியை அவ்வநியாயத்தோடு சம்பந்தப்படாத ஒரு பொது மகனை அழிப்பதன் மூலம் நிவர்த்திக்கப்படுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
(அல்-குர்ஆன் – ஸூரா பனூ இஸ்ராயீல் 17:15)

இஸ்லாம் எந்தக் கட்டத்திலும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த போர்களிலும் அதன் பின்னால் நல்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்தில் நடந்த யுத்தங்களிலும் அப்படி நடந்ததற்கான் எந்தச் சான்றும் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களில் பலர் அராஜகம் செய்கின்றார்கள் என்பதற்காக அவ்வராஜகத்தின் மூலமே ஏன் முஸ்லிம்கலள் பதிலடி கொடுக்கக் கூடாது என்பதுதான் இத்தலைவர்கள், அறிஞர்களின் வாதம். இவ்வாறு வாதம் செய்து உசுப்பி விடப்படும் போராளிகள் யாரைக் கொல்கின்றார்கள், அராஜகம் செய்தவர்களையா? அல்ல, அந்தக் கொடுமைகளுடன் சம்பந்தப் படாதவர்களைத்தான் தாக்குகின்றார்கள்.

யாரோ செய்த கொடுமைக்கு யாருக்கோ தண்டனை!

மேலே மேற்கோள் காட்டிய அல்-குர்ஆன் வசனம் அல்லாஹ்வின் வாக்கு என்பதை ஏன் மறந்து விடுகின்றார்கள்? இந்த உலகத்தில் அந்த அல்லாஹ்வின் கட்டளைகளப் பின்பற்றுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாதவர்களுக்குத் தண்டனை கொடுக்க முஸ்லிம்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

சடுதியாக வரும் உணர்வு வேகத்திற்கு மட்டும் ஆட்பட்டு தீர்ப்புகள் கொடுக்கப் படுமானால் இன்று ஒரு மனிதன் தன்னுடைய இனத்துக்கு, தன்னுடைய குடும்பத்துக்கு, தனக்கு, சார்பாக நீதி செலுத்தலாம் என்றாகிவிடும்.


இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்-குர்ஆன் – ஸூரா அன்னிஸா – 4:58)

இவவசனத்திலே அல்லாஹ் சொல்வதை மறைக்காமல் நாம் வெளிக் கொணர்வோமானால், சிந்திக்கும் மக்களுக்கு அது ஒரு பெரும் அருட்கொடையாகத்தான் இருக்கும். அல்லாஹ் (பைனன்னாஸ்) மனிதர்களுக்கிடையில் என்ற சொல்லைத்தான் பிரயோகித்திருக்கிறான். (பைனல்முஸ்லிமூன் என்றோ பைனல்முஃமினூன்) முஸ்லிம்களுக்கிடையில் என்றோ முஃமின்களுக்கிடையில் என்றோ குறிப்பிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹராமான இரத்தத்தத் தொடாத வரை (யாரையும் அநியாயமாகக் கொலை செய்யாத வரை) ஒரு முஃமின் – நம்பிக்கையாளன் – தனது தீனின் விஸ்தீரனத்தில் (தம் ரப்பின் ரஹ்மத்தின் ஆதரவில்) ஆகிவிடுவார்.
(ஆதார நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் இல. 220)

குற்றமிழைத்த ஒருவனின் இனத்தைச் சேர்ந்த காரணத்திற்காக மற்றொருவனைத் தண்டிக்க எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறிய அறிவிப்பில் வருவது மிகத் தெளிவானது. அப்பவியான ஒரு மனிதனைக் கொல்வது ஹராம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

“எங்கள் இனத்தவர்களைக் கொல்கின்றார்கள். செய்தவனைத் தேடிப்பிடிக்க முடியாது. அவன் உலகத்தில் பொது நிறுவனங்களைத தன்னாதிக்கத்திற்குள் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றான். நவீன ஆயுதங்களின் ஒட்டு மொத்த உரிமையாளன் அவன். அவனைத் தண்டிக்க, அவனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்த எங்களால் முடயாது. எமக்கு அதற்கான சக்தியில்லை. ஆகவே, எப்படியோ ஒரு வகையில் அவனுக்குப் பாடம் புகட்டியாக வேண்டும். எனவே, நாமும் அவனுடைய இனத்தைச் சேர்ந்தவனை நம்மிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொலை செய்வது கொலையாக ஆகாது. அப்படி நமது தாக்குதலில் யார் இறந்தாலும் அவ்விறப்பு போர்க்களத்தில் எதிரியின் இழப்புத்தான்.”

இப்படிப் பேசும் அறிஞர்களும், சமூக நலன் விரும்பிகளும் நம்மிடையே இல்லாமலில்லை.

அவர்களிடம் ஒரு வினயமான வேண்டுகோள்.

தயவு செய்து அதற்கான அல்-குர் ஆன், அல்-ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டுங்கள். அப்படிக் காட்டுவது என்னைப் போன்றவர்கள் அறிந்து திருந்துவதற்கு அது பேருதவியாக இருக்கும்.

ஆகவே, இன்று சர்வதேச அளவில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆகிய இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறிழைக்கக் கூடிய தலைவர்களின் அராஜகங்களை எதிர்க்க வேண்டும். அந்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக அநியாயக்காரர்கள் என்று விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித விமர்சனங்களுக்குப் பயந்து நீதி செலுத்துவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள ஒரு முஸ்லிம்முக்கு அனுமதியில்லை. இதைத்தான் மேற்காட்டப்பட்டுள்ள அல்-குர் ஆன் வசனங்கள் நமக்குப் போத்க்கும் பாடம். அதுதான் அல்லாஹ்வின் கட்டளை.

நீதி நிலை நிறுத்தப்படுவது தத்ரூபமாகத் தெரியும் போதுதான் அல்லாஹ்வின் மார்க்கம் மனித இனத்துக்குப் பொதுவானது என்ற நிலைப்பாடு உறுதியாக நிலை நிறுத்தப்படும். அதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தமந்திருக்கிறார்கள். புதிதாக புகுத்துவதற்கு அங்கே எதுவும் குறைபாடுகள் இல்லை.

உணர்ச்சி ததும்பப் பேசுவதன் மூலம் மட்டும் இஸ்லாமிய சகோதரத்துவத்தை எப்படி ஏற்படுத்த முடியாதோ அப்படித்தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறி அவனுடைய் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலைப் புறக்கணித்து அறிஞர்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நீதியை நிலை நாட்ட முடியாது.

அல்-குர்ஆனும் அல்-ஹதீஸும் மட்டுமே நீதி நிலை நாட்டப்பட வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன் தனிப்பட்ட வாழ்விலும் கூட தன்னுடைய் உடல்ரீதியாக அதற்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பது நீதியை நிலை நாட்டுவதாகும். அப்போதுதான் அவன் உடல், மனோரீதியாக தனக்குத்தானே அநியாயம் இழைக்காதவனாகலாம். ஆன்மிகத்தைத் தேடி உடலை வருத்திக் கொள்ளும் கடப்பாடு இஸ்லாத்தில் இல்லை.

இஸ்லாமிய நடைமுறைகள், வழிகாட்டல்கள், செயல்கள், வணக்கங்கள் யாவற்றிலும் நீதியின் அடையாளம் ஓங்கி பளிச்சென்று விளக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளதைத் தெளிவான சிந்தனையுள்ளவர்கள் காணலாம், உணரலாம்.

Ø      கூட்டுத் தொழுகையின் போதுள்ள வரிசை. அதில் ஒருவர் மற்றவரை விட விசேடப் படுத்தப்பட்டு முன்னுரிமை பெற முடியாது.
Ø      ஏழை, பணக்காரன், ஆள்பவன், ஆளப்படுபவன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், அரபி, அரபியல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.
Ø      ஆட்சியாளனுக்கும் ஆளப்படுபவனுக்குமிடையில் நீதி செலுத்தும் போது எந்தப் பாகுபாடும் இல்லை.
Ø      கூட்டாகக் குற்றமிழைத்துவிட்டு அரசு தரப்புச் சாட்சியாக மாறி குற்றமற்றவன் என்ற நிலையை அடைய இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
Ø      குற்றமிழைத்தவன் குற்றத்தை உணர்ந்து திருந்தும் போது அல்லாஹ் நாடினால அவனுக்கு மன்னிப்பு அல்லாஹ்வின் பக்கமேயுள்ளது.
Ø      குடும்பத்தில் ஒரு பிள்ளையைவிட மற்றொரு பிள்ளையை விசேடப்படுத்திக் கவனிக்க முடியாது.

எந்த விடயமானாலும் நடவடிக்கையானாலும் முஸ்லிம்கள் நிலையான நீதியின் பக்கமே இருக்க வேண்டும். அது குடும்ப அங்கத்தவர்கள் சம்பந்தப் பட்டவையாயிருந்தாலும் சரியே; சம்பந்தப் பட்டவர் அதிக ஆதரவுக்கும் நேசத்துக்கும் உட்பட்டவராக இருந்தாலும் சரியே; மிகவும் விரும்பக்கூடிய ஒரு விடயமாக இருந்தாலும் சரியே; சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரியே!

அநியாயம் நடந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டால் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தைக் கூட விட்டு விடுவதுதான் மிகவும் நல்லது.

அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தினால் முஸ்லிம் அல்லாதோருக்குப் பாதிப்போ அல்லது அச்சுறுத்தலோ உள்ளது என்று முஸ்லிமல்லாதோர் மத்தியில் சந்தேகமுண்டாகி அதனால் இருதரப்பார்க்குமிடையில் பிரச்சினையுண்டாகும் என்ற நிலை உருவாகும் என்றிருந்தால் அச்சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப் பட்டவைகள் தடுக்கப் பட்டவையாகும். – இது ‘ஷரீஆ’வின் ஒரு முக்கியமான மூலக் கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்:
நீதி, நன்மை, மற்றும் உறவினறுக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக் கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அந்நஹ்ல் – 16:90)

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 
(அல்-குர்ஆன்: ஸூரா அன்னிஸா – 4:135)

இப்படி நீதி செலுத்துதல் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்டிருக்கக் கூடிய கட்டளைகள் ஏராளம்.

முஸ்லிம்கள், ஆட்சியதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாத்தின் கொடியைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவர்கள் என்பதைக் கண்ணிமைப் பொழுதேனும் மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்துவிடாமல் இருப்பதற்கு முஸ்லிம்களுக்குள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் நம்பிக்கை பரிபூரணமாக இருக்க வேண்டும்; அப்படியானால்தான் இறையச்சம் உள்ளத்திலே வேறூன்றி நிற்கும்.

அப்படி ஏகத்துவத்தின் நம்பிக்கை முழுமை பெற்று இறையச்சம் வேறூன்றும் போதுதான் நம் மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவம் சந்தேகத்திற்கிடமின்றி இறுக்கம் பெறும். சகோதரத்துவத்தின் அவ்விறுக்கத்தில் நீதி நிறுவப்படும் போது நிச்சயமாக முஸ்லிம்கள் மற்றோருக்கு முன்மாதிரியான ஒரு சமுகம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.


குறிப்பு: அல்-குர் ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர் ஆன் தர்ஜுமவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளரகளான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.


1 comment:

  1. இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!

    ReplyDelete